எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள்
* மீண்டும் நாடகத்திற்குத் திரும்பலாம். ஓர் அடிப்படையான கேள்வி நாடக நடிகர்களுக்குப் பயிற்சி ஏன்?
* என்னைப் பொறுத்தவரையில், நடிகர்கள் ஒரு மந்தைக் கூட்டம் மாதிரி வசனங்களை ஒப்புவிக்காமல், ஒவ்வொருவரும் தன் ஆளுமைக்கு ஏற்பவும் தேவைக்கேற்பவும் பயிற்சி பெற வேண்டும். என்னுடைய பயிற்சியில் சத்திய உணர்வு இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறேன். அதாவது பொய்மையான அணுகுமுறை அறவே அகற்றப்பட வேண்டும். இதற்கு ஒரே வழி, நடிகன் தன் பலத்தை அறிந்து பலவீனங்களை அறிந்து தன்னைப் புரிந்துகொள்வது அவசியம். அதற்கேற்ப மூச்சுப் பயிற்சி, அசைவுப் பயிற்சி, சுயபிரக்ஞைப் பயிற்சி போன்றவற்றை முழுமையாக அவன் பெற வேண்டும். அப்படிப் பெறுகிற நேரம் அகங்காரம் அழிந்து போகும். எளிமை மேம்படும். அதிலிருந்து சிறப்பு உதயமாகும்.
* தமிழ் வழிப் பயிற்சி என்று சொல்கிறீர்களே அது என்ன?
* 'உடலில் மூலம்' என்று நாம் எதைத் தமிழில் கூறுகிறோமோ, அந்த உறுப்பிலிருந்து நம் மூச்சைப் பிறப்பிக்கலாம் என்பதை உணர்த்துவது. தமிழில் மூலம் என்பதே அதன் அர்த்தத்தை உணர்த்துகிறது. மூலமும் உந்தியும் மூச்சாலும் தளர்வாலும் இணைக்கப்படும்போது, அந்த முக்கலில் விதானம் பலமடையும். அதிலிருந்து மூச்சையும் மனஉறுதியையும் வளர்க்கலாம் என்பது சித்தர்கள் காலங்காலமாகச் சொல்லி வரும் உண்மை. இதை அடிப்படையாக வைத்து என் ஆய்வுகளை மேற்கொண்டேன். இதனால் உடலில் பல உள்ளார்ந்த நோய்கள் கூடக் குணமடைவதைக் கண்டோம். இப்போது தமிழகம் வந்த வேளையில் சில சித்த யோகிகளோடு உரையாடியபோது, தங்கள் மூதாதையர் இவற்றைக் கையாண்டதை அவர்கள் தெரிவித்தார்கள். மூச்சை அடக்குதல் தமிழ்நாட்டில் காலங்காலமாக நிலவுகிறது. முரட்டுத்தனமாக அல்லாமல் ஆரோக்கியமாக எப்படிப் பயன்படுத்துவது என்பதை ஐரோப்பிய நாடகப் பட்டறைகளில் உதாரண உபதேசங்களுடன் நிறுவி, தமிழ் மக்களிடையே காலங்காலமாக நிலவி வரும் உடல் கட்டுப்பாட்டை, உறுதியாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் வெற்றி காணவும் முடிந்தது. மேலை நாட்டவர்கள் தங்கள் நாட்டின் நாடக முயற்சிகளில் புதுமைகளைப் பற்றிப் பேசும்போது தமிழ் நாடக முயற்சிகளில் இவை எவ்வளவோ பழமையானவை என்பதை உதாரணங்களோடு எடுத்துக்காட்டி, அவர்களைத் திகைக்க வைக்கவும் முடிகிறது. ஆழமாக வேராடிய தமிழனின் ஒரு கடுகளவு மூளையாக, மேற்கேயே இருந்து எங்கள் கருத்தை உணர்த்துவது எனக்கு மனநிறைவாக இருக்கிறது.
* எந்த மாதிரியான நாடக முயற்சிகளைத் தற்போது மேற்கொள்கிறீர்கள்?
* ஃபோரம் தியேட்டர் (Forum Theatre) என்பதை முழுமையாகப் பயன்படுத்தினோம். பிறகு இன்விசிபிள், அதாவது கண்ணுக்குத் தெரியாத (Invisible Theatre) அரங்கை எங்களின் வடிவத்தில் காட்டினோம். இப்போது இன்ஸ்டண்ட் தியேட்டர் என்கிற உடனடி அரங்கைக் கையாள்கிறோம். இதைப் பயிற்சி பெற்ற நடிகர்களைக் கொண்டு உடனே செய்ய முடிகிறது. உதாரணமாக, ஈழத்தில் ஒரு சம்பவம் நடக்கும்போது, கடிதம் மூலம் அதை அறிந்து நடிகர்களுடன் பேசி அன்றே தயாரிக்கிறோம். அப்படித் தமிழகத்திலிருந்து ஈழ மக்களை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் சம்பவத்தை, அன்றே நடந்த கலை விழாவில் 'களரி ஓர் அரங்க இயக்கம்' நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. உடனே பிறந்த பாடலும் அந்த நாடகத்திலும் இடம்பெற்றது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த மாதிரி செய்யப்படும் 'உடனடி அரங்கு' ஒரு வளமிக்க நாடகக் குழுவின் எதிர்கால அரங்காக அமையும். ஆனால் பயிற்சியில்லாமல் அதைக் கையாண்டால் குரங்கின் கை மாலையாகச் சீரழியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள், பயிற்சி, நாடக, நாடகக், நாடகப், என்பதை, அறிந்து, தமிழ், அந்த, மூலம், எனது, வேண்டும், கலைக், பார்வை, கட்டுரைகள், தியேட்டர், முடிகிறது, காலங்காலமாக, முயற்சிகளில், அன்றே, உடனடி, தங்கள், கொண்டு, theatre, உடனே, நடிகர்களைக், உடலில், மாதிரி, கலைகள், arts, drama, அதாவது, அதிலிருந்து, வரும், உணர்த்துவது, தமிழில், இப்போது