பாடல் 197 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானான தாதன தான தந்தன தானான தாதன தான தந்தன தானான தாதன ...... தனதான |
வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழி யோலை தங்கிய வார்காது வாவிட வான இன்சுதை மேலான வாயித ...... ழமுதூறத் தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார் தோத கந்தனை மாமாயை யேவடி வாக நின்றதெ னாஆய வோர்வது தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே கார ணந்தனை யோராநி சாசரர் தாம டங்கலு மீறாக வானவர் காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா கார்வி டந்தனை யூணாக வானவர் வாழ்த ரும்படி மேனாளி லேமிசை காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே ஆர ணன்றனை வாதாடி யோருரை ஓது கின்றென வாராதெ னாவவ னாண வங்கெட வேகாவ லாமதி ...... லிடும்வேலா ஆத வன்கதி ரோவாது லாவிய கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே. |
யானைக்கு ஒப்பான பெரிய மார்பகங்களின் மேல் அணிந்துள்ள ஆபரணமாகிய முத்து மாலையின் பேரொளியும், பூரண சந்திரனுக்கு ஒப்பான சிறந்த முகம் அழகு மிகுந்து பொலியவும், காண்போருக்கு மிக்க வருத்தம் தர வல்ல, சேல் மீன் போன்று நீண்ட கண்கள் ஓலை பூண்டுள்ள அகன்ற காதுகளைத் தாக்கி நிற்கவும், தேவர்களது இனிய அமுதத்திலும் மேலான இனிமையுடன் வாயிதழ்கள் அமுதத்தைப் பொழியவும், அலங்காரத் தோரணங்களுக்குப் பயன்படும் குலை தள்ளிய வாழையை நிகர்க்கும் தொடையின் மேல் விளங்கும் இடை மெல்லிய நூலுக்கு ஒப்பாக உலாவி, மயில் என்று சொல்லும்படி அழகாக ஊர்ந்து செல்லும் அன்னத்துக்கு ஒப்பான நடையுடன் விளங்கும் விலைமாதர்களின் வஞ்சகச் செயலை பெரிய மாயையே வடிவு கொண்டு நிற்கின்றது என ஆய்ந்து அறியும் அறிவு எனக்குத் தோன்றும்படி அடியேனுடைய உள்ளத்தில் நீ அருள் பாலிப்பாயாக. (முருகவேள் எதற்காகப் படையெடுத்து வந்துள்ளார் என்னும்) காரணத்தை ஆய்ந்து அறியாத அசுரர்கள் எல்லாரும் முடிந்து அழியவும், தேவர்களின் அரசனான இந்திரன் தன் பொன்னுலகத்தை ஆளவும், வேலைச் செலுத்திய வீரனே, தேவர்கள் வாழும்படி, முன்பு ஒரு நாள் கரிய (ஆலகால) விஷத்தை உணவாக உண்டவரும், கருநீலகண்டத்தை உடையவருமான சிவ பெருமான் தந்து அருளிய முருகனே, வேதம் வல்ல பிரமனுடன் வாதம் செய்து, ஒரு சொல்லுக்கு (பிரணவத்துக்கு) உரை ஓதுக என்று அவனைக் கேட்க, வாராது என்று கூறி விழித்து நிற்க, அவனுடைய ஆணவம் அழிய, பிரமனைச் சிறையில் வைத்த வேலனே, சூரியனுடைய ஒளி நீங்காது எப்போதும் வீசுகின்ற கோபுரங்கள் விளங்குவதும், லக்ஷ்மி தேவி விரும்பி வாசம் செய்வதுமான திருவாவினன் குடியில் (பழநியில்) வீற்றிருப்பவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 197 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, ஒப்பான, தாதன, தானான, வல்ல, ஆய்ந்து, மேல், விளங்கும், பெருமாளே, ணந்தனை, மேலான, வானவர், பெரிய