பாடல் 181 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த ...... தனதான |
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும் இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள் செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர் பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே. |
நறு மணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் ஏவி விட, செய்த வினையின் பயனை அனுபவிக்க, மாலை நேரத்து சந்திரனைப் போன்ற வடிவத்துடன் (இவ்வுலகில்) பிறந்து, முன் செய்த கொடு வினைகளால் வந்த வகையை மறந்து, எழுந்து (தாயின்) முலைப் பாலைப் பருகி அழகிய குழந்தையாக வளர்ந்து, மலை போல் வடிவை அடைந்து, பெரிய காம மயக்குடன் வாடி, பொது மகளிருடைய வீடுகளில் புகுந்து இரவும் பகலும் அதே வேலையாயிருந்து, ஒடுங்கி அசடன் நான் நல் வினை, தீ வினை இரண்டும் சார்ந்த இந்தப் பிறப்பு, இறப்பு என்பவற்றை விட்டொழித்து உனது இரண்டு திருவடிகளைத் தொழும் பேற்றை என்று அடைவேனோ? லக்ஷ்மியாகிய சீதையோடு (அயோத்தி நகரை விட்டு) நீங்கி இருள் மிகுந்த காட்டில் நடந்து, இலங்கை நகரை விளங்கும் நெருப்புக்கு இட்ட குரங்காகிய அனுமனைக் கை விடாத திடமான கருணை உள்ள ராமர், கம்சன் அனுப்பிய நய வஞ்சகச் சூழ்ச்சிகளை கூர்மையாக உணர்ந்து, அவைகளை வென்ற அறிவாளர் கிருஷ்ணர், அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும்*, பரம பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே, தாமரையின் மீது வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.
* குபேரன் புத்திரர்களான நளகூபரன், மணிக்¡£வன் என்ற இருவரும் மது அருந்தி, ஜலக்¡£டை செய்து, நாரதர் முன் மரம் போல் நிற்க, அவர் நீங்கள் மரமாகவே நிற்பீர் என்று சபித்தார். ஆகவே இருவரும் மருத மரங்கள் ஆயினர். யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து மரங்களுக்கு இடையே செல்ல, மரங்கள் முறிந்து விழுந்து, சாபம் நீங்கினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 181 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதனன, மிகுந்த, நகரை, மருத, தவழ்ந்து, மரங்கள், இருவரும், வினை, இடையே, முன், வென்ற, வந்து, றந்து, வந்த, பெருமாளே, செய்த, வீற்றிருக்கும், போல்