பாடல் 18 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் - .......
தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன ...... தனதான |
மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தியென் கின்றமடு ...... விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய் பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே. |
வாசனைபொருந்திய அழகிய பூங்கொத்துக்களின் மீது தெந்தனம் தெந்தனம் என்று ¡£ங்காரம் செய்து கொண்டு வண்டுக் கூட்டங்கள் தேனை உண்ணப்பார்த்து தொடரும்படியான கூந்தலையுடைய பெண்களது நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி போன்ற இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, ஆசை மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த, அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக, சா£ரம் மோகவசத்தால் குழைந்து போக, வயிறு என்னும் மடுவில் விழுகின்ற அடியேனை சிலம்பும், பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும், அழகிய கடப்ப மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய். பன்றியின் அழகிய கொம்பையும்*, ஆமை ஓட்டையும்**, பாம்பையும், தேவர்களது பழைய எலும்புகளையும் தரிக்கும்
*** சிவபிரானின் பாலனே, கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப்பிள்ளைகள் கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து ஐங்கரன் விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற, வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே, குன்றுகளில் வசிப்பவர்களாகிய வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு வளர்ந்து ஓங்கிய செண்பக மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள் மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும், சந்திரனும், செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும் ஆகிய அழகிய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
* விஷ்ணு வராக அவதாரம் செய்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றபின் தருக்குற்றுத் திரியும்போது, முருகன் வராகத்தை அடக்கி கொம்பைப் பறித்து சிவனிடம் தர, அவர் அதனை மார்பில் அணிந்தார் - வராக புராணம்.
** கூர்மாவதாரம் செய்து மந்தரமலையைத் தாங்கி விஷ்ணு அமிர்தத்தை மோகினியாக வந்து தேவர்களுக்கு விநியோகித்த பின், ஹரிஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார். பின்னர் கூர்மம் செருக்குற்று உலகத்தையே அழிக்கப் புக, சிவபிரானின் ஆணையால் ஐயப்பன் கூர்மத்தை அடக்கி அதன் ஓட்டைப் பெயர்த்து சிவனிடம் வைக்க அதனை தம் மார்பில் தரித்தார் - கூர்ம புராணம்.
*** பிரளய காலத்தில் சிவபிரான் ஸர்வ ஸம்ஹாரம் செய்தபின் தன் பக்தர்களாகிய பிரம்மாதி தேவர்களின் எலும்புகளையும் எலும்புக் கூட்டையும் 'கங்காளம்' மாலையாக அன்புடன் தரித்தார் - கந்த புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 18 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, மார்பில், புராணம், தந்தனந், கொண்டு, செய்து, தந்ததன, சிவனிடம், அடக்கி, தரித்தார், ஐயப்பன், வராக, சிவபிரானின், தெந்தனம், பெருமாளே, எலும்புகளையும், மீண்டும், வந்து, விஷ்ணு