வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 335
“அண்ணா! மன்னிக்க வேண்டும் நீங்கள் ஏதோ முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கருதினேன்.”
“கேஸ் கட்டுகளிலே லயித்திருக்கும்போதுகூட உனக்காகச் சில நிமிஷங்களை என்னால் ஒதுக்கமுடியுமே; இன்று என் முன்னால் ஒரு கேஸ் கட்டுகூடக் கிடையாது.”
சங்கரசிங்கிற்கும், சபதருக்குமிடையே நெருங்கிய நட்பு உண்டு. சபதர், தனது நண்பர்களுள் சங்கரசிங்கைவிட நெருங்கியவர்கள் யாருமில்லை என்று கருதினார். சேத்பூர் பள்ளிக்கூடத்தில் நாலாவது வகுப்பிலிருந்து லக்னௌவில் பி.ஏ.பாஸ் செய்ததுவரை, இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். கலாசாலையிலேயே இருவரும் முதல்தர மாணவர்கள். பரீட்சையிலும்கூட, இருவருடைய மார்க்குகளிலும் ஒன்றிரண்டுதான் வித்தியாசம் இருக்கும். இந்தத் திறமையின் காரணமாகவும் மேதைமையினாலும், இருவருக்குள்ளும் போட்டியோ கசப்போ ஏற்பட்டதில்லை. இருவருடைய நட்பும் வளர்ந்தே வந்திருக்கிறது.
இருவரும் கௌதமராஜ புத்ர குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இன்று ஒருவர் ஹிந்து, மற்றவர் முஸ்லீம். பத்துத் தலைமுறைகளுக்கு முன்னால் இருவருடைய குடும்பங்களும் ஹிந்துவாயிருந்தது மட்டும் அல்ல; ஒரே குடும்பத்தில் தோன்றியதும் கூட. இப்பொழுதும், முக்கியமான நாட்களிலே இரண்டு குடும்பத்தார்களும் ஒன்று சேர்வதுண்டு.
சபதர் அவரது தந்தையாருக்கு ஒரே குழந்தை. அவருக்குச் சகோதரர்கள் இல்லாத குறையை, இளமையிலிருந்தே சங்கர்தான் போக்கி வந்திருக்கிறார். சங்கர், சபதரைவிட ஆறு மாதம் இளையவர். இவையெல்லாம் வெளிப்படையாகத் தோன்றும் விஷயங்கள். இவை தவிர சங்கரிடத்திலே சிறந்த நற்குணங்களும் உயர்ந்த மேதைமையும் நிறைந்திருந்தன. அதன் காரணமாக, பக்காத் ‘துரை’ யான சபதர், சாதாரணத் தோற்றத்திலிருக்கும் சங்கரிடத்தின் அன்பு செலுத்தினது மட்டுமில்ல, மரியாதையும் செலுத்தினார். சங்கர் மிகவும் பணிவுள்ளவர். ஆனால் பிறரை முகஸ்துதி செய்வது என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. இதன் பலனாக மாகாணத்திலே முதன்மையாக எம்.ஏ.பாஸ் செய்திருந்தும், ஒரு சர்க்கார் பள்ளிக்கூடத்தில் சாதாரண உபாத்தியாயராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் சாதாரணமாக முயற்சி செய்திருந்தால் இன்று ஒரு ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டராக ஆகி இருக்கமுடியும். அவருடைய ஆயுள் முழுவதும் இந்த உபாத்தியாயர் வேலையிலேயே இருந்துவிட விரும்புவது போல் தோன்றுகிறது. அவர் ஆயுளிலேயே ஒரே ஒரு முறைதான் நண்பர்களின்
உதவியை நாடினார். அதுவும் லக்னௌவிலிருந்து தன்னை வெளியூருக்கு மாற்றாமலிருக்கும் பொருட்டே. சங்கர், பணிவோடு கூடச் சுயமரியாதை உணர்ச்சியும் நிறைந்தவர். அந்தச் சுயமரியாதை உணர்ச்சிதான் அவரிடத்தில் சபதருக்குப் பெருத்த மரியாதையை உண்டாக்கியது.
பன்னிரண்டு வயதிலே தொடங்கிய நட்பு, நாள்தோறும் வளர்ந்து, இருபது வருடங்களுக்குப் பிறகும் மிகுந்த உறுதியோடு இருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 335, புத்தகங்கள், சபதர், சங்கர், இருவரும், பக்கம், இன்று, வால்காவிலிருந்து, கங்கை, சிறந்த, இருவருடைய, சுயமரியாதை, அவர், நட்பு, முன்னால், பள்ளிக்கூடத்தில், பாஸ்