பாடல் 857 - திருப்பனந்தாள் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தா தத்தன தந்தா தத்தன தந்தா தத்தன ...... தனதான |
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை யென்றே செப்பிய ...... மொழிமாதர் கொங்கார் முத்துவ டந்தா னிட்டத னந்தா னித்தரை ...... மலைபோலே வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம னந்தா னிப்படி ...... யுழலாமல் மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம் என்றே யிப்படி ...... அருள்வாயே இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட மண்டா நற்றவர் ...... குடியோட எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி யென்றே திக்கென ...... வருசூரைப் பந்தா டித்தலை விண்டோ டக்களம் வந்தோ ரைச்சில ...... ரணகாளிப் பங்கா கத்தரு கந்தா மிக்கப னந்தா ளுற்றருள் ...... பெருமாளே. |
பூங் கொத்துக்கள் நிறைந்த கரிய கூந்தலையும், சந்திரனைப் போன்ற முகத்தையும், சர்க்கரை என்றே சொல்லப்பட்ட மொழிகளையும் உடைய விலைமாதர்களின் வாசனை கொண்டதும் முத்து மாலை பூண்டதுமான மார்பகம், இந்தப் பூமியில் உள்ள மலை போல் உயர்ந்து எதிர் வந்து தோன்றிச் சுற்றி என் மனத்தைச் சூழ்ந்து கவர்ந்து பற்றினால், இந்த ஏழை மனம் இப்படியே அலைந்து அலைந்துத் திரியாமல், அழிதல் இல்லாத சிறந்ததொரு உபதேசப் பொருளை இதோ பெற்றுக்கொள், இது ஒரு அற்புதமானது என்று கூறி இவ்வண்ணம் இப்போதே அருள்வாயாக. சந்திரன் பயந்து ஓட, சூரியன் அதைக் கண்டு ஓட, காட்டில் கூட்டமாகச் செல்லும் நல்ல தவசிகளும் குடும்பத்துடன் அஞ்சி ஓடவும், எங்கே அந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள், எங்கே இந்த மலையில் இருப்பவர்கள் என்று கூறியே, திடுக்கிடும்படியாக வந்த சூரனை பந்தடிப்பது போல அடித்து விரட்டி, தலை அற்றுப் போய்ச் சிதறி விழவும், போர்க்களத்துக்கு வந்த அசுரர்களைக் கொன்று (அவர்களது உடல்களை) சில ரண தேவதைகளுக்குப் பங்கிட்டுத் தந்த கந்தனே, சிறப்பாக திருப்பனந்தாளில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருப்பனந்தாள் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 857 - திருப்பனந்தாள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எங்கே, தந்தா, னந்தா, தத்தன, மலையில், வந்த, பெருமாளே, யென்றே, என்றே, சர்க்கரை