தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
சம்பந்த முதலியார் (1873-1964):
தமிழ்நாட்டின் நாடகக் கலை பற்றி மக்கள் கொண்டிருந்த இழிவான கருத்துகளையும் நீக்கித் தமிழ்நாடகம் பெருமையுடன் தலைதூக்கப் பெருஞ்சாதனைகளைச் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார். சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபைக்குத் தமிழ் நாடகக் கலையுலகத் தொண்டில் பெரும்பங்கு உண்டு. இவரின் பெயரைக் குறிப்பிடாவிடில் தமிழ் நாடக வரலாறு நிறைவுபெறாது. சிறுவயதிலேயே நாடகக் கலையில் ஈடுபட்ட இவர் தான் பணி செய்த நீதிமன்றத் தலைவர் பதவியிலிருந்து 1928 இல் ஓய்வு பெற்ற பின் முழுநேரமும் நாடகத் தொண்டாற்றினார்.
1897இல் தமிழ்நாட்டில் சம்பந்த முதலியாரால் சுகுண விலாச சபை என்ற முறை நாடக சபையை முதன் முதலாக நிறுவினார். இச்சபை பத்து ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் நன்கு காலூன்றிச் செல்வாக்குடன் செயலாற்றத் தொடங்கிவிட்டது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டு நாடக உலகத்தினின்றும் தொழின்முறை நாடகக் குழுக்கள் விலக வேண்டியதாயிற்று. பல பயின்முறை நாடக சபைகள் சுகுண விலாச சபையை மாதிரியாக கொண்டு புதுவேகத்துடன் தோன்றலாயின. சம்பந்த முதலியார் இயற்றி சுகுண விலாச சபையினர் நடித்துள்ள நாடகங்கள் தொண்ணூற்றி நான்கு. இவற்றை அவர் ஏறத்தாழ ஐயாயிரம் இடங்களில் மேடையேற்றியிருக்கிறார். சுகுணவிலாச சபை இந்நாடகங்களை சென்னையில் மட்டுமின்றி பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற பெருநகரங்களிலும் மேடையேற்றி இருக்கிறது. இலங்கை, பர்மா போன்ற கடல் கடந்த நாடுகளுக்கும் சென்று தமிழ்நாடகங்களை நடித்துப் புகழைப் பரப்பியுள்ளது.
![]() |
சம்பந்த முதலியார் |
நாடகத்திற்கு இலக்கியத் தகுதியைக் கொண்டு வந்த அறிஞர் பம்மல் சம்பந்த முதலியாரேயாவார். மக்களின் நாடக இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியும், நாடகத்தை வாழ்வியலின் படப்பிடிப்பாக படைத்தும், சமுதாயச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர நாடகங்களைக் கருவியாக்கியும் பணியாற்றியவர் சம்பந்த முதலியார். இவர் அக்கால நாடகத்தின் குறைபாடுகளை உணர்ந்து, களைந்து, நாடக இலக்கியத்திற்குப் புத்துயிரூட்டினார். தெருக்கூத்து நாடகங்களிலிருந்த குறைகளெல்லாம் இவருடைய நாடகங்களில் அடியோடு களையப்பட்டன. இரவு முழுவதும் ஆடப் பெறுவதற்காக இயற்றப்பட்ட நீண்ட நாடகங்கள் கோலோச்சிய காலத்தில் மூன்றுமணி முதல் ஐந்து மணி நேரத்தில் நடித்து முடிக்கப்படக்கூடிய சம்பந்த முதலியாரின் சிறிய நாடகங்கள் செல்வாக்கு பெற்று புகழடைந்தன. இவரது புகழ்பெற்ற நாடகமான மனோகரா பின்னர் கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்துடன் திரைப்பட உலகில் வெற்றிவாகை சூடியது.
சிறந்த நடிகராகவும், தேர்ந்த நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும் திகழ்ந்த சம்பந்த முதலியாரின் நாடகத் தொண்டு இத்துடன் நின்றுவிடவில்லை. சுகுண விலாச சபையின் சார்பாக சம்பந்த முதலியார் இண்டியன் ஸ்டேஜ் (Indian Stage) இந்திய நாடகமேடை என்ற இதழை வெளியிட்டார். தன்னுடைய சபைக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பலமொழிகளில் வந்த நாடக இலக்கிய நூல்களை கொண்ட நூலகத்தை அமைத்திருந்தார். தனது நாடக அனுபவங்களை 'நாடகமேடை நினைவுகள்' என்ற நூலை ஆறுபாகங்களாக எழுதியுள்ளார். நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்ற நூலையும் எழுதினார். அவரது 'பேசும்பட அனுபவங்கள்', 'தமிழ் பேசும்படக் காட்சி' என்ற நூல்கள் நாடகக்கலையின் வளர்ச்சியாக திரைப்படம் தோன்றிய காலநிலையை அறிய உதவுகிறது. இந்து ஆங்கில செய்தியிதழில் நாடகம் பற்றிய கட்டுரைகளையும் எழுதி வந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாடக வரலாறு பற்றி மூன்று சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். எண்பத்தொன்பதாவது வயது வரையிலும் நாடகத்திற்காக இடையறாது தொண்டாற்றியுள்ளார். தன் கண்பார்வை குன்றிய நிலையிலும் தான் சொல்லச் சொல்ல பிறரை எழுத வைத்து தம் நூல்களை வெளியிட்டுள்ளார்.
1916 இல் ஆங்கிலேய அரசினரால் ராவ் பகதூர் எனப் பாராட்டப்பட்ட சம்பந்த முதலியார் நாடகக் கலைஞர்களால் 1944இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். 1963இல் ஒரு கலைஞன் பெறக்கூடிய மிகப்பெரிய விருதான "பத்மபூஷண்" என்ற பட்டத்தையும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார். எனவேதான் இன்றும் தமிழ்நாடகவுலகு அவரை தமிழ் நாடகத் தந்தை என்றும் தமிழ் மேடையின் சேக்சுபியர் என்றும் போற்றிப் புகழ்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், சம்பந்த, நாடக, நாடகங்களும், தமிழ், முதலியார், நாடகக், விலாச, சுகுண, வரலாறு, நாடகங்கள், இவர், நான்கு, நாடகத், கட்டுரைகள், முதலியாரின், கலைக், இயற்றிய, நூல்களை, நாடகமேடை, தொண்ணூற்றி, இலக்கிய, நாடகமும், வந்த, என்றும், மனோகரா, கலையில், நாடகம், திரைப்படம், கலைகள், arts, drama, பற்றி, பம்மல், பத்து, சபையை, தமிழ்நாட்டில், தான், கொண்டு