டல்ஹவுசி பிரபு
கல்வி வளர்ச்சியிலும் டல்ஹவுசி தனது கவனத்தை செலுத்தினார். சர் சார்லஸ் உட் என்பவரின் 1854 ஆம் ஆண்டு 'கல்வி அறிக்கை' 'இந்தியாவின் அறிவுப்பட்டயம்' எனக் கருதப்படுகிறது. தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்ற அனைத்து நிலை கல்வி வளர்ச்சிக்கும் ஒரு செயல் திட்டத்தை இது அளித்தது. சார்லஸ் உட் கருத்துக்கள் முழுவதையும் டல்ஹவுசி ஒப்புக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். கல்வித் துறைகள் சீரமைக்கப்பட்டன. கல்கத்தா, பம்பாய், சென்னைப் பல்கலைக் கழகங்கள் 1857 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன.
பொதுப் பணித்துறை
டல்ஹவுசி காலத்திற்கு முன்பு பொதுப் பணித்துறையின் அலுவல்களை ராணுவ வாரியம் கவனித்து வந்தது. டல்ஹவுசி தனியாக ஒரு பொதுப் பணித்துறையை ஏற்படுத்தி, கால்வாய்கள் வெட்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் கூடுதல் நிதியை ஒதுக்கினார். 1854ல் மேல் கங்கைக் கால்வாய் பணி நிறைவடைந்தது. பல பாலங்கள் கட்டப்பட்டன. பொதுப்பணித் துறையை நவீனப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் பொறியியல் பணித்துறைக்கு டல்ஹவுசி அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
டல்ஹவுசி பற்றிய மதிப்பீடு
1856ல் டல்ஹவுசி இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பினார். அடுத்த ஆண்டிலேயே சிப்பாய் கலகம் வெடித்தது. அதற்கு அவரது இணைப்புக் கொள்கையே காரணம் என விமர்சிக்கப்பட்டது. இந்தியாவில் ஓயாமல் பணி செய்தமையால், நோய்வாய்ப்பட்ட டல்ஹவுசி 1860ல் இறந்தார். அவர் ஒரு திறமையான ஆட்சியாளர். தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் இந்தியாவின் பரப்பை விரிவுபடுத்தி வலிமையை ஏற்படுத்தினார். பலதுறைகளிலும் வளர்ச்சிக்கான சகாப்தத்தை அவர் தொடங்கி வைத்தார். ரயில் பாதை மற்றும் தந்தித் துறைகளின் தந்தை என்று அவரைக் கருதலாம். இந்தியாவில் நவீன மயமாக்கலை அவர் தொடங்கி வைத்தார். 'நவீன இந்தியாவை உருவாக்கியவர்' என்றும் அவர் புகழப்படுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டல்ஹவுசி பிரபு , டல்ஹவுசி, வரலாறு, கல்வி, அவர், இந்தியாவின், இந்திய, பொதுப், பிரபு, தொடங்கி, நவீன, வைத்தார், சார்லஸ், இந்தியா, ஆண்டு, இந்தியாவில்