கள்வனின் காதலி - 6.இடிந்த கோட்டை
அந்த வேளையில் அந்தக் குளிர்ந்த சாலையில் பிரயாணம் செய்வதே ஒரு ஆனந்தம். அதிலும் குழந்தை உள்ளத்தின் குதூகலத்துக்குக் கேட்க வேண்டுமா? அபிராமி, 'ராதே கிருஷ்ண போல முகஸே' என்ற ஹிந்துஸ்தானிப் பாட்டு மெட்டில், தானே இட்டுக் கட்டிய பாட்டு ஒன்றை வெகு ஜோராகப் பாடிக் கொண்டிருந்தாள்.
"ஆலிலையின் மேல் துயிலுவான்
ஆழிவண்ணனென் அமுதனே
சாலையோரமே திரிவான்
ஜாடையாகவே - வருவான்"
அண்ணன், தங்கை இரண்டு பேரும் குழந்தைகளாய்ப் பட்டணத்தில் வளர்ந்த காலத்தில் அவர்களுக்கு பாட்டிலே பிரேமையும் பயிற்சியும் ஏற்பட்டிருந்தன. பின்னால், கிராமத்துக்கு வந்த பிறகு, அபிராமிக்குச் சங்கீதப் பயிற்சியை விருத்தி செய்து கொள்ளச் சௌகரியம் இல்லையென்றாலும், அங்கே இங்கே கேட்டும், கிராமபோன் பிளேட் மூலமும், ஏதாவது புதுசு புதுசாய்ப் பாட்டுக் கற்றுக் கொண்டுதானிருந்தாள்.
சங்கீதத்தின் சக்திதான் எவ்வளவு அதிசயமானது! குதூகலத்தை அநுபவிப்பதற்கு எப்படிக் கானம் சிறந்த சாதனமாயிருக்கின்றதோ, அது போலவே துக்கத்தில் ஆறுதல் பெறுவதற்கும் சங்கீதமே இணையற்ற சாதனமாயிருக்கிறது.
வண்டிக்குக் கொஞ்ச தூரத்துக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த முத்தையனும் பாடிக்கொண்டு தானிருந்தான்.
"எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசை கோட்டை கட்டி"
என்னும் வரிகளை அவனுடைய வாய் பாடிக் கொண்டிருந்தது. அவனது உள்ளத்திலோ ஒன்றின் மேலொன்றாக எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றிக் குமுறிக் கொண்டிருந்தன. எந்த ஊரிலே உள்ள ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும் அவனுடைய உற்ற துணைவர்களைப் போல் அவ்வளவு தூரம் அவனுடைய அன்பைக் கவர்ந்திருந்தனவோ, அந்த ஊரினுடைய மண்ணை உதறிவிட்டு அவன் இப்போது போகிறான். அதை நினைத்தபோது அவனுடைய கண்களில் ஜலம் துளித்தது. ஆனால், ஏதோ ஒரு வேலையென்று ஆகி, இனிமேல் பிற்கால வாழ்க்கையைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கலாம் என்பதை எண்ணியபோது, ஒருவாறு ஆறுதல் ஏற்பட்டது. கட்டிய ஆகாயக் கோட்டை எல்லாம் என்ன ஆயிற்று? பொலபொலவென்று உதிர்ந்து மண்ணோடு மண்ணாக அல்லவா போய்விட்டது? கல்யாணியின் வாழ்க்கையும் இவனுடைய வாழ்க்கையும் திட்டமாகப் பிரிக்கப்பட்டுப் போயின அல்லவா? இனிமேல் அவை ஒன்று சேர்வதைப் பற்றி நினைக்க வேண்டியதே இல்லை!
*****
இந்த எண்ணத்தைச் சகிக்க முடியாதவனாய் முத்தையன் விரைந்து நடந்து வண்டியின் முன்புறமாக வந்து வண்டிக்காரனைப் பார்த்து, "சுப்பராயா! நான் கொஞ்சம் வண்டி ஓட்டுகிறேன்; நீ இறங்கி நடந்து வருகிறாயா?" என்றான். வண்டிக்காரன் இறங்கியதும், தான் மூக்கணையில் உட்கார்ந்து மாடுகளை விரட்டு விரட்டென்று விரட்டினான்.வண்டிக்காரனுக்கு திகில் உண்டாகி விட்டது. அந்தச் சாலையோ ஆபத்தான சாலை. இரண்டு பக்கமும் கிடுகிடு பள்ளம். ஒரு புறம் நதிப் படுகை; மற்றொருபுறம் வாய்க்கால். மாடு கொஞ்சம் மிரண்டாலும் வண்டிக்கு ஆபத்துதான். இப்படிப்பட்ட நிலையில் இந்த முரட்டுப் பிள்ளையிடம் மூக்கணாங் கயிற்றைக் கொடுத்து விட்டோ மே என்று கதிகலங்கினான் வண்டிக்காரன். "ஐயா! ஐயா! நிறுத்துங்க ஐயா! கொஞ்சம் நிறுத்துங்க பிள்ளை! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்" என்று கூவிக்கொண்டே லொங்கு லொங்கு என்று ஓடிவந்தான்.
