வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 132
“ஆனால், பிர்மத்தின் நிலை பற்றியும் அதைத் தரிசிப்பது பற்றியும் தான் நீ உபதேசிக்கிறாயே!”
“ஆம்! ஒருநிலை தன்மையைப் பற்றிக் கூறும்போது, அதன் தரிசனத்தைப் பற்றியும் கூற வேண்டியதேற்படுகிறது. புலன்களால் உணர முடியுமென்று கூறினால், சந்தேகவாதிகள் உடனே அதை நிரூபித்துக் காட்டும் படி கேட்கத் தொடங்கிவிடுவார்கள். ஆகவேதான் பிர்மத்தைத் தரிசிப்பதற்கு, இந்தப் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நுண்ணிய புலன் மூலம்தான் முடியுமென்று நான் கூறினேன். அந்த நுண்ணிய புலனை அடைவதற்கு நான் காட்டியுள்ள வழியோ யாராலும் எட்டிப்பிடிக்க முடியாதது. ஐம்பது தலைமுறைகளுக்கு அரும்பாடு பட்டாலும் வெற்றி கிட்டாததும், அந்த நிலைமையிலும் அவநம்பிக்கை ஏற்படாததுமான வழிகளை நான்
வகுத்திருக்கிறேன். முன்னோர்களான மகரிஷிகள் வகுத்த அந்த ஸ்தூல வடிவுள்ள ஆயுதங்கள், உபயோகமற்றுப் போய் விட்டன என்று கருதியே நான் இந்த சூட்சம வடிவுள்ள ஆயுதத்தைக் கண்டுபிடித்தேன். சபரர்களிடமிருந்த கல்லாலும், தாமிரத்தாலும் செய்யப்பட்ட ஆயுதங்களை நீ பார்த்திருக்கிறாயல்லவா?”
“ஆம்; உன்னோடு தெற்குப் பகுதிக் காடுகளில் சுற்றிய போது பார்த்திருக்கிறேன்.”
“யமுனை நதிக்குப் பக்கத்திலே வசிக்கும் சபரர்கள் கல்லாயு தங்களையும் தாமிர ஆயுதங்களையுமே உபயோகிக்கிறார்கள். அவைகள் நமது இரும்பு ஆயுதங்களுக்கு ஈடாக முடியுமா?”
“முடியாது.”
“அதேபோலத்தான் வசிட்டரும், விஸ்வாமித்திரரும் தோற்றுவித்த தேவதைகளும் வேள்வியும், அவைகள் மந்த புத்தியுள்ளவர்களைத் தான் திருப்திப்படுத்த முடியும், அறிவாளிகளையும் புத்தி கூர்மையுள்ள சந்தேகவாதிகளையும் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது.”
“அறிஞர்களுக்கு முன்னே உன்னுடைய ‘பிர்ம’ மும் உபயோகமற்றது தான். நீ பிராமண அறிவாளிகளையும் கூட சிஷ்யர்களாக்கி, அவர்களுக்குப் பிர்ம ஞானத்தைப் பற்றி உபதேசம் செய்கிறாய். ஆனால் உன்னுடைய வீட்டிலேயே உன்னோடு வசிக்கின்ற நான் உன்னுடைய செயல்கள் யாவும் முற்றிலும் பொய்யும் பித்தலாட்டமுமே என்று கருதுகிறேன்.”
“ஏனெனில் *உபநிஷத்தின் உண்மை ரகசியம் உனக்குத் தெரியும்.”
“பிராமணர்கள் புத்திசாலிகளாயிருந்தால், உனது ரகசியத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியாதா?”
____________________________________________________
*உபநிஷதம்-பரம ஞானத்தைப் பற்றியும், ஆத்மா-பரமாத்மா முதலியவைகளைப் பற்றியும் விளக்குவதோடு, வேதத்தின் ரகசியத்தையும் தெளிவாக்கும் தத்துவ நூல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 132, நான், புத்தகங்கள், பற்றியும், வால்காவிலிருந்து, அந்த, பக்கம், தான், உன்னுடைய, கங்கை, அவைகள், உன்னோடு, அறிவாளிகளையும், ஞானத்தைப், முடியுமென்று, சிறந்த, அவநம்பிக்கை, “ஆம், நுண்ணிய, வடிவுள்ள