எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள்
* சரி, இனி லண்டனுக்குத் திரும்பலாம். லண்டனில் உள்ள தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது?
* லண்டன் வாழ் தமிழர்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். இலங்கைப் பிரச்சினைக்கு முன் குடியேறியவர்கள் (பெரும்பாலும் டாக்டர்கள், இஞ்சினியர்கள், கணக்காளர்கள்), இந்தியாவிலிருந்து குடியேறிய தமிழர்கள் (தொழில் நிமித்தம்), மாணவர்களாகப் போய் அங்கே தங்கியவர்கள், அகதிகளாகப் போன - ஆங்கில அறிவு குறைந்தவர்கள், லண்டனில் பிறந்த, தமிழ் சற்றுப் புரியக்கூடிய ஆனால் பேசத் தெரியாத ஒரு இளம் பரம்பரை இவர்களில் அகதிகள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, பணம் சேகரித்து வசதியாக வாழத் துவங்கியுள்ளார்கள். தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறார்கள். அகதிகள் கடன் வாங்கியே மேலை நாடுகளுக்கு ஓடிப் போனதால், பதினெட்டு இருபது மணிநேரம் உழைக்கிறார்கள். நாட்டில், ஊரில், வீட்டில் மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். இவ்வளவு சிரமங்களுக்கிடையில், தமிழ்நாட்டிலிருந்து கலைஞர்களை வரவழைத்து அவர்களைக் கௌரவிக்கிற தன்மையும் முயற்சிகளும் நடக்கின்றன. அதற்காகவும் தங்களது உழைப்பிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்குகிறார்கள். ஈழத்தில் அனாதை, விதவைகளுக்கு ஒரு தொகையைக் கொடுக்க தங்களது கஷ்டங்களுக்கிடையிலும் அவர்கள் தயங்குவதில்லை.
* ஈழத்திற்கும் தமிழ்நாட்டுக்குமுள்ள இலக்கியத் தொடர்பு எப்படி இருக்கிறது?
* தமிழகக் கலைஞர்களை ஈழத்திற்கும் வெளிநாடுகளுக்கும் வரவழைத்துக் கௌரவிக்கிறார்கள். ஈழத்தைச் சேர்ந்தவர்கள் நூல்களைப் பணம் கொடுத்து வாங்கிக் காட்டும் ஆர்வம் தமிழகத்தில் இருப்பதில்லை. தமிழகத்துக் கலைஞர்களை, கதாசிரியர்களை ஈழத்துப் பத்திரிகைகளில் நாங்கள் காட்டுகிற அளவு இல்லாவிட்டாலும், ஓரளவு கூட, தமிழகத்தில் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கோமல், சுஜாதா, மாலன், வாசந்தி மற்ற சில சிறு பத்திரிகைகள் கொடுக்கிற அறிமுகங்கள்தான் எங்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால் இந்தியத் தமிழ் எழுத்தாளர்களை, கலைஞர்களை முழுமையாகவும் நிறைவாகவும் இனங்காணும் போக்கு ஈழத்திலேயும் சரி, வெளிநாடுகளிலும் சரி, இலங்கைத் தமிழர்களிடம் காணக் கூடியதாக இருக்கிறது.
* வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களை எப்படிப் பார்க்கிறார்கள்?
* அங்குள்ள மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அகதிப் பிரச்சினைகளை ஆராய்கிறார்கள், நுணுகிப் பார்க்கிறார்கள். இனி மூன்றாம் உலக நாடுகள் எங்களின் கலை இலக்கிய முயற்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறுகதை, நாடகங்களில் அதிகமாக எதிர்பார்க்க முடியவில்லை. ஆனால் கலைகள் மூலம், நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல என்பதைக் காட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் அங்குள்ள அனுதாபங்கள் கொண்ட அமைப்புகளோடு சேர்ந்து 'ஸ்ரீசலாமி' என்ற நாடகத்தை ஆங்கிலம், ஜெர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் கருத்துச் சேரும்படி அமைத்தோம். அந்த நாடகம் ஸ்விட்சர்லாந்தில் 36 முறை மேடையேறியது. அதை ஒட்டி, பத்திரிகைகளில் பெரிய அளவில் விமரிசனங்கள் வெளியாயின. எங்களின் அகதி வாழ்க்கையான காரணங்களையும் ஆராய்ந்தன. ஜெர்மன் மொழி பேசப்படுகிற நாடுகளில் உள்ள டி.வி., ரேடியோ, பத்திரிகைகள் பேட்டி கண்டன. இப்படி நடப்பன ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஐரோப்பாவிலே தமிழ் மக்கள் மீது சகிப்புத் தன்மையையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியதாகப் பத்திரிகைகள் எழுதின. இப்படி ஒவ்வொரு நாடகத் தமிழ்க் கலைஞர்களும் அங்குள்ள அமைப்புகளுடன் சேர்ந்து ஈழத் தமிழ்ப் பிரச்சினைகளைச் சொன்னதோடு, தமிழ் மக்களின் பொது, கலைச் சிறப்பு ஆழங்களை, இந்தியத் தமிழ்க் கலைஞர்களை வரவழைத்து அறிமுகம் செய்து, ஓர் அந்தஸ்தை அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். படிப்படியான ஒரு மனமாற்றம் எல்லா நாடுகளிலும் ஏற்பட்டு வருகிறது.
* ஈழத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
* எங்களின் உரிமைப் போராட்டத்தில் யாரும் பங்கேற்கத் தேவையில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு மத்தியஸ்தம் செய்யவோ அல்லது வழி சொல்லித் தரவோ யாரும் எதிர்பார்க்கவேயில்லை. மனித உரிமை மறுக்கப்படுகிற மக்களுக்காக, சுதந்திரமாக வாழுகிற ஒரு இனம் தார்மீகக் குரல் எழுப்ப வேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாங்கள் அடக்கப்படுவது தவறு என்று சொல்லக்கூட, தமிழ்நாட்டில் துணிச்சல் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ ஈழத் தமிழர்களை உலக நாடுகள் சந்தோஷமாக அணைத்துக் கொண்டன. அரவணைத்தன. ஆனால் தமிழகம்தான் முதலில் அடித்து விரட்டியது. இது மிகவும் துயரமானது. இதைத் தமிழ் மக்கள் ஒரே குரலில் எதிர்க்காமல் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், கலைஞர்களை, ஈழத், இருக்கிறது, அங்குள்ள, நாடகக், கலைக், பார்வை, எனது, பத்திரிகைகள், இந்தியத், நாடகப், தமிழர்களை, எங்களின், கலைகள், நாங்கள், கட்டுரைகள், தமிழ்க், தமிழர்களிடம், யாரும், கூடியதாக, மக்கள், சேர்ந்து, ஜெர்மன், நாடுகள், இப்படி, பார்க்கிறார்கள், வரவழைத்து, உள்ள, எப்படி, லண்டனில், நாடகம், drama, arts, தமிழர்கள், அகதிகள், தமிழகத்தில், ஈழத்துப், ஈழத்திற்கும், தங்களது, மிகவும், பணம், பத்திரிகைகளில்