எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்
நாடகத்தில் பரிசோதனைகளைச் செய்து பார்க்க, நம் மத்தியில் சூழல் இல்லாதிருப்பதுடன் அதற்கான பயிற்சி பெற்ற நிரந்தர குழுவோ, இடமோ வசதிகளோ இல்லாதிருப்பதும் மிகப் பெரும் குறையாகும். இவ்வகையில் எமக்கு நம்பிக்கை தருவன பாடசாலைகள் மாத்திரமே. சிறப்பாக உயர்தரப் பாடசாலைகளில் கர்னாடக இசை, நடனம் ஆகியவற்றில் ஓரளவு பயிற்சிபெற்ற மாணாக்கர் இருப்பதுடன் பாடசாலை ஒரு ஒழுங்கமைப்புள்ள நிறுவனமாக இருப்பதானாலும் எமது பரிசோதனைச் சாலைகளாக அவையே இப்போது அமைகின்றன. பெரும் தொகையாக நடிப்பதற்கு - நாடக ஆர்வத்துடன் பலர் ஈடுபடுவதற்குப் பாடசாலைகளை விட வேறிடம் இல்லை.
பரிசோதனை முயற்சிகளுக்கு இவ்விதம் ஒரு வகையில் பாடசாலைகள் உதவியபோதும் ஒரு சுதந்திரமான பரிசோதனை முயற்சிகளுக்கு அவை இடம் தரா. பாடசாலைகளின் விதி முறைகள், நேர ஒழுங்குகள், பங்கு கொள்ளும் மாணாக்கரின் மனோவளர்ச்சி, அதிபர்மாரின் எண்ணப் பாங்கு என்பன கட்டுப்படுத்தும் சில காரணிகளாகும். இந் நாடகங்கள் இத்தகைய கட்டுப்பாடுகளுக்குள் இயைந்து உருவானவையே. இடைநிலைப் பாடசாலை மாணாக்கரை மனத்திற் கொண்டும் எழுதப்பட்டவையே. இந் நாடகங்களை கட்புலப்படுத்த யாழ்/சுண்டிக்குளி மகளிர் கல்லூரியும் யாழ்/இந்து மகளிர் கல்லூரியும் எமக்கு ஆய்வுக் கூடங்களாயின. இரண்டும் இருவேறு மரபில் உருவான பாடசாலைகள். யாழ்/சுண்டிக்குளி அதிபர் திருமதி L.P. ஜெயவீரசிங்கமும், யாழ்-இந்து மகளிர் கல்லூரி அதிபர் மறைந்த செல்வி ப. இராமனாதன் அவர்களும் எனக்குப் பெரிதும் உதவினார்கள். என் இயல்பறிந்த அவர்கள் வழமையான அதிபர்கட்குரிய இயல்போடு என்னைக் கட்டுப்படுத்தவில்லை. இதற்கு அவர்கட்கென் நன்றி.
(நாடகம் ஒரு கட்புலக்கலையானமையினால் அங்குக் காட்சிப்படுத்தலே பெரும் இடத்தைப் பிடிக்கின்றது. இக் காட்சிப்படுத்தலுக்குத் தேவையான அசைவுகளை - விசேடமாக நிருத்திய நாடகங்களில் - நான் எமது பாரம்பரிய நடன வடிவங்களிலிருந்தே தெரிந்தெடுக்கிறேன். பலபடிவங்களையும் அளவோடு கலந்து ஒரு புதிய பொருளைத் தோற்றுவிக்க முயல்கின்றேன். ஈழத்துத் தமிழருக்கென்ற ஒரு தேசிய நாடக வடிவைத் தேடும் அல்லது உருவாக்கும் முயற்சி அது. இதில் இன்னும் பல நாடகக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் என் நண்பர்களாயிருப்பது என் அதிர்ஷ்டம். எமது பாரம்பரியக் கலைகள் மீதும் - அதன் வீரியத்தின் மீதும் நான் வைத்துள்ள அறிவு ரீதியானதும் உணர்வு ரீதியானதுமான நம்பிக்கையே இம் முயற்சிகளுக்கெல்லாம் ஆதார சுருதி. இவற்றின் மூலம் ஈழத்துத் தமிழரின் தனித்துவமான கலாசாரங்கள் வெளிக்கொணரப்படவேண்டும். ஒரு உயர்நிலையில் அவை கற்றோராலும் மற்றோராலும் வெளியிலும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் ஒரு காரணமாகும்.
