டெல்லி சுல்தானியம்
ஒவ்வொரு அங்காடியும் சஹானா-இ-மண்டி என்ற உயர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. தானியங்கள் தங்குதடையின்றி கிடைக்கும் விதத்தில் அரசு தானியக் கிடங்குகளில் போதிய இருப்பு வைக்கப்பட்டது. அனைத்து வகை பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதற்கென திவானி ரியாசத் என்ற தனித்துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நாயப்-இ-ரியாசத் என்ற அதிகாரியின்கீழ் அத்துறை செயல்பட்டது. ஒவ்வொரு வணிகரும் அத்துறையில் பதிவு செய்திருக்கவேண்டும். இந்த அங்காடிகள் செயல்படும் விதம் பற்றி சுல்தானுக்கு ரகசிய அறிக்கைகளை அனுப்புவதற்கு முன்ஹியான்கள் என்ற ரகசிய முகவர்கள் இருந்தனர். பல்வேறு பொருட்களின் விலை மற்றும் எடையை சரிபார்ப்பதற்கு சுல்தான் தனது அடிமைச் சிறுவர்களை அங்காடிகளுக்கு அனுப்பி பொருட்களை வாங்கிவரச் செய்வது வழக்கம். அங்காடி விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. கடைக்காரர் அதிக விலைக்கு விற்றாலோ, எடை குறைவாக இருந்தாலோ கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்ச காலங்களில்கூட ஒரே விலை என்பது உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் நடைமுறையிலிருந்த அங்காடி விதிமுறைகள் மாகாண தலைநகரங்களிலும், பிற நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.
அங்காடி சீர்திருத்தங்கள் தவிர நிலவருவாய் நிர்வாகத்திலும் அலாவுதீன் கில்ஜி கவனம் செலுத்தினார். நில அளவைக்கு ஏற்பாடு செய்த முதலாவது டெல்லி சுல்தான் அவரே. பெரும் நிலச்சுவான்தார்களும் நிலவரி செலுத்துவதிலிருந்து தப்ப முடியவில்லை. படைவீரர்களுக்கு ஊதியம் வழங்க வசதியாக, நிலவரி பெரும்பாலும் பணமாகவே வசூலிக்கப்பட்டது. வருங்காலத்தில் ஷெர்ஷா, அக்பர் போன்றோர் மேற்கொண்ட நிலவருவாய் சீர்திருத்தங்களுக்கு அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
படையெடுப்புகள்
மங்கோலியருக்கெதிராக அலாவுதீன் கில்ஜி ஆறுமுறை படைகளை அனுப்பி வைத்தார். ஆனால், மூன்றாவது படையெடுப்பின்போது மங்கோலியத் தலைவர் குவாஜா டெல்லிவரை முன்னேறினார். இருப்பினும் தலைநகருக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டார். அடுத்த படையெடுப்புகள் மூன்றிலும் மங்கோலியர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். வடமேற்கு எல்லைப்புறத்தில் கோட்டைகள் கட்டப்பட்டன. அங்கு பாதுகாப்புக்கான படைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , வரலாறு, டெல்லி, அங்காடி, இந்திய, சுல்தானியம், விலை, அலாவுதீன், கில்ஜி, சுல்தான், ரகசிய, படையெடுப்புகள், அனுப்பி, நிலவரி, நிலவருவாய், கடுமையான, ரியாசத், அவர், ஊதியம், இந்தியா, பொருட்களின், டெல்லியில், ஒவ்வொரு, தானியங்கள், செயல்பட்டது