கள்வனின் காதலி - 18.அபிராமியின் பிரயாணம்
அவர் வந்து கூடத்தில் கிடந்த சாய்மான நாற்காலியில் "அப்பாடா!" என்று உட்கார்ந்ததும், மீனாட்சி அம்மாள் வெறுமனே அவரிடம் போனால் எரிந்து விழுவார் என்று அறிந்தவளாதலால், கையில் ஒரு டம்ளர் தீர்த்தத்துடன் போய் அருகில் நின்றாள். அவர் தீர்த்தம் சாப்பிட்டதும் "என்ன இத்தனை நாளாய் இப்படி வராமலிருந்து விட்டீர்கள்? ரொம்பக் கவலையாய்ப் போயிற்று. அந்தப் பெண்ணானால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாயிருக்கிறாள்..." என்று சொல்ல, சாஸ்திரி, "அழறாளா? நன்னா அழச் சொல்லு!... இன்னும் அந்தப் பெண் இங்கே தான் இருக்கிறாளா, என்ன?" என்றார்.
"ஆமாம்; அவளுக்குத்தான் வேறு திக்கு கிடையாதே! எங்கே போவாள்?"
"ரொம்ப நன்றாயிருக்கிறது; அதற்காக நாம் என்னத்தைச் செய்கிறது? எங்கே அவள்? கூப்பிடு, பார்க்கலாம்?"
கதவின் ஓரத்திலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி அப்போது கண்ணைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.
சாஸ்திரி அவளைப் பார்த்து, "ஆஹா! பெண்ணே! அழுகிறாயா? அழு அழு! உன் அண்ணன் அகப்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்தாயல்லவா? அவன் அகப்படவில்லை. இப்போது உனக்குச் சந்தோஷந்தானே?" என்றார். பிறகு, "ஐயோ பைத்தியமே!" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொண்டார்.
அபிராமிக்கு ஒன்றுமே புரியவில்லை. முத்தையன் அகப்படவில்லையென்று மட்டும் தெரிந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் பேசிய தினுசிலிருந்து ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதென்றும் நினைக்க வேண்டியதாயிருந்தது.
"அவளை ஏன் மிரட்டுகிறீர்கள்? அவளுக்கு என்ன தெரியும், குழந்தை!" என்றாள் மீனாட்சி அம்மாள்.
"அவளுக்கு ஒன்றும் தெரியாது; அவள் அண்ணனுக்கும் ஒன்றும் தெரியாது...பெண்ணே! இனிமேல் உன் அண்ணனை நீ மறந்துவிடு. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. அவன் லாக்-அப்பிலிருந்து தப்பித்துப் போகாமலிருந்திருந்தால் மறுநாளே நான் விடுவித்திருப்பேன். தப்பித்துப்போன குற்றத்தோடிருந்தாலும் சொற்பத் தண்டனையோடு போயிருக்கும். இப்போதோ அவன் மேல் ஐந்து கொள்ளைக் குற்றங்கள் இருக்கின்றன. இந்தப் பழைய 'கேடி' குறவனையும் அவனுடைய சகாக்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறான். கொலை ஒன்றைத் தவிர, 'பீனல் கோ'டிலுள்ள எல்லாக் குற்றங்களும் செய்துவிட்டான். கட்டாயம் ஒருநாள் அவனைப் பிடித்தே தீருவோம். அப்போது தீவாந்திர சிட்சைக்குக் குறைந்து விதிக்க மாட்டார்கள்...இனிமேல் உனக்கு அண்ணன் இல்லையென்று நினைத்துக் கொள்" என்றார் ஸர்வோத்தம சாஸ்திரி.
இதைக் கேட்ட அபிராமி விம்மி விம்மி அழத் தொடங்கினாள். மீனாட்சி அம்மாள் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே போய், "நீ அழாதே, அம்மா! அவர் கோபத்தில் ஏதோ சொல்கிறார். அப்படியெல்லாம் உனக்கு ஒன்றும் வராது" என்று தேறுதல் சொல்லிவிட்டு மறுபடியும் கூடத்திற்குத் திரும்பி வந்தாள்.