பாடசாலை மாணாக்கருடன் அதிலும் இடைநிலைப் பாடசாலை மாணாக்கருடன் இணைந்து நாடகம் உருவாக்குவது நல்ல அனுபவம். ஆரம்பப் பாடசாலை மாணாக்கருடனிணைந்து சிறுவர் நாடகங்களை உருவாக்கிய என் அனுபவங்கள் பற்றி, தப்பி வந்த தாடி ஆடு-சிறுவர் நாடக என்னுரையிற் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இவ்விடை நிலைப் பாடசாலை அனுபவங்கள் வேறானவை. நாடகம் பழக ஆரம்பிக்குமுன் அதற்கான சில பயிற்சிகளில் ஆரம்ப நாட்கள் கழிந்தன. நாடகத்திற்குப் பயிற்சியோ? என்று அவர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியத்துடன் கேட்டனர். எனினும் இயல்பான கீழ்ப்படிவுடனும், ஒழுங்குடனும் சொன்னதைச் செய்தனர். பயிற்சிகள் மெல்ல மெல்ல அவர்களின் இயல்பான திறன்களை அகலித்தன. அவர்களின் உள்திறன்கள் பலவற்றைத் தயக்கமயக்கமின்றி வெளிக்கொணரவும் உதவின. பயிற்சிகள் நல்ல அனுபவங்களாகவும் அமைந்தன.
அம்மாணாக்கரை ஓர் ஒழுங்கமைவுக்குள் வைத்து, சுலபமாக ஒரு மேடை நிகழ்வை உருவாக்கிவிட முடிந்தது. அப்போதெல்லாம் பயிற்சி பெற்ற ஒரு நாடகக் குழு நிரந்தரமாக எம்மிடம் இல்லையே என்ற குறை மனதை அரிக்கும்.
நாடகம், மேடையிலேதான் தன் முழுமையை அடைகிறது. எழுத்துருவில் அதன் முழுப் பரிமாணத்தையும் காண முடியாது. எனினும் கூடுமான வரையில் மேடைக் குறிப்புகளும், மேடை பற்றிய விளக்கங்களும் இங்குத் தரப்பட்டுள்ளன. கற்பனை ஆற்றலுள்ள வாசகர் தம் மனமாகிய மேடையில், வாசிப்பினூடாக அதனைக் காண முயலலாம்.
இந்நாடகங்கள் மேடையேறியபோது பத்திரிகைகளில் இந் நாடகங்கள் பற்றிப் பல அபிப்பிராயங்கள் எழுதப்பட்டன. நாடகத்தின் பின்னால் இந்நூலில் அவை தரப்படுகின்றன. இந்நாடகங்களின் மேடையேற்றம் பற்றியும், அவை ரசிகரிடம் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அறிந்துகொள்ள அவை உங்களுக்கு உதவக்கூடும்.
- ஈழத் தமிழ் நாடகரும் பேராசிரியருமான மௌனகுரு தனது "மூன்று நாடகங்கள்" நூலில் எழுதிய முன்னுரையிலிருந்து (1987).ந்து (1987)
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகங்கள், பாடசாலை, நாடகக், நாடகம், யாழ், மூன்று, மகளிர், எமது, நாடக, எனது, பாடசாலைகள், பெரும், கட்டுரைகள், கலைகள், கலைக், நல்ல, சிறுவர், மாணாக்கருடன், ஈழத்துத், மீதும், பற்றியும், அனுபவங்கள், நான், இயல்பான, எனினும், மெல்ல, மேடை, அவர்களின், பயிற்சிகள், முயற்சிகளுக்கு, பயிற்சி, பெற்ற, அதற்கான, நடனம், drama, arts, எமக்கு, பரிசோதனை, கல்லூரியும், இந்து, சுண்டிக்குளி, நாடகங்களை, இடைநிலைப், அதிபர்