வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 313
“மங்கரி! வெட்கப்படாதே, நம்முடைய பஞ்சாயத்து அழிந்து போகாமல் இருக்குமானால், ஒரு சக்ரவர்த்திகூட இவ்விதம் செய்திருக்க முடியாது. இந்த அவமானத்திற்கு நான் பழி வாங்குவேன். நான் உண்மையான அஹிர்ஜாதியானுக்குப் பிறந்திருந்தால், இந்த திவானையும் ராம்பூரின் ஜமீன்தாரையும் பூண்டோடு ஒழித்து விடுவேன். மங்கரி! என் கைகளை
அவிழ்த்து விடு. இந்த அவமானத்திற்குப் பதில் என் கைகள் செய்யும்.”
மங்கரி, மழைக்கால மேகம்போல நீர்பொழியும் கண்களோடு ரேக்காவின் கட்டுகளை அவிழ்த்து விட்டாள். அவன் உள்ளே போய், தன் மகனை முத்தமிட்டு விட்டு.
“மங்கரி இந்த வீட்டிலிருந்து என்னென்ன எடுத்துக் கொள்ள வேண்டுமோ அவைகளை எடுத்துக்கொள். நான் வீட்டிற்கு நெருப்பு வைக்கப் போகிறேன்.”
அவனுடைய குரலின் வேகத்தைக் கண்ட மங்கரி பேசாமல் உள்ளே சென்று தன் குழந்தையையும் சில துணிகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து அவன் கால்களிலே விழுந்தாள்.
“மங்கரி! உன்னுடைய கௌரவத்திற்காக மட்டுமல்ல, இந்தக் கிராமத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகவே பழி வாங்க வேண்டும். நீ போ, இந்தப் ‘பஞ்ச’னுக்கு, அவன் தகப்பன் எப்படிப்பட்டவன் என்பதை மட்டும் சொல்ல மறந்து விடாதே. நேரமாகிறது, நீ போ, நான் நெருப்புக் கொண்டு வருகிறேன்.”
அவள் கிராமத்தைவிட்டுக் கொஞ்சதூரம் போவதற்குள்ளேயே, தன் மன நெருப்பைப் போலவே தனது வீடும் பற்றியெரிவதைப் பார்த்தாள். கிராமத்தில் எல்லையில் உள்ள ரேக்காவின் வீடு பற்றியெரிவதைப் பார்த்த கிராமவாசிகள், அதை நோக்கி ஓடினார்கள். ரேக்கா ஒரு பெரிய வாளைக் கையிலேந்திக் கொண்டு, ஜமீன்தாரின் கச்சேரியை நோக்கி நடந்தான். காலனைக் கண்ட சேவகர்கள் அலறி ஓடிவிட்டார்கள். திவானையும் ஜமீன்தாரையும் வெட்டும்
பொழுது ரேக்கா,
“ஏ பாவிகளே! உங்கள் குலத்தில், ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்” என்று கர்ஜித்தான்.
ரேக்கா, தான் சொல்லியபடியே செய்து முடித்தான்.
கொலைகாரக் காரன்வாலிஸ், இவ்விதம் எத்தனையோ ரேக்காக்களை இந்த நாட்டிலே தோற்றுவித்து விட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 313, புத்தகங்கள், நான், ரேக்கா, மங்கரி, பக்கம், அவன், கொண்டு, “மங்கரி, வால்காவிலிருந்து, கங்கை, விட்டு, எடுத்துக், கண்ட, பற்றியெரிவதைப், நோக்கி, திவானையும், இவ்விதம், சிறந்த, ஜமீன்தாரையும், அவிழ்த்து, ரேக்காவின், உள்ளே