"இந்தப் பெண்ணை என்ன செய்கிறதென்று தெரியவில்லையே? அவளை நம் வீட்டில் எத்தனை நாளைக்கு வைத்துக் கொண்டிருப்பது? ரொம்பவும் பிசகாயிற்றே. இவளுக்குப் பந்துக்கள், வேண்டியவர்கள் யாரும் இல்லையா?" என்றார் சாஸ்திரி.
"ஒருவரும் கிடையாது, பெரிய சங்கடந்தான்... எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, சொல்லட்டுமா?"
"பேஷாய்ச் சொல்லு! 'யோசனை சொல்வதில் மந்திரிக்குச் சமானம்' என்று உத்தம பத்தினியைப் பற்றி சாஸ்திரம் கூறுகிறது."
"பாருங்கள்! சென்னைப் பட்டணத்தில் என் நாத்தனார் சரஸ்வதி வித்யாலயம் நடத்துவதுதான் தெரியுமே? அதற்கு ஒத்தாசை செய்ய வேண்டும், ஒத்தாசை செய்ய வேண்டும் என்று பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? இந்தப் பெண்ணை அனுப்பி வைக்கலாமே? அதுவும் ஒரு உதவிதானே?"
"பேஷான யோசனை. இப்போதே சாரதாமணிக்குக் கடுதாசி எழுதிவிடு."
"பார்த்தீர்களா? உலகத்திலே நாத்தனார்களுக்குக் கூட உபயோகம் இருக்கிறதே?" என்று சொல்லி மீனாட்சி அம்மாள் சிரித்தாள்.
இவ்வாறு செய்து கொண்ட தீர்மானத்தை மேற்படி தம்பதிகள் விரைவிலேயே நிறைவேற்றி வைத்தார்கள். மீனாட்சி அம்மாள், அபிராமியின் புத்திசாலித்தனத்தைப் பற்றியும் நற்குணங்களைப் பற்றியும் வர்ணனை செய்து எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, சரஸ்வதி வித்யாலயத்தின் தலைவி சகோதரி சாரதாமணி அம்மாள் அவளை உடனே அனுப்பிவைக்கும்படி பதில் எழுதினாள். மீனாட்சி அம்மாள் கூடச் சென்று அபிராமியை வித்தியாலயத்தில் சேர்த்துவிட்டு வரவேணுமென்று ஏற்பாடாயிற்று.
அவ்வாறே ஒரு நாள் மீனாட்சி அம்மாளும் அபிராமியும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் ஏறிச் சென்னைக்குப் பிரயாணமானார்கள். ரயில் போகத் தொடங்கியதும் அபிராமிக்கு அவளையறியாமல் கண்ணீர் வந்தது. அண்ணனை ஆபத்தான நிலைமையில் விட்டுவிட்டு நாம் தூரதேசம் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு வேதனையளித்தது. முத்தையனுக்கு இந்தத் துன்பமெல்லாம் தன்னால்தான் வந்தது என்று எண்ணியபோது அவளுடைய வேதனை பன்மடங்கு அதிகமாயிற்று. 'ஆகா; இப்போது தன் அருகில் முத்தையன் மட்டும் உட்கார்ந்து கொண்டு வந்தால், இந்த ரயில் பிரயாணம் எவ்வளவு உற்சாகமாயிருக்கும்?'
இப்படி இவள் எண்ணியபோது, "முத்தையன்" என்ற வார்த்தை காதில் விழவே உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.
*****
"பேப்பர்லே முத்தையனைப் பற்றி ஏதாவது போட்டிருக்கா?" என்று அதே வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்த பிரயாணி ஒருவர் கேட்டார்."ஊரிலே இருக்கிற திருடனையெல்லாம் பற்றிப் போடுவதுதான் பத்திரிகைகளுக்கு வேலையாக்கும்" என்றார் ஒருவர்.
