பாடல் 312 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- ....
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன் றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங் கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும் பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங் கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதை புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும் புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும் புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப் புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும் பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும் பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோ அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும் பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம் பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாக அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன் றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன் றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந் தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ் சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன் தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந் தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ் சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந் தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. |
பருத்த கிரவுஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அன்று அசுரர்களின் படையை அழித்து, அந்த இதழ்களை உடைய தாமரை மலரில் இருக்கும் பிரமனை முன்பு தலையில் குட்டி, கை விலங்கு இட்டு, தேவர்களைக் காத்து ஆண்ட தெய்வம் அவன். அன்பு கொண்டு கற்றறிந்த பெரியோர்கள் வலம் வரும் பெரிய துதிக்கையை உடைய கற்பக விநாயகர் முன்பு தனது கையைப் பற்றி அழைத்துச் செல்ல, நடை கற்ற ஒருவனாகிய (முருகன்) உலகுக்குத் தந்தை அவன். தினைப் புனத்தில் இருந்த இளமைப் பருவத்துக் கிளி போன்ற வள்ளிக்கு காதல் மொழிகளைச் சொன்ன காவலன் அவன். பக்தர்களுக்குத் துணையாக நிற்கும் புதியோன் அவன். வெட்சிப் பூ மணம் வீசும் பல கனத்த புயங்களை உடையவன் அவன் என்னும் வகையில் (முருகனைப் பற்றிய) சொற்களையே கற்று, பிறர் சம்பந்தமான சொற்களைக் கற்க வேண்டும் என்கின்ற பற்று ஒழிந்து, அர்த்தத்தில் கரும்பு போல் இனித்து நிற்கும் குணம் அமைய, செய்யுள் தோறும் பொதியப் படுவதாகிய ஒப்பற்ற செல்வத்தை நான் அடைவேனோ? நெருப்பை வீசும் சிவந்த கண்களை உடைய அஷ்ட திக்கஜங்களும் (எட்டுத் திக்கு யானைகளும்) தன்னோடு சண்டை செய்ய, (தன் மார்பில்) ஒடிந்து போன எட்டுக் கொம்புகளின் நுனித் துண்டுகளை அணிந்த அழகிய ஒப்பற்ற மார்பினனும், பலத்துடன், அடியோடு பற்றி பொன்னாலாகிய கயிலை மலையை பிடுங்கப் புகுந்த போது, அந்த மலை போன்ற புயங்கள் இருபதும் நெரிப்பு உண்டவனும், அப்படி நசுக்கும் தனது (சிவனது) ஒப்பற்ற பெரு விரலின் எள் நுனி அளவுக்கும் ஈடாகாதவனும், வீர உக்ரம் கொண்ட அரக்கனும், பத்து முகத்தினனும் ஆகிய இராவணனுடைய கைகளுக்கு வாள் ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவனுமாகிய சிவபெருமானும், தேவி பார்வதியும் இருவரும் பக்கத்தில் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும் (அர்த்தநா¡£சுரர் விளங்கும்) மலையாகிய திருச்செங்கோடும், தெற்கே உள்ள தலமாகிய சுவாமி மலையும், திருத்தணிகையும் நீ இருக்கும் தலங்களாகப் பெற்று, காஞ்சீபுரத்தில் நிற்கின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 312 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அவன், நிற்கும், தத்தத், உடைய, இருக்கும், தனதனந், தத்தன, தத்தம், ஒப்பற்ற, பற்றி, வீசும், தனது, அந்த, கற்பக, பெருமாளே, முன்பு