வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 181
“என்னுடைய காதலன் எவ்வளவு நல்லவன், நாகா!”
“சோபியா! நான் உனக்குத் தகுதியானவன் என்று கருதவில்லை.”
“நான் தகுதி என்றே நினைக்கிறேன். எனது நாகா! இனிமேல் மரணமும்
நம்மைப் பிரிக்கமுடியாது.”
நாகதத்தனுடைய கண்கள் தடுப்பை உடைத்துக் கொண்டு நீரைக் கொட்டின.
“ஆம்; மரணமும்கூட.”
5
கிரேக்கக் கடற்படை, பாரசீகர்களுக்குப் பலமான தோல்வியை அளித்த சாலாமிய வளைகுடாவைப் பார்க்க வேண்டுமென்று, நாகதத்தன் ஆசைப்பட்டான். அந்த இடத்தைப் பார்ப்பதற்காக இருவரும் தரைமார்க்கமாகப் புறப்பட்டனர். நாகதத்தன் மிகுந்த உற்சாகம் அடைந்தவனாகக் காணப்பட்டான். ஆனால் வழி நடக்கையிலே, அவனுடைய எண்ணம் தட்சசீலத்திற்குச் சென்று வந்தது. வழியில் இளைப்பாறுவதற்காக இருவரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.
“கேள்விப்பட்டாயா, நாகா! அரசன் பிலிப் இறந்து போய்விட்டான். அலெக்ஸாண்டர் மெக்டோனின் அரசனாகி விட்டான். பெரிய சக்தி வாய்ந்த சேனையைத் திரட்டிக் கொண்டிருக்கிறானாம்.”
“ஆம்; கிரேக்க சமுத்திரக் (மத்திய தரைக்கடல்) கரை மீது அவன் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறான்; ஆனால் அதன் கிழக்குக் கரையும் தெற்குக் கரையும் (எகிப்து) பாரசீகர்களிடம் இருக்கிறது.”
“அப்படியானால், அவன் பாரசீகர்களோடு யுத்தம் தொடுக்க வேண்டி நேரும்.”
“பாரசீகர்களோடு யுத்தம் தொடுப்பதற்காகக் காரணம் காட்டி, தன்னுடைய ராஜ்ய விஸ்தரிப்பிற்குக் கிரேக்க ஜன ஆட்சிகளுடைய உதவியையும் பெறுவதற்கு முயலுகிறான். ஒரே கல்லில் இரண்டு பறவைகளை அடிக்கும் தந்திரம் இது. கிரேக்கக் கடற்கரையிலிருந்து பாரசீகச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஒழித்து, அதற்கு மேலும் முன்னேறுவது; அப்படி முன்னேற முடியாவிட்டால், குறைந்த பட்சம் தன்னம்பிக்கையுள்ள கிரேக்கர்களிடையே ராஜ பக்தியை வளர்ப்பது அவனுடைய திட்டம்.”
“அவன் அரிஸ்டாட்டலின் சிஷ்யன்; அவனுடைய தைரியத்தை வளர்த்தவர் அவர்தான்.”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 181, அவனுடைய, புத்தகங்கள், நாகதத்தன், பக்கம், நாகா, தன்னுடைய, வால்காவிலிருந்து, கங்கை, அவன், கரையும், யுத்தம், கிரேக்க, கொண்டு, சிறந்த, “ஆம், கிரேக்கக், இருவரும்