வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 210
“மகனே, உனது துக்கம் சிறிது தணியட்டும்.”
“துக்கத்தின் வேகத்தை அறிவேன்! ஆனால், அதன் காரணமாக உங்களை வேண்டவில்லை. துக்கத்தைத் தாங்கிக் கொள்வதற்கு பிரபா என்னை ஏற்கெனவே தயாரித்து விட்டாள். நான் ஒன்றும் அவசரப்படவில்லை.”
“ஆயினும், இன்னும் சில நாட்கள் பொறுக்க வேண்டும் மகனே; சங்கம் உன்னை இவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொண்டுவிட மாட்டாது.”
“ஆச்சாரிய! காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சங்கத்தின் பாதார விந்தங்களிலே...”
“முதலில் நீ உன் தந்தையாரின் அனுமதி பெறவேண்டும். தாய் தந்தையாரின் அனுமதியின்றி, சங்கம் யாரையும் பிக்ஷுவாக ஆக்கமாட்டாது.”
“அப்படியானால் அனுமதி பெற்று வருகிறேன்.”
அஸ்வகோஷ் அங்கிருந்து புறப்பட்டான். அவனுடைய வார்த்தை களிலிருந்து அவன் மனம் தெளிவு பெற்றிருப்பது நன்றாகத் தெரிந்தாலும், தாய்க்குச் சமாதானம் ஏற்படவில்லை. அவளும் அவனுடனேயே கிளம்பினாள். சரயூவை அடைந்த இருவரும், ஒரு படகை ஏற்பாடு செய்துகொண்டு கீழ்நோக்கி நீண்ட தூரம் சென்று தேடினர். ஒன்றும் கிடைக்கவில்லை.
அஸ்வகோஷ் தன் தந்தையிடம் பிக்ஷுவாவதற்கு அனுமதி கேட்டான். தன் ஒரே மகனை பிக்ஷுவாக்கி மடத்திற்கு அனுப்பிவிடும் தைரியம் எந்தத் தந்தைக்குத் தான் இருக்கும்? அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அஸ்வகோஷ் விடவில்லை. “தாயையும் பிரபாவையும் இழந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் நான் பிக்ஷுவாகப் போக விரும்பவில்லை, தந்தையே! என்னுடைய குரல், பேச்சு, செயல் இவைகளிலிருந்து, என் மனம் தெளிவாக
இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். என்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக எதை நான் தேர்ந்தெடுக்கிறேனோ அதை நிறைவேற்றுவதற்கு இது ஒன்றுதான் வழி, தந்தையே! நான் உயிரோடு வாழ வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் பிக்ஷு ஆவதற்கு அனுமதி கொடுங்கள்” என்று உறுதியாகக் கூறிவிட்டான்.
“நல்லது. நாளை மாலைவரை தவணை கொடு, மகனே!”
“ஒரு நாளல்ல, ஒரு வாரம் காத்திருக்கிறேன்.”
மறுநாள் மாலை, தந்தை கண்ணீர் வழிய, நடுங்கும் குரலிலே மகனுக்குப் பிக்ஷு ஆக அனுமதி கொடுத்தார். சாகேத நகரத்தின் சர்வாஸ்திவாத சங்கம், அஸ்வகோஷைப் பிக்ஷுவாக்கித் தன்னுள்ளே ஏற்றுக் கொண்டது. பிக்ஷு சிரேஷ்டர்களான தர்மசேனரும் தர்மரட்சிதரும் ஆச்சாரியர்களாயிருந்து, அவனுக்கு உபதேசம் செய்தார்கள். சிறிது நாளிலே பிக்ஷு சிரேஷ்டர் தர்மரட்சிதருடன் பிக்ஷு அஸ்வகோஷும் மகதத்தின் தலைநகரமான பாடலிபுரத்தை அடைந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 210, அனுமதி, பிக்ஷு, புத்தகங்கள், நான், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, அஸ்வகோஷ், சங்கம், மனம், என்னுடைய, நீங்கள், தந்தையே, மகனே, சிறிது, சிறந்த, துக்கத்தைத், ஒன்றும், ஏற்றுக், தந்தையாரின்