பாடல் 286 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் -....; தாளம்
-
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத் ...... தனதான |
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப் புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற் பொழியத் தென்றல்துரக் ...... குதலாலே தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத் திரியத் திங்களுதிப் ...... பதனாலே செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த் தெரிவைக் குன்குரவைத் ...... தரவேணும் அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித் தருமைக் குன்றவருக் ...... கெளியோனே அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித் தயில்கைக் கொண்டதிறற் ...... குமரேசா தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித் தழுவிக் கொண்டபுயத் ...... திருமார்பா தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத் தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே. |
போர் புரிவதற்கு உரிய மலர்ப் பாணங்களின் கொத்துடன் நெருங்கிச் சண்டை செய்ய வந்த, கரும்பு வில் ஏந்திய, மன்மதன் செலுத்தும் இந்தப் புதுமை வாய்ந்த தாமரை அம்புகளால், புளகாங்கிதம் கொண்ட மார்பகங்களில் நெகிழ்ச்சி ஏற்பட்ட பூந்தாதுகள் நெருப்பை வீச, தென்றல் காற்று சோர்வடையச் செய்ய, வீதியில் பெண்கள் மிகுதியாகப் பகை கொண்டு வசைமொழி பேசி சண்டையிடுவதற்காக அங்குமிங்கும் திரிய, நிலா உதித்து (எரிக்கும்) கிரணங்களை வீசுவதாலே, செயல் எதுவும் செய்ய முடியாமல், இங்கு படுக்கையில் தூக்கம் இல்லாமல் அச்சத்துடனும் சோர்வுடனும் கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உன் குரா மாலையைத் தந்து அருள வேண்டும். நீரருவி விழும் வள்ளி மலை முழுவதும் (வள்ளி வாழ்ந்திருந்தமையால் புனித நிலமாகப்) போற்றித் திரிந்து செந்தினைப் பயிரை விதைத்திருந்த அருமையான வேடர்களுக்கு மிக எளிமையாக நின்றவனே, அசுரர்களுக்கு அங்குப் பகைவனாய் நின்று, தேவர்களுக்கு உரிய உலகை அவர்களுக்குக் கொடுத்து, வேலாயுதத்தைக் கையில் கொண்ட வலிமை வாய்ந்த குமரேசனே, (கற்பக) மரங்கள் வைத்துள்ள அமராவதி நகரில் லக்ஷ்மி போல் இருக்கும் தேவயானையை போய்ச் சேர்ந்து தழுவிக் கொண்ட புயங்களைக் கொண்ட அழகிய மார்பனே, முத்தும், சங்குகளும் வயல்களில் கூட்டமாகக் கிடக்கும் திருத்தணிகையில் வீற்றிருந்து செங்கழு நீர் மலரைப் புனையும் பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், தென்றல் காற்று, வசை மொழி பேசும் பெண்கள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 286 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தனனத், தந்ததனத், செய்ய, தென்றல், காற்று, பெண்கள், வள்ளி, கிடக்கும், இந்தப், தழுவிக், பெருமாளே, உரிய, மன்மதன், வாய்ந்த