திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
வேடசந்தூர் :
இது குடகனாற்றின் கரையில் இருக்கிற சிறு நகரம். திண்டுக்கல்-கரூர் சாலையில், பழனியிலிருந்து வடமதுரைக்குச் செல்லும் சாலை சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. வேடர்களின் சந்தை இந்த ஊரில் கூடிய காரணத்தால் வேட சந்தையூர் என்றாகி, பின் வேடசந்தூர் என மருவி வழங்குகிறது. புகையிலை விளைச்சலில் வேடசந்தூர் சிறப்பான இடத்தை வகிப்பதால், இந்திய அரசின் புகையிலை ஆராய்ச்சிக் கூடம் இங்கு அமைந்துள்ளது. இங்கு கோட்டை ஒன்றின் இடிபாடுகள் காணப்படுகின்றன. அக் கோட்டை அருகே தர்கா ஒன்றும் உள்ளது.
காசிப்பாளையம் :
வேடசந்தூரிலிருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூரில் வேளாண் தொழில் செய்யும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அதிகமாக வாழ்கின்றனர். நெடுஞ்சாலையில் காந்தியடிகள் பெயரால், கிராமக் கைத்தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி :
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்பட்டியில் பாண்டிய காலத்துப் பெரு மாள் கோவில் இருக்கிறது. இது காசிப் பாளையத்திற்கு தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.
ரங்கமலை :
கல்வார்பட்டிக்கும் பள்ளப்பட்டிக்கும் இடையே ரங்கமலை உள்ளது. இப்பகுதியின் மலை கூம்பு வடிவமாகக் காணப்படுகிறது. மிக உயரமானது. மலையின் உச்சியில் விளக்குக் கம்பம் உள்ளது. அதன் கீழே பாண்டியர் காலத்துச் சிவன் கோவில் விளங்குகிறது. செங்குத்தான இம்மலை மீது ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும்
நூ ற்றுக்கணக்கானோர் மலைமீது ஏறி இறைவனைத் தரிசித்து திரும்புவர். இம்லையில் மூலிகைகள் அதிகமாதலால் சிலர் தேக நலம் கருதி மலையில் சிலநாள் தங்கிச் செல்வதும் உண்டு.
வடமதுரை :
இவ்வூர் திண்டுக்கல்லுக்கு வடக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒன்றியத் தலைநகராய் விளங்குகிறது. இரயில் நிலையம் இருக்கிறது. இங்குள்ள செளந்தரராச பெருமாள் கோயில் புகழ்பெற்றது. ஆடிப் பெளர்ணமி தினத்தில் தேர்த்திருவிழா நிகழும். இவ்வூர் மாட்டுச் சந்தைக்குப் பெயர் பெற்றது. இப்பகுதி செம்மண் பூமியாதலால், கேணி வசதிப் பகுதிகளில் தோட்டப் பயிர்களும், நெல்சாகுபடியும் நடைபெறுகின்றன.
துவரை, வேர்க்கடலை இரண்டும் பயிராகின்றன.
நெய்க்காரப்பட்டி :
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜமீன்தார்களான நாயக்கர்கள் இங்கு தொன்றுத் தொட்டு பயிர்த்தொழிலில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களால் பராமரிக்கப்படும் மாட்டுப் பண்ணைகள் காங்கேயம் பண்ணைக்கு நிரானவை.
பாலசமுத்திரம் :
அகோபில வரதராஜப் பெருமாள் கோவில், நெய்க்காரப்பட்டி ஜமீனின் அரண்மணை,செழிப்பான மண்வளம் இவற்றால் புகழ் கொண்ட இவ்வூரை வாலசமூத்திரம் எனக் குறிப்பிடுவர். இது பழனியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது வாழை, ஆரஞ்சு, காப்பித் தோட்டங்கள் அதிகமாகத் தென்படுகின்றன. இங்கிருந்த ஒரு கோட்டை ஹைதர் அலியால் சேதமுற்றது. இவ்வூர் துப்பட்டி நெசவுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது.
கோதைமங்கலம் :
பழனிக்கு வடமேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூர் பழனியைச் சுற்றியுள்ள எட்டு மங்கலங்களுள் இது முதலாவதாகக் கருதிப் போற்றப்படுகிறது. விஜயதசமி அன்று திருவிழா நடைபெறுகிறது. பழனி தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தி இவ்வூருக்கு எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வர். பழனிக்குச் செல்லும் கோதை வாய்க்கால் அருகிலுள்ள கல்லினை மயிலாடும் பாறை, பேகம் மயிலுக்குப் போர்வை வழங்கிய இடம் இதுவென்றும் கூறுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், உள்ளது, tamilnadu, இவ்வூர், மாவட்டங்கள், தமிழக, தொலைவில், இருக்கிறது, கோவில், கோட்டை, இங்கு, வேடசந்தூர், தமிழ்நாட்டுத், தகவல்கள், விளங்குகிறது, | , நெய்க்காரப்பட்டி, மலைமீது, பெயர், பெருமாள், புகையிலை, districts, dindigul, information, பழனியிலிருந்து, மாவட்டத்தில், செல்லும், ரங்கமலை