பாடல் 815 - விஜயபுரம் - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன தனதன தந்தன தானன ...... தனதான |
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி லவுடத மும்பல யோகமு ...... முயலாநின் றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர மிடிபட இன்பம கோததி ...... வறிதாக இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர எழில்பட மொன்று மொராயிர ...... முகமான விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர் விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே. |
குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு இவைகள் தோலின் இடையே குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும், மலங்களும், பிற அழுக்குகளும் பொதிந்துள்ள, ஒன்பது துவாரங்களை உடைய சிறு குடிலாகிய இந்த உடலை, நீரிலே தோன்றும் குமிழியிலும் வேகமாக அழியப்போகின்ற, துன்பத்துக்கு ஈடான இவ்வுடலை விரும்பி, எப்போதும் சில பயனற்ற மருந்துகளையும், பலவித யோகப் பயிற்சிகளையும் அநுஷ்டித்துப் பார்த்து வேதனைப்படுகின்ற மனத் துன்பம் போதும், போதும். என்றைக்குத்தான் இனி நானும் அழகிய தண்டையை எப்போதும் அணிந்துள்ள உன் திருவடிமலரை அடைவேனோ, தெரியவில்லையே. இடைவெளி விடாது நெருக்கும் அசுரர்கள் எல்லாரும் இறக்கவும், (கிரெளஞ்சமலை முதலான) ஏழு குலகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும், காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல் வற்றிப் போகவும், தேவர்களும் சூரனின் சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி என்ற ஊரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளனே, அழகிய பணாமுடி பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட விஷத்தைத் தரித்துள்ள ஆதிசேஷன் மேருமலை என்ற வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு அந்த வில் வளைபடும் முன்னரே திரிபுரத்தை சாம்பலாகச் செய்ய ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவர், மன்மதனைக் கோபித்து (கண்ணழலாலே) எரித்தவர், ஆகிய சிவபிரானது கண்களிலிருந்து பொறியாகப் பிறந்து, கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே, வட விஜயபுரம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* விஜயபுரம் திருவாரூர் நகரின் ஒரு பகுதி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 815 - விஜயபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, தந்தன, அழகிய, போதும், பெருமாளே, எப்போதும்