வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 264
“இதை நான் ஒப்புக் கொள்கிறேன் ஜஹாம்பனாக்.”
“நான் இந்த வீட்டிலேயே இருக்க வேண்டுமானால், இந்த வீட்டைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்குள்ள ஜனங்கள் சுகமாகவும் அமைதியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டுப் பிரஜைகளில் இப்போது எத்தனைப் பேர் முஸ்லீம்கள்? நூறு வருட முயற்சிக்குப் பிறகும், டெல்லியின் சுற்றுப்புறங்களைக் கூட நாம் முஸ்லீம்களாக ஆக்க முடியவில்லை. சொல்லுங்கள் முல்லா அபூ முகம்மது டெல்லியையும், அதன் சுற்றுப் பிரதேசத்தையும் முஸ்லீம்களாக ஆக்குவதற்கு, இன்னும்
எவ்வளவு காலம் பிடிக்கும் உங்களுக்கு?”
எதிரே உட்கார்ந்திருந்த மற்றொரு கிழவர் தனது வெண்ணிறத்தாடியைக் கோதிக் கொண்டே,
“நான் நம்பிக்கை இழந்து விடவில்லை. அரசர்க்கு அரசே! இந்த எண்பது வயதுக் கிழவன், தனது அனுபவத்தின் மூலம் நாம் பலவந்தமாக இந்த நாட்டு மக்களை முஸ்லீம்களாக்க முயற்சி செய்தால் அதில் வெற்றியடைய முடியாது என்பதை நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன்.”
“ஆகவே நாம் பாரத நாட்டிலே தங்கி பாரதவாசிகளாக ஆகிவிட விரும்பும் முஸல்மான்கள் பாரத தேசம் முழுவதையும் முஸ்லீம் மயமாக்கும் வரை காத்திருக்க முடியாது. நாம் ஒரு நூற்றாண்டை வீணாகக் கழித்து விட்டோம். நமது பிரஜைகளின் நன்மைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நிலவரி, சுங்கம் முதலிய வரிகளை அதிகமாக வசூல் செய்வதிலேயே கவனமாக இருந்தோம். அதன் விளைவென்ன? அரச பொக்கிஷத்திற்கு ஒரு ரூபாய் வந்து சேருவதற்கு முன்னால், கிராமத் தலைவர்கள், தாசில்தார்கள் வயிற்றிலே ஐந்து ரூபாய்கள் போய் சேருகின்றன. ஒரு சிறு கிராமத்தின் தலைவன், பட்டுடை உடுத்திக் குதிரையில் சவாரி செய்வதையும், ஈரானில் செய்து வந்த அழகிய வில்லினால் அம்பெய்துவதையும் வேறு எந்தத் தேசத்திலாவது பார்க்க முடியுமா? இல்லை, மந்திரியாரே! எனது ஆட்சியில் இனி இந்த மாதிரிக் கொள்ளையை அனுமதிக்க முடியாது.”
“ஆனால், அரசே! எத்தனையோ ஹிந்துக்கள், இந்த ஆசையிலே
முஸல்மான்கள் ஆகிறார்கள். இப்பொழுது அந்தப் பாதையும் அடைப்பட்டுப் போய்விடும்” என்று முல்லா சொன்னார்.
“இந்த மாதிரிக் கொள்ளையையும், லஞ்சத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளுமானால் அரசாங்கப் பொக்கிஷத்திற்கும் அரசாங்கச் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு ஏது? அந்த மாதிரி ஊழியர்களைக் கொண்ட அரசாங்கம் எதை நம்பி நிற்க முடியும்?”
“இப்படிப்பட்டவர்களால் அரசாங்கத்தின் கால்கள் பலமடைய முடியாது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், என் கவனமெல்லாம் கலகம் எழாமல் அமைதியை நிலை நாட்டுவதிலிருந்தது” என்றார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 264, புத்தகங்கள், முடியாது, நாம், பக்கம், வேண்டும், கங்கை, வால்காவிலிருந்து, அரசே, என்பதை, பாரத, மாதிரிக், முஸல்மான்கள், தனது, முஸ்லீம்களாக, ஒப்புக், “நான், கொள்ள, சிறந்த, முல்லா