சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
முதல் முதலாக இவருடைய புலமையை அறிந்து பயன்படுத்திக் கொண்ட நாடக சபையில் இவர் துவக்கத்தில் நடிகராகவும் பின்னர் ஆசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். இரணியன், ராவணன், எமதருமன், 'நள தமயந்தி'யில் சனீசுவரன் முதலிய வேடங்கள் இவருடைய நடிப்புத் திறமையை எடுத்துக்காட்டிய சிறந்த பாத்திரங்கள் என்று கருதப்பட்டன.
திருவாளர் சாமி நாயுடு அவர்களின் நாடக சபையில் சிலகாலம் சுவாமிகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சூத்திரதாரராகவும் நடித்து வந்தார். சுவாமிகள் சூத்திரதாரராக வந்து நாடக நுணுக்கங்களைப் பற்றியும், நடைபெறவிருக்கும் நாடகத்தின் நீதிகளைப் பற்றியும் நிகழ்த்தும் விரிவுரையைக் கேட்க மக்கள் ஆவலோடு கூடுவார்கள்.
வள்ளி வைத்தியநாதய்யர், அல்லி பரமேசுவர ஐயர் ஆகியோர் நடத்தி வந்த நாடக சபைகளில் இவர் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். பி.எஸ். வேலு நாயர் அவர்களின் சண்முகாநந்த சபையிலும் நெடுங்காலம் இவர் பணி புரிந்தார். திரு. வேலு நாயர் அவர்களின் குழுவிலிருந்தபோது தான் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் 'மனோகரன்' நாடகத்திற்கு இவர் பாடல்கள் இயற்றினார்.
சமரச சன்மார்க்க நாடக சபை என்ற பெயரால் சுவாமிகள் தாமே ஒரு நாடக சபையையும் சில ஆண்டுகள் நடத்தினார். இந்த நாடகக் குழுவிலே தான் தமிழ் நாடக மேடையின் மங்காத ஒளி விளக்காகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பாவும் அவரது சகோதரர்களும் பயிற்சி பெற்றனர். இசைப் புலவராக இன்று நம்மிடைய வாழும் மதுரை திரு. மாரியப்ப சுவாமிகளும் இந்த நாடகக் குழுவில் தோன்றியவரே.
சுவாமிகள் ஆசிரியராக இருந்த முதல் சிறுவர் நாடகக் குழு திரு. செகந்நாத ஐயர் அவர்களின் பால மீன ரஞ்சனி சங்கீத சபையேயாகும். திருவாளர்கள் பி.டி. சம்பந்தம், எம்.எஸ். முத்துக் கிருட்டிணன், டி.பி. பொன்னுசாமி பிள்ளை, எம்.வி. மணி, டி. பாலசுப்பிரமணியம், கே. சாரங்கபாணி, எஸ்.வி. வெங்கட்ராமன், நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம், எம்.ஆர். இராதா முதலிய எண்ணிறந்த நடிகர்கள் இந்தச் சபையில் இருந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
சிலகாலம் அந்தச் சபையில் இருந்த பிறகு திரு. செகந்நாதய்யர் அவர்களுடன் ஏற்பட்ட மனத்தாங்கலின் விளைவாகச் சுவாமிகள் மதுரைக்கு வந்து சில நண்பர்களின் கூட்டுறவோடு 1918-ஆம் ஆண்டில் தத்துவ மீன லோசனி வித்துவ பாலசபா என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்து அதன் ஆசிரியராக அமர்ந்தார். இந்தக் குழுவில்தான் 'டி.கே.எஸ். சகோதரர்கள்' என்று குறிக்கப்படும் நாங்கள் சேர்க்கப்பட்டோம்.
இவ்வாறு ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும், தமிழ் நாடக உலகின் தந்தையாகவும் பல ஆண்டுகளைக் கழித்த சுவாமிகள், இறுதிவரை திருமணமாகாதவராகவே இருந்து 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி திங்கட்கிழமை புதுச்சேரி நகரில் தமது பூதவுடலை நீத்தார்.
தமிழ் நாடகத் தாய் பெறற்கரிய தமது புதல்வனை இழந்தாள். நடிகர்கள் தங்கள் பேராசிரியரை இழந்தனர். கலையுலகம் ஓர் ஒப்பற்ற கலைஞரை இழந்து கண்ர் வடித்தது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாடக மேடையில் வசனங்கள் கிடையா. முழுதும் பாடல்களே பாடப்பட்டு வந்தன. அக்காலத்தில் நாடகங்களை இயற்றிய ஆசிரியர்கள் எல்லா நாடகங்களையும் இசை நாடகமாகவேதான் எழுதினார்கள். திருவாளர் அருணாசலக் கவிராயர் அவர்களின் 'இராம நாடகம்' இதற்குச் சான்று கூறும்.
சில ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலை மாறி நடிக நடிகையர் தமது திறமைக்கும் புலமைக்கும் ஏற்றபடி நாடக் கதைக்குப் புறம்பாகப் போகாமல் கற்பனையாகவே பேசிக்கொள்ளும் முறை வழக்கத்தில் வந்தது. இவ்வாறு நடைபெறும் உரையாடல்கள் சில சமயங்களில் வரம்பு மீறிப் போய்விடுவதுண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், சுவாமிகள், நாடக, நாடகக், அவர்களின், சபையில், இவர், ஆசிரியராக, திரு, தமிழ், ஆண்டுகள், கலைக், சங்கரதாஸ், தமது, வரலாறு, கட்டுரைகள், வேலு, நாயர், தான், ஐயர், நடிகர்கள், இவ்வாறு, இருந்த, திருவாளர், நாடகம், கலைகள், arts, drama, இவருடைய, முதலிய, வந்து, இருந்தார், சிலகாலம், பற்றியும்