பாடல் 173 - பழநி - திருப்புகழ்

ராகம் - வஸந்தா; தாளம் -
அங்கதாளம் - 6 1/2
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன ...... தனதான |
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு பயிலப்பல காவி யங்களை ......யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர் பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல் சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன் தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள் அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே. |
இத்தன்மைத்து என்று சொல்ல அரியதான செந்தமிழ் இசையில் சில பாடல்களை மெய்யன்போடு கற்றுக்கொள்ள பற்பல தமிழ்க் காவியங்களைத் தெரிந்து கொள்ளாமல், பவளத்தையும் வீழிப்பழத்தையும் போன்று சிவந்த வாயை உடைய பெண்களின் (காமநோயால் ஏற்படும்) நிறமாற்றம் உண்டாக்கும் விரக வேதனையால், சகர மைந்தர்களால் தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமியிலே இவ்வண்ணமாகவே மோகவசப்பட்டு அலைந்து திரிந்து, சுழற்காற்றில் அகப்பட்ட சருகுபோல் மனம் மிகவும் சோர்ந்து, எனது உடல் மெலிந்து அழிவதற்கு முன்னாலே, 'தகதித்திமி தாகி ணங்கிண' என்ற தாளத்திற்கு ஏற்ப நடனமிட்டு எழுகின்ற தோகையுடைய அழகிய குதிரை போன்ற மயில்மீது அற்புதமாக வந்து திருவருள் புரிவாயாக. இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான் பேறறிவு தரும் என்று உமாதேவி சொல்லி அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய வேதங்களெல்லாம் போற்றுகின்ற புகழையுடைய திருக்குமாரன்* இவன்தான் என ஏத்தும் இளைய குமாரனே, நுனிப்பல் கூர்மையான முதலை வலியப் போராடிய கஜேந்திரன் என்ற யானைக்குத் திருவருள் செய்து காத்திட ஒரு நொடியில் கருணையோடு வந்த திருமாலின் மருமகனே, அகரம், உகரம், மகரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியதும், எல்லா மந்திரங்களுக்கும் முதல் அக்ஷரமாக இருப்பதுமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தத்துவத்தை சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்த குருநாதனே, தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் வழிபட்டுப் போற்றிய பழநி மலைக்கடியில் உள்ள திருவாவினன்குடித் தலத்தில் நீங்காது வாசம் செய்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே.
* உமாதேவியின் ஞானப்பாலாகிய சிவஞானத் திரு அமுதை உண்டதால் முருகனை ஞான பண்டிதன் என்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 173 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத்தன, தந்தன, திருவருள், செய்து, அழகிய, ணங்கிண, தகதித்திமி, தாகி, பெருமாளே