பாடல் 611 - ஊதிமலை - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து போகமுற வேவி ரும்பு ...... மடியேனை நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர நீலமயி லேறி வந்த ...... வடிவேலா ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே. |
முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, அன்புடன் மனம் கசிந்து உருகி, முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய். ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான ஆசைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும். அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை** மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே.
* ஆவுடையாள் என்றால் பசு ஏறும் பிராட்டி - திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர் உண்டு.
** ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 611 - ஊதிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தானதன, பெயர், கடவுளே, எனக்கு, பெருமாளே, ரிந்து, தங்கள், தகிட, ஊதிமலை