திருமந்திரம் - ஆறாம் நூற்றாண்டு
திருமந்திரத்தின் பாடுபொருள்
சைவ சமயத்தின் தத்துவத்தைச் சைவசித்தாந்தம் என்பர். பதி, பசு, பாசம் என்ற மூன்றும் இச்சித்தாந்தத்தின் அடிப்படைக் கூறுகள். (பதி - இறைவன்; பசு - உயிர்கள்; பாசம் - ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்). திருமந்திர நூலின் பெரும் பகுதி சைவ சமயத் தத்துவங்களை விளக்குவது. அத்துடன், எல்லாருக்கும் பொதுவான அறக் கருத்துகளும் இதில் உள்ளன. அன்புடைமை, அருள் உடைமை, நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலானவை இவற்றுள் சிலவாகும்.
இந்நூலின் முதல் நான்கு தந்திரங்கள் சிவஞானத்தைப் பெற விரும்புவோர் அதற்குத் தம்மைத் தகுதியாளராக்கிக் கொள்ளுதற்கு உரிய வழிகளை விளக்குகின்றன.
ஐந்தாவது தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விவரிக்கின்றது. ஆறு முதல் ஒன்பது இறுதியான தந்திரங்கள் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கனவாக உள்ள நல்ல பயன்கள் பற்றி உணர்த்துகின்றன.
ஆசனம், பிராணாயாமம், தியானம், சமாதி முதலியன பற்றியும், எண்பெரும் சித்திகள் பற்றியும், உடம்பைப் பேணிக் காக்கும் வழி பற்றியும் இந்நூல் விளக்கியுள்ளது.
சைவ சமயத்தின் நான்கு பிரிவுகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகள், அந்த நெறிகளில் நிற்பார் அடையும் நான்கு நிலைகள் ஆகியன ஐந்தாவது தந்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன.
இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, பாசத்தின் பண்பு, குருவின் இன்றியமையாமை, நல்வினை தீவினைகள், இவற்றின் நீக்கம், ஞானம் கைவரப்பெற்ற சிவயோகிகளின் பெருமையும், தன்மைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. திருமந்திரம் கூறும் தத்துவங்களில் சிலவற்றை இங்கே பார்த்தோம்.
திருமந்திரச் சிந்தனைகள்
திருமந்திரம் உலகுக்கு வழங்கும் உயர்ந்த கருத்துகள் மிகப் பல. சான்றுக்குச் சில மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
அன்பும் சிவமும் ஒன்றே
அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும், அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மையென்றும், இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் என்றும் கூறுகின்றார் திருமூலர்.
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே. |
இரு கோயில்கள்
உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.
தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே |
(பகவன் = கடவுள்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமந்திரம் - Thirumanthiram - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயில், திருமந்திரம், அன்பே, நூற்றாண்டு, ஆறாம், ஒன்று, நான்கு, பற்றியும், நடமாடும், நடமாடக், படமாடக், தகவல்கள், ஞானம், தமிழ்நாட்டுத், இலக்கிய, நூல்கள், தமிழ், ஆரும், கோயில்கள், திருமூலர், tamil, சிவமாய், சிவமாவது, century, நம்பர்க்கு, | , பகவற்கு, thirumanthiram, கோயிலான, சென்று, என்றும், சிவம், இறைவன், உயிர்கள், தந்திரங்கள், பாசம், என்பர், information, சமயத்தின், ஐந்தாவது, list, அன்பு, வேறு, சிவமும், அன்பும், literatures, இயல்பு, tamilnadu