தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
சோழர் காலத்தில் நாடகக் கலை (கி.பி.900-1300)
சோழர்காலத்தில் அவர்கள் ஆண்ட நான்கு நூற்றாண்டுகளில் நாடகக் கலை இழந்த தன் செல்வாக்கை மீண்டும் பெற்றது. எனினும் இக்காலத்தில் தோன்றிய நாடக இலக்கியங்கள் நமக்கு இன்றுவரை கிட்டவில்லை. ஆனால், இக்காலத்தில் இலக்கியங்கள் தரும் குறிப்புகள், கல்வெட்டுகள் காட்டும் சான்றுகள் ஆகியவற்றிலிருந்து நாடகம் சோழர்காலத்தில் செல்வாக்கு மிகுந்த கலையாக இருந்ததென்றும் நாடக நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வந்தனவென்றும் அறிகிறோம்.
பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருதக்கத் தேவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணி, ஆழ்வார்கள் நாயன்மார்களின் தோத்திரப்பாடல்கள், சேக்கிழாரின் பெரிய புராணம், கம்பரின் இராமாயணம் போன்ற பல நூல்கள் இக்காலத்தின் நாடக நிலையைக் குறிப்பாகக் காட்டுகின்றன. சிவபிரான் நாடகமாடியென்று தேவாரப் பாடல்களில் அடிக்கடி குறிக்கப்பெறுகிறார்.
இக்கால நாடகவரங்குகளில் இடையறாது கூத்துகள் நடைபெற்று வந்ததால், இவற்றை கூத்தறாப்பள்ளிகள் என்று வழங்கினர். விழாக்காலங்களில் இப்பள்ளிகளில் நாடகங்கள் மிகுதியாக நடைபெற்றன. அவற்றைக் காண மக்கள் பெருங்கடலென திரண்டு குழுமினர். (சீவக.673) கூத்துகள் பெரும்பாலும் இன்னிசைக் கூத்துகளாக இருந்தன. அழகு மிக்க ஆடல் மகளிர் இக்கூத்துகளில் பங்கு பெற்றனர். இக்கால கலைஞர்கள் ஒப்பனைக் கலையிலும் சிறந்து விளங்கினர்.
தமிழ்நாட்டின் எல்லா புகழ்மிக்க கோயில்களிலும் ஆண்டுதோறும் விழாக்காலங்களில் தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து, சாந்திக்கூத்து என்ற பெயர்களில் நாடகங்கள் நடைபெற்றன (கல்வெட்டு எண்: 125 (1925); 250 (1926); 154 (1895); 245 (1914); A.R.E. of 1924-1925 பக்கம் 25). இவை நிகழ்த்தப்பெற்ற அரங்குகள் நாடகசாலைகள் எனப்பட்டன. பரதமுனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாடகவரங்குகளின் அளவுகளின்படி சோழர்கால கோவில்களில் நாடகவரங்குகள் கட்டப்பட்டன. நாடகக் கலைஞர்களுக்கு அரசு மானியமாக நிலங்களை வழங்கியும், நெல் பொன் முதலியவற்றைக் கொடுத்தும் வந்தது. முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கன்னிவனபுராண நாடகம் நடைபெற்றதாய் திருப்பாதிரிப்புலியூர்க் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஏழங்க நாடகம் நடைபெற்றதாய் திருவிடைமருதூர்க் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
பிற்கால சோழர்காலத்தில் ஆண்டுதோறும் தஞ்சை இராசராசேசுவரத்தில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. முதலாம் இராசராசன் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில் திருவாடுதுறைக் கோயிலில் திருமூலநாயனார் நாடகம் நடைபெற்றதாய் அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் முதலாம் இராசேந்திரன் காலக் கல்வெட்டு ஒன்று சாந்திக்கூத்தன் குழுவினரால் தஞ்சைக் கோவிலின் சிறப்பு நாடகமாக நடிக்கப்பெற்றதைக் காட்டுகிறது.
சோழர்களுக்குப் பின் நாடகக்கலை:
கி.பி.14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிறகு சேர, சோழ, பாண்டிய அரசர்கள் நிலை தளர்ந்தது. விசயநகர வேந்தர் ஆட்சி காலத்தில் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னாட்டில் நாயக்கராட்சி மறையும் வரை இக்கலைகள் உயிர்பெற்று வாழ்ந்தன. 17 ஆம் நூற்றாண்டில் நாடகக் கலை கவனிப்பாரற்று போனது.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி தொட்டு கூத்த நூல்கள் சில வேரற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்று கிளைப்பனவாயின. சீர்காழி அருணாசலக் கவிராயர் செய்த கிராமநாடகம், குமரகுருபர சாமிகள் செய்த மீனாட்சியம்மை குறம், திரிகூடராசப்பக் கவிராயர் செய்த குற்றாலக் குறவஞ்சி போன்ற கூத்து நூல்கள் தோன்றின. முக்கூடற்பள்ளு, பருளை விநாயகர் பள்ளு ஆகிய கூத்த நூல்கள் இயற்றமிழ் சான்ற பாவலர்களால் இயற்றப்பட்டன.
பின்பு கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் அரபத்த நாவலர் என்பார் பரதசாஸ்திரம் என்ற நூலை எழுதினார். கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப்பிடத்தக்கது. அந்நாடகம் தஞ்சை பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. கி.பி. 1891இல் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாடிய மனோன்மய நாடகமும் போற்றத்தக்கது ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், நாடகக், நாடக, கல்வெட்டு, காலத்தில், நூற்றாண்டின், நூல்கள், செய்த, நடைபெற்றதாய், வரலாறு, தஞ்சை, பெரிய, சோழர்காலத்தில், கலைகள், தமிழ், முதலாம், கட்டுரைகள், கலைக், குலோத்துங்கன், வந்தது, கோவிலில், கூத்த, பாடிய, முற்பாதியில், குறவஞ்சி, கவிராயர், நூற்றாண்டில், விழாக்காலங்களில், இக்காலத்தில், இலக்கியங்கள், ஆண்ட, நடனம், drama, அடிக்கடி, நடைபெற்று, நாடகங்கள், நடைபெற்றன, arts, கூத்துகள், இக்கால, ஆண்டுதோறும்