பாடல் 76 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - பந்துவராளி
; தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
- எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தான தான தந்தன தனதனன தான தான தந்தன தனதனன தான தான தந்தன ...... தந்ததான |
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு மதுரகவி ராஜ னானென் வெண்குடை விருதுகொடி தாள மேள தண்டிகை வரிசையொடு லாவு மால கந்தைத ...... விர்ந்திடாதோ அடல்பொருது பூச லேவி ளைந்திட எதிர்பொரவொ ணாம லேக சங்கர அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித் தவனிவெகு கால மாய்வ ணங்கியு ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம அதிபெல கடோர மாச லந்தர ...... னொந்துவீழ உடல்தடியு மாழி தாவெ னம்புய மலர்கள்தச நூறு தாளி டும்பக லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக் குதவியம கேசர் பால இந்திரன் மகளைமண மேவி வீறு செந்திலி லுரியஅடி யேனை யாள வந்தருள் ...... தம்பிரானே. |
பரந்துள்ள இப்பூமியில் அளவுக்கு மிஞ்சி வஞ்சனை உள்ள லோபியர்களிடம் (பொருள் பெறுதற்கு அவர்களைச்) சிறப்பாக சூரியனே என்று பாராட்டிக் கூறியும், குற்றம் இல்லாத பெரிய ஒழுக்க நூல்களையும், தெரியவேண்டிய சங்க நூல் பாடல்களையும், வரலாற்று நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்து நான்கு கலை நூல்களையும், திருவள்ளுவ தேவர் அருளிய பொய்யாமொழி ஆகிய திருக்குறள் முதலிய பழமொழி நூல்களை ஓதியும் உணர்ந்தும், பலவகையான சந்த மாலைச் செய்யுட்கள், மடல், பரணி, கோவையார், கலம்பகம் முதலான கோடிக்கணக்கான பிரபந்தங்களை வகைவகையாய்ப் பாடி, பெருமைமிக்க ஆசுகவி, சண்டமாருதன், மதுரகவிராஜன் நான் என்று (புலவர்கள் தம்மைத் தாமே கூறிக்கொண்டு), வெண் குடை, வெற்றிக் கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மயக்க அறிவும், அகங்காரமும் அவர்களை விட்டு நீங்காவோ? (ஜலந்தராசுரனுடன்) வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக அவனுடன் எதிர் நின்று போர் செய்ய முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று, சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து அன்று ஆராதனை புரிந்து, மண்ணுலகில் வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி, கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும் ஜலந்தரன் வருந்தி விழுமாறு அவனுடைய உடலைப் பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி, தாமரை மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில் பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்), ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்) கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய* மகா தேவருடைய குழந்தையே, இந்திரன் பெண்ணாகிய தேவயானையை திருமணம் செய்து கொண்டு, பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்) உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வந்தருளிய பெரும் தலைவனே.
* திருவீழிமிழலைப் புராணம்:திருமால் ஆகிய தேவர்களை வென்ற பின், வலிமை வாய்ந்த ஜலந்திரன் என்னும் அசுரன் சிவ பெருமானையும் வெல்ல கயிலைக்குச் சென்றான். சிவன் ஒரு மறையவனாகத் தோன்றி, ஒரு சக்கரத்தை அமைத்து, நீ அந்த சக்கரத்தைத் தாண்டி வந்தால் கயிலைக்குப் போகலாம் என்றார். அவன் அதை எடுக்கப் போனபோது கழுத்து அறுபட்டு மாண்டான். அந்தச் சக்கரத்தை அடைய திருமால் சிவனை தினமும் ஆயிரம் மலர்களால் அர்ச்சித்துப் பூஜித்தார். ஒரு நாள் ஒரு பூ குறையவே தன் கண்ணையே மலராக இட்டுப் பூஜித்தார். பின்னர் சுதர்ஸன சக்கரத்தையும் சிவனிடமிருந்து பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 76 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, திருமால், தனதனன, நூல்களையும், கொண்டு, சக்கரத்தைத், பெரும், அந்த, ஆயிரம், கண்ணையே, பூஜித்தார், சக்கரத்தை, அந்தச், நாள், போர், உள்ள, இந்திரன், தேவர், தகிட, பெரிய, ஆகிய, தாளம், முதலான, முதலிய, செய்து