எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்
எனது மூன்று நாடகங்கள்
சி. மௌனகுரு
இம் மூன்று நாடகங்களும் ஏற்கனவே ஒரு நூலில் வேறு பல நாடகங்களுடன் சேர்ந்து வெளியானவை. இவற்றைத் தனியாக வெளியிடுவதற்குக் காரணங்களுண்டு.
ஒன்று, இவற்றை ஒன்றுசேர்த்துப் படித்து, இவற்றின் பொருள், தன்மை, வடிவம் என்பன பற்றிய திரட்சியான ஒரு கருத்தைச் சுவைஞர் பெறலாம்.
இன்னொன்று, இந்த நாடகங்கள் பற்றியும், அவை தயாரிக்கப்பட்டபோது நான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் உங்களுடன் உரையாட நான் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாம்.
சங்கீதம், நடனம் என்பன சாஸ்திர ரீதியாக வளர்ந்த அளவு, ஈழத்துத் தமிழரிடையே நாடகம் வளர்ந்துள்ளது என்று கூற முடியாதுள்ளது. ஆனால் சங்கீதம் நடனத் துறைகளிற் காணமுடியாத வகையில் புதிய ஆக்கங்களை உருவாக்கும் முயற்சி அல்லது ஒரு தேடல் நாடகம், ஓவியம், இலக்கியம் ஆகிய கலைத் துறைகளிற்றான் ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாடகக் கலைஞனும் ஓவிய, சிற்பக் கலைஞனைப் போலவே, தன் கலைப் படைப்பு கலைஞரின் பார்வைக்குச் செல்லும் வரையும் - சென்ற பின்பும் தன் கலைப் படைப்புப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டேயிருக்கிறான்.
ஓவியத்தில் ஒரு கோடு, ஒரு வர்ணச் சேர்க்கை ஓவியத்திற்கு அற்புதமான உயிரைத் தந்து விடுவதுபோல, கட்புலக் கலையான நாடகத்திலும் ஓர் அசைவ ஒரு மேடை உருவாக்கம் (stage formation) நடிகர்களின் மேடை நிலை என்பன நாடகத்திற்குப் பிரமாதமான உயிர்ப்பினைத் தந்து விடுகின்றன. இவை பற்றி ஒவ்வொரு ஒத்திகையின் பின்பும் நாடக நெறியாளன் மணிக்கணக்கிற் சிந்திக்கின்றான்.
அவனுடைய படைப்பாக்க நடைமுறை (creative process) பற்றியோ, அவன் கலை உருவாக்க முயற்சி பற்றியோ எமது சுவைஞர்களோ விமர்சகர்களோ அத்துணை கவனத்திற் கொள்வதில்லை. 'நாடகம் தானே வெகு சுலபமாக அதனைச் செய்து விடலாம்' என்று எண்ணுகிற ஒரு குழந்தை மனோபாவம் நம் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்திருப்பதும், நாடகம் பற்றிய காத்திரமான சிந்தனைகள் நம் மத்தியில் இல்லாதிருப்பதும் இதற்கான காரணங்களாயிருப்பதுடன் நாடக விமர்சனம் நம்மிடையே வளராமையும் இதற்கான காரணங்களாகும்.
அண்மைக் காலமாக இந்நிலை, ஒரு சிலர் மத்தியிலாவது மாறி வருவது மகிழ்ச்சி தருகிறது. இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் நாடகம் பற்றிக் காத்திரமாகச் சிந்திப்பதும், பயிற்சி நெறியாக அதனைப் பயில நினைப்பதுமான சூழல் உருவாகியுள்ளது. உயர்தர வகுப்புக்கு நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாக இருப்பதுடன், பல்கலைக் கழக மட்டத்திலும் அது பயிற்றுவிக்கப் படுகிறது. இவையெல்லாம் நாடகத்தில் தீவிர ஈடுபாடு மிக்க கலைஞர்கட்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தருவனவாம்.
ஒரு கலைஞன் - சிறப்பாக நாடகக் கலைஞன் தன் படைப்பு பற்றி நல்லது கூடாது என்ற அபிப்ராயங்களைப் பொதுவாக எதிர்பார்ப்பதில்லை. மாறாக, தன் படைப்பு நுட்பங்களை, கலையாக்க முறையினை, கலைஞர்கள், விமர்சகர்கள் கண்டுபிடிக்கிறார்களா? என்பதிலும் அப்படைப்புதான் எதிர்பார்த்ததைவிட வேறும் பல புதிய எல்லைகளுக்குச் சுவைஞர்களை இட்டுச் செல்லுகிறதா என்பதை அறிவதிலுமே மிக ஆவலாயிருப்பான். எனக்கும் இத்தகைய ஆவல்களுண்டு. எனவேதான் என்னுரையில்,
(அ) இந் நாடகங்கள் பற்றியும்
(ஆ) எழுந்த சூழ்நிலைகள் பற்றியும்
(இ) இவற்றின் மேடையாக்கம் பற்றியும் உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், நாடகங்கள், பற்றியும், நாடகக், மூன்று, எனது, படைப்பு, கட்டுரைகள், என்பன, கலைக், மேடை, பின்பும், செய்து, தந்து, மத்தியில், சிலர், கலைஞன், இதற்கான, பற்றியோ, நாடக, பற்றி, நான், நடனம், ஓவியம், கலைகள், arts, drama, இவற்றின், பற்றிய, முயற்சி, சங்கீதம், உரையாட, உங்களுடன், கலைப்