பாடல் 1078 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் ...... தனதான |
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக் கூன்போந் ...... தசடாகுங் குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக் கோண்பூண் ...... டமையாதே பொடிவன பரசம யத்துத் தப்பிப் போந்தேன் ...... தலைமேலே பொருளது பெறஅடி நட்புச் சற்றுப் பூண்டாண் ...... டருள்வாயே துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச் சூழ்ந்தாங் ...... குடனாடத் தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோந்தாந் ...... தரிதாளம் படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப் பாழ்ங்கான் ...... தனிலாடும் பழயவர் குமரகு றத்தத் தைக்குப் பாங்காம் ...... பெருமாளே. |
கொடுமையான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்றும், உடலில் பொருந்தி வரும் ஒரு மிக வேடிக்கையான மாறுபட்ட நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவு பெறும் மற்ற சமயக் கூச்சல்களிலிருந்து பிழைத்து வந்துள்ள என் தலை மீது, மெய்ப் பொருளை நான் பெற, உனது திருவடியை அன்பு கொஞ்சம் வைத்து ஆண்டு அருள்வாயாக. உடுக்கை வாத்தியம் ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தைப் படியப் போடுகின்ற பதி விரதையாகிய பார்வதி (அதற்குத் தகுந்தபடி) ஒத்திட்டு ஒலிக்க, தூய சுடு காட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபெருமானுடைய குமரனே, குறப்பெண்ணாகிய வள்ளிக்குத் துணைவனான பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1078 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஒலிக்க, தொகு, திகு, எடுத்தும், பெருமாளே, தத்தத், தொக்குத், திக்குத், தனதன