1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்
1857 ஆம் ஆண்டு கலகம் ஒடுக்கப்பட்டபோதிலும் அது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்தது. பிரிட்டிஷாருக்கு பரவலான எதிர்ப்பு இருப்பதை இது புலப்படுத்தியது. இந்திய சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிலிர்த்து எழுந்தனர். பொதுமக்களும்கூட ஆங்காங்கே ஆயுதமேந்தி போரிட்டனர். ஈட்டி, கோடரி, வில், அம்பு, கழி, கம்பு போன்ற கையில் கிடைத்த ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தினர். ஆனால், இத்தகைய பொதுமக்களின் பங்கு நாடு முழுவதும் காணப்படவில்லை. ஓரிரு இடங்களில் அவ்வப்போது மட்டுமே மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த மக்களின் பங்களிப்பு 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது. இக்கலகத்தில் காணப்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமையும் மற்றொரு சிறப்புக் கூறாகும்.
இக்கலகத்தினால் பல முக்கிய விளைவுகளும் ஏற்பட்டன. இந்திய ஆட்சியில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 1858 நவம்பர் 1ஆம் நாள் பேரரசியின் அறிக்கைப்படி பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்திய தலைமை ஆளுநர் அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்) என்று அழைக்கப்பட்டார். 1858 ஆண்டு சட்டப்படி கானிங் பிரபு இந்தியாவின் தலைமை அளுநராகவும் முதல் அரசுப் பிரதிநிதியாகவும் செயல்படும் நல்வாய்ப்பைப் பெற்றார்.
பேரரசியின் அறிக்கைப்படி 1858 நவம்பர் முதல் நாள் அலகாபாத்தில் கானிங் பிரபு புதிய அரசாங்கத்தை முறைப்படி அறிவித்தார். பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் 'மேக்னா கார்ட்டா' (உரிமை சாசனம்) என்று அழைக்கப்படுகிறது. புதிய பகுதிகள் இணைக்கப்படமாட்டாது. சமய சகிப்புத்தன்மை பின்பற்றப்படும். இந்திய அரசர்களின் உரிமைகள் மதிக்கப்படும் தனது குடிமக்களான ஐரோப்பியர், இந்தியர் அனைவரும் சமமாக நடத்தப்படுவர் என்று பல வாக்குறுதிகளை இந்த அறிக்கை வழங்கியது.
1857 ஆம் ஆண்டு கலகம் ஒரு சகாப்தம் முடிந்து மற்றொன்று தொடங்கியதைக் குறிப்பிடுகிறது. இந்திய வரலாற்றில் இரண்டு முக்கிய காலக் கட்டங்களை வேறுபடுத்திக்காட்டும் நிகழ்வாக இந்தக் கலகம் விளங்குகிறது. கலகத்துக்கு முன்பு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமைப் பண்பு வெளிப்பட்டது. கலகத்துப்பின், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய தேசியத்தின் வளர்ச்சி முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய, ஆண்டு, வரலாறு, பிரிட்டிஷ், முக்கிய, பேரரசியின், கலகம், பெருங்கலகம், அறிக்கைப்படி, அறிக்கை, பிரபு, நாள், தலைமை, கானிங், மக்களின், இந்தியா, இந்தியாவின், இந்தியாவில், ஆட்சியின், ஆட்சி, நவம்பர்