எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள்
* லண்டனிலிருந்து வந்து தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு மேல் இருக்கிறீர்கள். பல நாடகங்களைக் கண்டீர்கள். பல நாடகக் கலைஞர்களைச் சந்தித்தீர்கள். இங்குள்ள சூழல் எப்படித் தெரிகிறது?
* நான் தமிழ்நாட்டுக்கு வருவது முதல் முறை இது. இங்கு வருவதற்கு முன்பு நாடகம் பற்றி சே. ராமானுஜம், மு.ராமசாமி, ந.முத்துசாமி, ஞாநி, கோமல் சுவாமிநாதன் இப்படிப்பட்டவர்களின் எழுத்துக்கள்தான் எனது சாளரமாக இருந்தன. வந்த நாளன்றே நாடகவெளி நடத்திய நாடக விழா. அதில் முதல் நாளன்று முருகப்பூபதி என்ற பாண்டி நாடகப் பள்ளி மாணவரின் 'சரித்திரத்தில் அதீத மியூசியம்' என்ற நாடகம் பார்த்தேன். அது ஒரு நெறியாட்சி சிறப்பமைந்த நாடகம். மறுநாள் வேலு சரவணனின் 'கொடியரளி' என்ற நேர்த்தியான நாடகத்தைக் கண்டேன். வேறொரு இடத்தில் பிரசன்னா ராமஸ்வாமி ஓர் அரங்க உணர்வோடு நெறிப்படுத்திய அம்பையின் சிறுகதையை மேடைப்படுத்திய நாடகம். பிறகு சென்னைக் கலைக் குழுவினரின் நாடகங்களைப் பகல் நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களோடு ஓர் அலுவலகக் கூடத்திற்குள் கண்டேன். கட்டிடத்தின் வெளிப்பகுதியிலிருந்து மேடைக்கு நடிகர்களை மேள தாளத்தோடு அழைத்து வந்தார்கள். நடிகர்கள் ஓடி அனுபவித்து நடித்தார்கள். தாள-லயம், ஒருவரோடு ஒருவர் இணைந்து ஊடாடிய விதம் ஆகியன ஒரு காத்திரமான வளர்ச்சியைக் காட்டியது. கல்வி அறிவு வகையில் அரசு அதிகம் அக்கறை எடுக்காத நாட்டில் சமூகப் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும்போது, அதிலும் தெரு, சந்தைகளில் நடத்திக் காட்டும்போது, நாடகம் ஒரு சமூகக் கருவியாக அல்ல பலமான ஆயுதமாக மாறுகிறது. இதனால் நாடகத்திற்கு ஒரு கௌரவம் கிடைக்கிறது.
பிறகு சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் அரசு, மங்கை, இவர்களின் ஏற்பாட்டில் கீழ்பெருமாநல்லூர் என்ற குக்கிராமத்தில் முழு இரவு கூத்து பார்க்கச் சென்றேன். கூத்தின் ஆட்ட வடிவங்கள் என்னைத் திகைக்க வைத்தன. வட்டமும் சதுரமும் நட்சத்திரமும் குட்டிக்கரணமும் சூழல் கரணங்களுடன் கொண்ட அசைவுகள் பிரம்மாண்டமாக இருந்தன. இவற்றை நகர்ப்புறத்தினரும் பார்க்கும் வண்ணம் அதன் சிறப்பு - கட்டுக்குலையா வண்ணம் நேரத்தைக் குறுக்கி மேடையேற்றுகிறார்கள் இல்லை என்பது விசனத்தைத் தருகிறது.
ஈழத்தில் பேரா.சு.வித்தியானந்தம், சிவத்தம்பி, மௌனகுரு மற்றும் பலர் செய்த பணியை, ந. முத்துசாமியும் நாடகம் படைத்து ஒரு புதுப்பாதை காட்டும் பல்கலை அரங்கமும் ஒரு சமுதாயப் பணியாகவும், ஒரு தமிழ்ப் பணியாகவும் நினைத்து ஏன் ஒன்றுபட்டு இயங்கக் கூடாது என்பது எனது மன்றாட்டமான கேள்வி. தமிழ் நாட்டிலிருந்து மேலை நாடுகளுக்கு வருகிற நாடகங்கள் என்று கூறப்படுபவை அரங்க உணர்வோ, ஒரு சீரான பாத்திரப்புனைவோ இல்லாமல், நட்டமரமாய் நடிகர்கள் நின்று நிகழ்த்தும் சிரிப்புத் தோரண வாந்திகள். தவறிப் போய் வெளிநாட்டார் அங்குப் படியேறிப் பார்த்து, 'இவைதான் தமிழ் நாடகமா?' என்று எம்மைத் தலைகுனிய வைக்கும் சிறுமை நிலையில் துயரப்பட்டு இங்கே வந்தேன். தரமான நாடகங்களைப் பார்த்தேன். எனக்குள் ஒரு புளகாங்கிதம் உண்டாயிற்று. ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறை, உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் வகையில் பெரிய தயாரிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்பது என் அவா. அவர்கள் பயிற்சியைப் பொறுத்தவரை தொட்டத் தொட்டமாக நிறையப் பெற்றுள்ளார்கள். பார்ப்பதற்குப் பெருமையாக இருக்கிறது. காழ்ப்புணர்வற்ற ஒரு கருத்துப் பொறாமையாகவும் இருக்கிறது. ஒரு நாடகம் நீண்டகால தயாரிப்பில் இருக்க வேண்டும் என்பது எனது பிடிவாதம். ஒரு முறையாக வளர்க்கப்பட வேண்டும். வெவ்வேறு நிலையிலுள்ள ஒரு கர்ப்பிணித் தாயைப் போல, கூத்துப் பட்டறையும் தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்துச் சமகாலப் பிரச்சினைகளை, தமிழ் மரபில் வேரூன்றிய பல்வேறு கலை வடிவங்கள் மூலம் உலகுக்கு எடுத்துக்காட்டக்கூடிய வகையில், ஒரு நேர்த்தியான தயாரிப்பை உலகத்திற்குத் தர வேண்டும். உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள், குறிப்பாக ஈழத் தமிழர்கள் அத்தகைய முயற்சிகளுக்கு நிச்சயமாக உலகெங்கிலும் மேடைகள் தருவார்கள். அதுவே எம்மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமையும். அது எனது ஆவல்; நம்பிக்கையும்கூட.
(சந்திப்பு:சி.அண்ணாமலை)
நன்றி:சுபமங்களா இதழ்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், எனது, நாடகப், என்பது, கலைக், வேண்டும், நாடகக், தமிழ், வகையில், கட்டுரைகள், பார்வை, எடுத்துச், பிரச்சினைகளை, அரசு, வண்ணம், தமிழர்கள், பணியாகவும், இருக்கிறது, வடிவங்கள், அரங்க, சூழல், கலைகள், arts, drama, இருந்தன, பார்த்தேன், நாடகங்களைப், பிறகு, கண்டேன், நேர்த்தியான, நடிகர்கள்