ஆனால் வண்டி இப்படி வேகமாக ஓடியதில் அபிராமியின் குதூகலம் அதிகமாயிற்று. பின்னால் சுப்பராயன் குடல் தெறிக்க ஓடி வருவதைப் பார்த்து அவள் கலகலவென்று சிரித்தாள். அப்படிச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே அவளுக்கு என்ன ஞாபகம் வந்ததோ, என்னமோ, தெரியாது. திடீரென்று அவளுடைய சிரிப்பு பத்து மடங்கு அதிகமாயிற்று. குலுங்கக் குலுங்க வயிறு வலிக்கும்படி சிரித்தாள். முத்தையன் திரும்பி அவளைப் பார்த்து "ஏ பைத்தியம்! எதற்காகச் சிரிக்கிறாய்?" என்றான்.
"அண்ணா! அண்ணா! சுப்பராயன் தொந்தியைப் பார்த்ததும் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. அதை நினைத்தால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை" என்றாள் அபிராமி.
"போதும், போதும்! பல்லைச் சுளுக்கிக் கொள்ளப் போகிறது. அது என்னவென்று சொல்லிவிடு" என்றான் முத்தையன்.
"சொல்லிவிடட்டுமா? கல்யாணி அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறார், பாரு! அவருக்குப் பெரிய தொந்தி போட்டிருக்குமாம். இன்னிக்குத்தானே கல்யாணம், அண்ணா! இத்தனை நேரம் தாலிகட்டியாகிக் கொண்டிருக்கும்" என்றாள்.
அடுத்த நிமிஷத்தில் சம்பவங்கள் வெகு துரிதமாக நடந்தன.
முத்தையனுடைய மனக்காட்சியிலே ஐம்பது வயதுக் கிழவர் ஒருவர் கல்யாணியின் கழுத்தில் தாலியைக் கட்டிக் கொண்டிருந்தார். அக்காட்சி அவனை வெறி கொள்ளச் செய்தது. கையிலிருந்த தார்க்கழியினால் சுளீர் சுளீர் என்று மாடுகளை இரண்டு அடி அடித்தான். அடுத்த கணத்தில் தாலி கட்டுவதைத் தடுக்க யத்தனித்தவன் போல் மூக்கணையிலிருந்து குதித்தான்.
வண்டிக்கார சுப்பராயன் "ஐயோ! குடியைக் கெடுத்தீங்களே?" என்று ஒரு கூச்சல் போட்டான்.
அபிராமிக்கு வானம் இடிந்து திடீரென்று தன் தலையில் விழுந்து விட்டது போல் தோன்றிற்று.
வண்டி குடைசாய்ந்தது!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கள்வனின் காதலி - 6.இடிந்த கோட்டை , கோட்டை, அவனுடைய, வண்டி, பின்னால், காதலி, நடந்து, சுப்பராயன், கொஞ்சம், அபிராமி, இரண்டு, என்றான், இடிந்த, பார்த்து, முத்தையன், அண்ணா, போல், கள்வனின், கொண்டிருந்தது, வண்டிக்காரன், வாழ்க்கையும், ஒன்று, மாடுகளை, லொங்கு, என்றாள், திடீரென்று, போதும், கல்யாணம், அடுத்த, ஞாபகம், சிரித்தாள், நிறுத்துங்க, சுளீர், கல்யாணியின், அதிகமாயிற்று, விட்டது, வந்து, பயிர், குளிர்ந்த, அந்தச், சாலையில், வயல்களில், தூரம், அமரர், கல்கியின், சாலை, கொண்டிருந்தன, வேளையில், அந்த, ஆறுதல், எண்ணி, இனிமேல், என்ன, கொள்ளச், பாடிக், பாட்டு, கட்டிய, வெகு, அல்லவா