சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு
நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ பயன்படுத்தாத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லி விடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் உரைநடைகளாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்களே தமிழ் நாடகக் கலைவளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது.
இவருடைய முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாச சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும்.
இவர் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலைவணங்கினர்; பாராட்டினர்.
ஆங்கில மொழி மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூட மதிப்புக் குறைவென்று கருதபட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாச சுவாமிகள். இசையரங்குகளிலே தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் நாடக மேடையில் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து தமிழுலகை மகிழ்வித்தவர் சங்கரதாச சுவாமிகள்.
சங்கரதாஸ் சுவாமிகள் |
தந்தையார் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழ்ப்புலவர். நகர மக்கள் அவரை 'இராமாயணப் புலவர்' என்ற சிறப்புப் பெயரிட்டு அழைத்தனர்.
"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்"
என்னும் தமிழ் மறையை நன்கறிந்த தாமோதரத் தேவர் தமது புதல்வனுக்குத் தாமே தமிழ்க் கல்வி புகட்டினார்.
அக்காலத்தில் 'புலவரேறு' என்று அறிஞர்களால் போற்றப்பட்ட பழனி தண்டபாணி சுவாமிகளிடம் இவர் பாடம் கேட்டுத் தமது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.
தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்ப் பாடம் கேட்டபோது இவரும் உடுமலைச் சரபம் முத்துச்சாமிக் கவிராயரும் உடன் மாணவராயிருந்தனர். கவிராயர் அவர்கட்கும் இவருக்குமுள்ள அன்புத் தொடர்பு மிக நெருங்கியதாகும்.
தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையிலே சுவாமிகள் சிலகாலம் கணக்கராக வேலை செய்தார். தமது பதினாறாவது வயதிலேயே வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்கள் முதலியவற்றை எழுதத் தொடங்கினார். கவிதைப் புலமைக்கும் கணக்கு வேலைக்கும் போட்டி ஏற்படவே சில ஆண்டுகளுக்குப்பின் இவர் தமது இருபத்து நான்காவது வயதில் நாடகத் துறையில் நுழைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், சுவாமிகள், தமிழ், சங்கரதாச, சங்கரதாஸ், நாடக, தமது, வரலாறு, நாடகக், கட்டுரைகள், கலைக், இவர், நாடகத், காலத்தில், மொழி, கவிராயர், கல்வி, drama, பாடம், சுவாமிகளிடம், தண்டபாணி, முத்துச்சாமிக், சரபம், தமிழை, அவர், தந்தை, arts, உலகில், உடுமலைச், கலைகள், வளர்த்த