பாடல் 1081 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த தனதன தத்த தந்த ...... தனதான |
மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய் படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே. |
விலைமாதர்களுடைய எச்சிலை உண்டு, கையில் உள்ள மூலப்பொருளை அவர்கள் பொருட்டுச் செலவழித்து ஒழித்து, மறு பிறப்புக்கு ஏதுவான செயல்களில் அலைச்சல் உற்று, அழகாய் இருந்த உடம்பு வர வர இளைத்து, காய்ந்து வாடி, புணர்ச்சிச் செயல்களில் மீண்டும் ஈடுபடத் துணிந்து, நான் சோர்வு அடைவதற்கு முன்பாக என்னை நீ ஆண்டருள்க. படம் கொண்ட (ஆதி சேஷன் என்னும்) பாம்பாகிய படுக்கையை மிகத் தக்க இடம் இது என்று கொண்டு அதில் பள்ளி கொண்ட கரிய மேகம் போன்ற திருமாலுக்குப் பிரியமான மருகனே, அகத்திய முனிவர் கற்க*, அன்று தமிழ் ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய வள்ளி நம்பித் தொழும் பெருமாளே.
* அகத்தியர் சிவபெருமானை வணங்கி தமிழ் ஞானம் வேண்ட, அவர் முனிவரைத் திருத்தணிகை முருகனை அணுகுமாறு பணித்தார். அங்ஙனமே அகத்தியர் முருக வேளைப் பூஜித்துத் தமிழ் ஞானம் பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1081 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தமிழ், தந்த, தத்த, அகத்தியர், ஞானம், அவர், செயல்களில், பெருமாளே, கொண்ட