தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
இருபதாம் நூற்றாண்டில் நாடகக்கலை:
தமிழ்நாடகக் கலை இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்தது. தலைசிறந்த நாடகக் கலைஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். தோன்றிக் கொண்டும் இருக்கிறார்கள். இத்தகைய வளர்ச்சிக்கு, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அவர்களைப் பற்றி இப்போது காண்போம்.
சங்கரதாச சுவாமிகள் (1867-1922):
![]() |
சங்கரதாச சுவாமிகள் |
பண்டிதர் முதல் பாமரமக்கள் வரை பலரும் கண்டு மகிழும் வண்ணம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் தமிழ் நாடகங்களை மேடையேற்றியவர். தமிழ் நாடகவுலகை தெலுங்கு, வடமொழி இசை கைப்பற்றியிருந்த காலத்தில் தெய்வமணம் கமழும் தமிழிசைப் பாடல்களை இயற்றித் தமிழ்நாடக மேடைகளில் முழங்கச் செய்தவர். பாடல்களோடு கூடச் சிறந்த "தமிழ் வசனங்கள்" என்றழைக்கப்பட்ட உரையாடல்களையும் இயற்றி, நடிகர்களைப் பேச வைத்தவர். சுவாமிகள் இயற்றிய பவளக்கொடி, நல்லத்தங்காள், வள்ளித் திருமணம், ஞான சவுந்தரி ஆகிய நாடகங்கள் இன்றும் தமிழகத்தில் பல ஊர்களில் சில தொழில் நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்டு வருகின்றன.
சுவாமிகள் இலங்கையிலிருந்த தம்முடைய நண்பர்கள் நாடகமாக நடிப்பதற்காகப் பூதத்தம்பி விலாசம், மணிமாலிகை என்ற இரு நாடகங்களையும் எழுதியளித்தார். மிருச்சகடி என்ற வடமொழி நாடகத்தையும், ரோமியோ ஜுலியட் என்ற சேக்சுபியரின் நாடகத்தையும் அவர் தமிழில் ஆக்கித் தந்தார். சுவாமிகளின் நாடகங்களில் பெரும்பாலானவை அவரது காலத்திலும் சற்றுப் பின்னரும் அச்சாகி வெளிவந்தன. ஆனால் அவற்றுள் பல நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. சங்கரதாச சுவாமிகளின் சமகாலத்தினரான உடுமலை முத்துச்சாமி கவிராயர், ஏகை சிவசண்முகம் பிள்ளை ஆகியோரும் சுவாமிகளைப் போலவே இசைப்பாடல்கள் நிறைந்த தமிழ் நாடகங்களைப் படைத்தனர்.
கந்தசாமி முதலியார் (1874-1939):
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மற்றொரு பெருமகனார் மயிலைக் கந்தசாமி முதலியார் ஆவார். தொழில் நாடக சபைகளில் சிறந்த நாடகாசிரியராகவும் இயக்குநராகவும் பணியாற்றிப் பெருமை பெற்றவர் இவர். 1924 இல் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து இவர் அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சம்பந்த முதலியார் இவரது நாடக ஆர்வத்தை கண்டு தம் சுகுணவிலாச சபையில் சேர்த்துக் கொண்டார். பின்னர் இவர் சுந்தராவின் நாடகக்குழு, பாலாமணி அம்மாள் நாடக சபை, ஆஞ்சநேயர் கோவிந்தசாமி நாயக்கர் நாடகசபை, டி.கே.எஸ். சகோதரர்களின் பால சண்முகானந்த சபை ஆகியவற்றிலும் நாடகாசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1906 இல் இவர் பாலாமணி நாடக சபையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இவருடைய நாடகத் தொண்டிற்காக வேல்சு இளவரசரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ்களும் பொற்பதக்கங்களும் பெற்றுள்ளார்.
கந்தசாமி முதலியார் பல நாடகக் குழுவினருடன் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ் நாடகங்களை மேடையேறச் செய்தவர். இவர் அக்காலத்தில் சமூக சீர்திருத்த நாடகாசிரியர் என்ற பெயரும் பெற்றார். இவர் அக்காலத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியர் வடுவூர் கே. துரைச்சாமி ஐயங்கார் போன்றோரின் நாவல்கள் பலவற்றை நாடகமாக்கினார். கந்தசாமி முதலியார் திரைப்பட வசனங்களும் எழுதியுள்ளார். லீலாவதி, சந்திரமோகன், பக்த துளசிதாஸ், மாயா மச்சேந்திரா போன்ற திரைப்படங்களுக்கு இவர் உரையாடல்கள் எழுதியுள்ளார். சம்பந்த முதலியாரின் சமூக சீர்திருத்த நாடகங்களை எல்லா நாடக சபைகளுக்கும் அறிமுகப்படுத்தி நடிக்கச் செய்த பெருமை இவருக்கே உரியது. சுகுண விலாச சபையின் புகழைத் தமிழ்நாடு முழுவதும் இவர் பரப்பினார். அறுபத்தேழாவது வயதில் உயிர் நீக்கும் வரை, நாடகக் கலையின் பல்வேறு நிலைகளில் இடைவிடாது உழைத்த கந்தசாமி முதலியாரின் பெயர் தமிழ் நாடகவுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, தமிழ், இவர், நாடகக், சுவாமிகள், கந்தசாமி, முதலியார், நாடகங்களை, சங்கரதாச, சிறந்த, வரலாறு, எழுதியுள்ளார், கட்டுரைகள், கலைக், நாடகத், இருபதாம், பெருமை, என்றும், கொண்டிருந்தபோது, சுவாமிகளின், சம்பந்த, பணியாற்றிக், அக்காலத்தில், சீர்திருத்த, முதலியாரின், சமூக, நாடகத்தையும், பாலாமணி, சபையில், வடமொழி, அவர், drama, arts, ஏறத்தாழ, கலைகள், நாடகவுலகை, முழுவதும், செய்தவர், ஆகிய, நூற்றாண்டில், கண்டு, பெற்றவர், தொழில்