பாடல் 915 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த ...... தனதான |
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி வேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி வீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன் ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி யாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட ஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி வாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே. |
மேகலை என்னும் இடை அணியை தளர்த்திக் காட்டி, நீண்ட கூந்தலை விரித்துக் காட்டி, வேல் போன்ற கண்களைச் சுழற்றிக் காட்டி, அழகு பொலியும்படி உடலை மினுக்கிக் காட்டி, கூத்துகளை நடித்துக் காட்டி, தமது வீடுகளுக்கு அழைத்துக் காட்டி, மன்மத ராஜனுடைய காம சாஸ்திர நூலை விளக்கி எடுத்துச் சொல்லி, கச்சு அணிந்த மார்பைக் காட்டி, எல்லாருடனும் சிரித்துக் காட்டி, தந்திர வகையால் அன்பு வைத்துள்ளது போல் தமது மனதைக் காட்டி, (இவ்வாறு) வேசைகள் காம இச்சையை ஊட்ட எனது ஆசையை அவர்களிடம் காட்டி நான் அழிந்து போவேனோ? அன்பு மிக்க விருப்பத்தைக் காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே, மூவுலகங்களையும் காத்துக் காட்டி, சேவற் கொடியை உயர்த்திக் காட்டும் (வயலூரானே), வலிமை கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய வயலூர்* முருகனே, (வேடர்களுக்குத் தெரியாதவாறு வள்ளியைக் கவர்ந்த) வெற்றியைக் காட்டி, வேடர்களின் திறம் எவ்வளவு சிறிது என்பதைக் காட்டி, (நல் வாழ்வு பெற்ற சூரனாகிய) மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமானே, பெரிய கிரவுஞ்ச மலை வெந்து போகும்படிச் செய்து காட்டி, அசுரர்களுடைய திறமை எல்லாம் இவ்வளவு தான் என்பதைக் காட்டி, தேவர்களின் தலையைக் காத்த பெருமாளே.
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 915 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தானன, காட்டு, தனத்தத், தாத்த, தமது, பெருமாளே, என்பதைக், வயலூர், காத்த, அன்பு, வேசைகள், மேகலை, விரித்துக், மினுக்கிக், நடித்துக், ஆசையை