தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
அரங்கினில் அரங்க பூசை நடைபெற நால்வகை வருணப் பூதரையும் ஓவியமாக யாவரும் வணங்கத்தக்க விதமாய் மேலேயும் விதானத்திலும் வரைந்து வைத்திருந்தனர். நாயகப் பத்தி என்றழைக்கப்பட்ட மேடையின் கல்தூண்களின் நிழல் விழாதவாறு நிலைவிளக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரங்கில் ஒருமுக எழினி, பெருமுக எழினி, கரந்துவரல் எழினி என்ற மூவகைத் திரைகள் செயல்பட்டன. மேலும் அரங்கினில் முத்துக்களால் ஆன மாலைகள், கொத்துச் சரங்கள் தொங்கவிடப்பெற்றிருந்தன. வேத்தியல் நாடகங்கள் இவ்வாறு சிறந்த அமைப்புள்ள அரங்கங்களில் விழாக்காலங்களில் பெரும்பான்மையாக நடிக்கப் பெற்றன. சிறப்பாக நாடகமாடிய பெண்டிர் அக்கால மன்னர்களால் 'தலைக்கோலி' என்ற பட்டமளிக்கப் பெற்று சிறப்புற்றனர்.
நாடகக் கலை பற்றிய விளக்கமான குறிப்புகள் இவ்வாறு சங்க மருவிய கால இலக்கியங்களில் நமக்குக் கிடைக்கப் பெற்றாலும், அக்காலத்து நாடக இலக்கிய வடிவங்கள் நமக்கு கிட்டவில்லை. ஆனாலும் நாடகக் கூத்துகள் ஆடப்பெறும்போது, மேடையில் இசையாசிரியன், குழலாசிரியன், தண்ணுமையாசிரியன், யாழாசிரியன் ஆகியோருடன் நாடகக் கவிதைகள் படைக்கவல்ல நன்னூல் புலவனும் அமர்ந்திருந்ததாக சிலப்பதிகாரத்திலிருந்து (3:25-94) அறிகிறோம்.
கி.பி.300க்குப் பின்னர் நாடகக்கலை:
தமிழகத்தில் சங்க மருவிய காலமான கி.பி. 300க்குப் பின்னர், நாடகக்கலை நலியத் தொடங்கியதென்றே கூறவேண்டும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை களப்பிரர்களின் படையெடுப்பாலும், நாட்டில் நிலையான ஆட்சியின்மையாலும் மக்கள் துன்புற்றுக் கொண்டிருந்த காலமது. இக்காலத்தில் நாடகக்கலை பெரும் சோதனைக்குள்ளாகியது. பின்னர், பல்லவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிக் காஞ்சியில் புத்த சமயம் செல்வாக்குடன் இருந்தது. ஏற்கனவே சமணர்கள் மதுரையில் சங்கம் ஒன்று அமைத்துத் தங்கள் சமயத்தைச் செல்வாக்குடன் பரப்பிக் கொண்டிருந்தனர்.
சமணர்களிடையே நாடகம் என்பது மக்களுக்குத் தீராத துன்பத்தைத் தருவது, தீமையானது என்ற கருத்து நிலவி வந்தது (பதினெண்கீழ்கணக்கு - ஏலாதி:25). பௌத்த சமயத்தினர் நாடகம் சிற்றின்ப நாட்டத்தை தருவதால் கடிந்து ஒதுக்கப்பட வேண்டியதே என்று கருதினர் (மணிமேகலை 22:62-65). எனினும் இக்காலத்தில் நாடகக்கலை ஒரேயடியாக அழிந்துவிடவில்லை. பொதுமன்றங்களிலும், மன்னர்களின் கோயில்களைச் சார்ந்த நாடகவரங்குகளிலும் நாடகங்கள் நடைபெற்று வந்தன.
மேலும் கலித்தொகை, பெருங்கதை, சூளாமணி, நீலகேசி போன்ற இலக்கியங்களில் நாடகக்கலைப் பற்றிய பல சான்றுகள் காணப்படுகின்றன. இக்காலத்தில் மன்னரால் ஆதரிக்கப்பெற்ற நாடகக்குழு, மக்களால் ஆதரிக்கப்பெற்ற நாடகக்குழு என்று இரண்டு வகைப் பிரிவுகள் இருந்தன. கலித்தொகை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை பல்வேறு காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டது. இவற்றுள் நாடக உரையாடல்களாய் அமைந்த பாடல்களும் உள்ளன. சில ஓரங்க நாடகங்களாகவே அமைந்துள்ளன. பெருங்கதை (உஞ்சைக் காண்டம் 37:89, 32:6, யுத்தக்காண்டம் 2:10-12, இலாவணக் காண்டம் 8:69, வந்தவக் காண்டம் 3:41) சூளாமணி (571) ஆகியவை தரும் சான்றுகள் மூலம் பௌத்த சமணத் தாக்குதல்களுக்கிடையேயும் நாடகம் ஒரேயடியாக அழிந்து போகாமல் வாழ்ந்து கொண்டிருந்ததை அறிய முடிகிறது.
![]() |
மயிலை சீனி.வேங்கடசாமி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகக், நாடக, நாடகக்கலை, நாடகம், இக்காலத்தில், வடமொழியில், மேலும், நாடகங்கள், தமிழ், காண்டம், எழினி, பின்னர், கட்டுரைகள், கலைக், கலைகள், வரலாறு, சூளாமணி, சான்றுகள், கலித்தொகை, ஒரேயடியாக, ஆதரிக்கப்பெற்ற, பெருங்கதை, காலத்தில், வேங்கடசாமி, பல்லவ, சீனி, மயிலை, எனினும், நாடகக்குழு, செல்வாக்குடன், மருவிய, இலக்கியங்களில், சங்க, பற்றிய, ஓவியம், இவ்வாறு, 300க்குப், arts, நூற்றாண்டு, அரங்கினில், ஐந்தாம், தமிழகத்தில், drama, பௌத்த