பாடல் 1 - விநாயகர் துதி - திருப்புகழ்

ராகம் - நாட்டை; தாளம் - ஆதி
தந்தன தனதன தந்தன தனதன தந்தன தனதன ...... தனதான |
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக ...... னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே (தி 1) முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை ...... இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் ...... பெருமாளே. |
கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.
* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1 - விநாயகர் துதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தனதன, அந்தத், சிவபெருமான், அந்தச், பெருமாளே, கற்பக, எழுதிய, மகனும்