"இவன் அப்படியொன்றும் சாமான்யபட்ட திருடன் இல்லை. நேற்றைய சமாசாரம் கேட்டீர்கள் அல்லவா?"
"இல்லையே? இன்னும் எங்கேயாவது கொள்ளை நடந்ததோ?"
"இல்லை; இல்லை. சங்கரமடத்தில் இரண்டு நாளைக்கு முன்பு ஒரு கல்யாணம் நடந்ததாம். கல்யாணத்துக்குப் பிறகு நேற்றைக்கு, பெண் மாப்பிள்ளை முதலியவர்கள் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது விளக்கேற்றுகிற நேரத்தில், திடீரென்று முத்தையனும் ஐந்தாறு திருடர்களும் வந்து சூழ்ந்து கொண்டார்களாம். பெண் மாப்பிள்ளையுடன் வந்த ஆண் பிள்ளைகள் எல்லாம் பயந்து ஓடியே போய்விட்டார்களாம். ஆனால் கல்யாணப் பெண் மட்டும் தைரியமாய் முன்னால் வந்து, முத்தையனிடம், 'அண்ணா! என்னை உன் தங்கச்சி என்று நினைத்துக் கொள். முந்தா நாள் தான் தாலி கட்டிக் கொண்டேன். எங்களை ஒன்றும் பண்ணாதே!' என்றதாம். 'நான் உன் தங்கச்சி' என்றதும் முத்தையன் திடீரென்று அழுது விட்டானாம். அவர்களை ஒன்றும் பண்ணாமல் மற்றத் திருடர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு நொடியில் மறைந்து போய் விட்டானாம். என்ன ஆச்சரியம், பார்த்தீர்களா?"
"முத்தையனுக்கு ஒரு தங்கை உண்டு என்றும், அவள் மேல் அவன் உயிராயிருந்தானென்றும் சொல்கிறார்களே, இது நிஜமா, ஸார்!"
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி, பொங்கிக் கொண்டு வந்த அழுகையை மிகவும் பிரயத்தனப் பட்டுத் தடுத்துக் கொண்டாள்.
"அண்ணா! அண்ணா! உன்னை மறுபடியும் இந்த ஜன்மத்தில் காண்பேனா?" என்று அவள் நெஞ்சம் அலறிக் கொண்டிருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கள்வனின் காதலி - 18.அபிராமியின் பிரயாணம் , மீனாட்சி, அம்மாள், சாஸ்திரி, கொண்டு, ஒன்றும், அவர், என்ன, என்றார், அவன், வந்து, அவள், அபிராமியின், அவளை, பெண், முத்தையன், போய், பிரயாணம், நாள், அண்ணா, யோசனை, இந்தப், கள்வனின், காதலி, மட்டும், அப்போது, அவளுக்கு, அபிராமி, இல்லை, மேல், கொண்டிருந்த, பற்றி, பெண்ணை, தொடங்கினாள், அழைத்துக், விம்மி, மறுபடியும், கொள், நாளைக்கு, அல்லவா, உட்கார்ந்து, எண்ணியபோது, முத்தையனுக்கு, ஒருவர், திடீரென்று, விட்டானாம், தங்கச்சி, வந்த, வந்தது, ரயில், வேண்டும், செய்ய, ஒத்தாசை, நினைத்துக், பார்த்தீர்களா, பற்றியும், செய்து, சரஸ்வதி, இப்போது, ரொம்பவும், ஐந்து, அருகில், இப்படி, சொல்லு, அந்தப், வரவில்லை, திரும்பி, கல்கியின், அமரர், முத்தையனும், கேட்ட, ஸர்வோத்தம, உடனே, இன்னும், தான், அபிராமிக்கு, பிறகு, தெரியாது, இனிமேல், நான், அண்ணனை, அண்ணன், பெண்ணே, நாம், எங்கே, இதைக், கேட்டுக், வந்தாள், உனக்கு