வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 43
அமிர்தாஸ்வன்
தேசம் : மத்திய ஆசியா (வடகுரு பூமி)
ஜாதி : ஹிந்தோ - ஈரானியர்
காலம் : கி.மு. 3000
பசும்புற்கள் படர்ந்த மலைகளும் ஆங்காங்கு பளிங்கு போன்ற நீர் பெருகி ஓடும் சிற்றாறுகளும் எவ்வளவு அழகாயிருக்கின்றன! ஆனால் காஷ்மீர் பிரதேசத்தைப் பார்த்திருப்பவர்கள், இந்த இயற்கையின் அழகை மிகமிக அனுபவிக்க முடியும். மழைக் காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இயற்கையிலேயே பொலிவுற்று விளங்குகிறது அந்த மலைப் பிரதேசம். இதோடு வசந்த காலம் வந்து அதைப் பூமியின் ஒரு சுவர்க்கமாக்கி விட்டது. மழைக் காலத்தைக் குகைகளிலும் புதர்களிலும் கழித்துக் கொண்டிருந்த விலங்கினங்கள் இப்போது பசுமை படர்ந்திருக்கும் பூதலத்தில் மேயவும் இரை தேடவும் ஆரம்பித்து விட்டன. குதிரைகளின் ரோமங்களால் வேயப்பட்டிருக்கும் கூடாரங்களிலிருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தன்னுடைய கூடாரத்திலிருந்து வெளிவந்த ஒரு யுவதி, தோளில் தண்ணீர்ப் பையைத் தொங்க விட்டுக்கொண்டு, கற்பாறைகளின் மீது மோதி முழங்கிச் செல்லும் ஆற்றை நோக்கி நடக்கிறாள். இன்னும் அவள் நதிக்கரையை நெருங்கவில்லை. இதற்குள் ஒரு வாலிபன் அவள் எதிரே வந்து நின்றான். யுவதியைப் போலவே அவனும் ஒரு மெல்லிய வெள்ளைக் கம்பளத்தைக் கழுத்தில் முடிந்து தொங்கவிட்டு இருந்தான். அது அவனுடைய வலது கையையும் முழங்கால்களுக்குக் கீழ் பாகத்தையும் தவிர்த்து, சரீரத்தின் எல்லாப் பகுதியையும் மூடி இருந்தது. அவனுடைய மீசையும் வெண்மையும் மஞ்சள் நிறமும் கலந்து பிரகாசிக்கும் தலை ரோமங்களும், அவனுடைய அழகையும் சரீரக்கட்டையும் மேலும் எடுத்துக் காட்டுவன போல் தோன்றின. வாலிபனைப் பார்த்த மங்கை, தன் நடையை நிறுத்திக் கொண்டாள். புன்முறுவல் பூத்த அந்த வாலிபன் “சோமா! தண்ணீர் கொண்டுவரச் செல்கிறாயாக்கும்! இவ்வளவு அதிகாலையிலேயா?”
“ஆம். திருஜராஸ்வ! ஏது இந்தப் பக்கம்? மறதியாக வந்து விட்டாயோ?”
“இல்லை; நான் எப்படி மறக்க முடியும்? உன்னைத் தேடியே வந்தேன்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 43, புத்தகங்கள், பக்கம், காலம், கங்கை, அவனுடைய, வால்காவிலிருந்து, வந்து, அவள், வாலிபன், அந்த, மழைக், சிறந்த, முடியும், முடிந்து, வசந்த