முத்தொள்ளாயிரம் - ஆறாம் நூற்றாண்டு
பெயர்க்காரணம்
இந்நூலின் பெயர் இருவகைகளில் விளக்கப்படுகிறது. மூன்று வேந்தர்களையும் பற்றிய 900 பாடல்கள் கொண்டது என்பது ஒரு சாரார் கருத்து. மூவேந்தருள் ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது என்பது இன்னொரு சாரார் கருத்து. இவ்விரண்டாவது கருத்தின் படி இந்நூலுக்குரிய செய்யுட்கள் 2700 ஆகும்.
இவற்றுள் முதற் கருத்தே ஏற்புடையது என்கின்றார் இலக்கண விளக்கத்தின் ஆசிரியர். எண் இலக்கியத்திற்கு உதாரணம் கூறும்போது, அது பத்து முதல் ஆயிரம் பாடல்கள் கொண்டது என்று குறிப்பிட்டு, அரும்பைத் தொள்ளாயிரம் என்பதனையும் முத்தொள்ளாயிரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியர்
இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர், பதினெண்கீழ்க்கணக்கு நூலாசிரியர்களோடு முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியரையும் சேர்த்துப் பிற சான்றோர் எனக் குறிப்பிட்டார். எனவே இவர் சங்கப் புலவர் அல்லர் என்பது வெளிப்படையாகும். ஆராய்ச்சி அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். இந்நூலின் உள்ள சில அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார்.
நூலாசிரியர் சமயம்
இந்நூலின் கடவுள் வாழ்த்து, சிவபெருமான் பற்றியது. சிவபெருமான் நாள்மீன்களையும், திங்களையும், சூரியனையும் படைத்தவன் என்றும், ஆனால் உலகம் அவனை ஆதிரையான் என்பது வியப்பானது என்றும் கூறுகின்றார் ஆசிரியர். மேலும், தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் பாட்டு, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானைக் கடப்ப மலர் தூவிப் பாடிப் புகழ்தலை ஒத்தது என்கிறார். இதனால் இவர் சைவ சமயச் சார்புடையவர் என்பது விளங்கும்.
பாடுபொருள்
முத்தொள்ளாயிரம் மூவேந்தர் புகழ்பாடுவது என்று முன்பே கூறப்பட்டது. மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள் குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும், பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ் பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும் புகழப்பட்டுள்ளன. மன்னர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப் பிரிவை இவ்வாசிரியர் பயன்படுத்தியுள்ளார். இடைக்காலத்துச் சமயச் சான்றோர்கள் இம்மரபைப் பின்பற்றியது நினைவிருக்கலாம். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அகத்துறைகளைப் பயன்படுத்தி ஆன்மா இறைவனோடு கூடுவதற்குத் துடிக்கும் துடிப்பினை வெளியிட்டனர். அம்மரபினைப் பின்பற்றிய முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியரும் சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூன்று வேந்தர்களின் பாலும் தமக்குள்ள அன்பினை, ஒருதலைக் காதல் கொண்ட பெண்களின் கூற்றாகப் பாடி வெற்றி கண்டுள்ளார். இந்நூலின் பெரும் பகுதி பெண்பால் கைக்கிளையாகவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைக்கிளைப் பாடல்
இந்நூலின் பெரும்பாலான செய்யுட்கள் கைக்கிளை சார்ந்தன என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்றை இங்கு உதாரணமாகக் காணலாம்.
பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப் பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல் கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள். இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:
உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக் கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு (60) |
(செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; பசப்பு = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்தொள்ளாயிரம் - Muthollayiram - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இந்நூலின், என்பது, முத்தொள்ளாயிரம், என்னும், நூற்றாண்டு, ஆறாம், தமிழ்நாட்டுத், நூல், மூன்று, தகவல்கள், நூல்கள், ஆசிரியர், இலக்கிய, தமிழ், சமயச், மன்னர்களின், பாட்டு, சிவபெருமான், என்றும், அவனை, மறம், கொண்ட, காதல், அறியாத, பணைத்தோள், பசப்பு, | , கண்கள், பசலை, பாண்டியன், இவர், பெரும், கைக்கிளை, சாரார், tamilnadu, information, புகழ், list, literatures, muthollayiram, century, tamil, குறிப்பிட்ட, முத்தொள்ளாயிரம், செய்யுட்கள், என்கின்றார், நூலாசிரியர், தொள்ளாயிரம், கருத்து, பெயர், பாடல்கள், கொண்டது, முத்தொள்ளாயிரத்தின்