சத்ய சோதனை - பக்கம் 61
நாகரீகத்தோற்றம் அளிப்பதற்கு இவ்வளவும் போதாதென்று, ஆங்கிலக் கனவானாவதற்கு வேண்டியவை என கருதப்பட்ட மற்ற அம்சங்களிலும் கவனத்தை செலுத்தினேன். நடனம் ஆடக் கற்றுக் கொள்ளுவதும், பிரெஞ்சு மொழி கற்பதும், பிரசங்கவன்மையும் ஓர் ஆங்கிலக் கனவானுக்கு அவசியம் என்றார்கள். பிரெஞ்சு, பக்கத்து நாடான பிரான்ஸின் மொழி என்பது மாத்திரம் அல்ல ; ஐரோப்பா கண்டத்தில் ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினருடன் பேசுவதற்குப் பொது மொழியாகவும் அது இருந்தது. எனக்கு அக்கண்டம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஒரு நடனப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நடனம் கற்றுக் கொள்ளுவதெனத் தீர்மானித்து, சில மாதங்களுக்கு மூன்று பவுன் கட்டணமும் செலுத்தினேன். மூன்று வாரங்களில் இதில் ஆறு பாடங்களைக் கற்றிருப்பேன். ஆனால், தாளகதிக்கு ஏற்ப நடனமாடுவது என்பது என்னால் ஆகவில்லை. பியானோ வாத்திய இசையைப் பின்பற்ற முடியாது போகவே தாளத்தை அனுசரிக்கவும் இயலவில்லை. அப்படியாயின் பிறகு என்ன செய்வது ? ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு பெரிய குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதை விட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன். இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ‘ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 61, புத்தகங்கள், என்றும், பக்கம், சோதனை, சத்ய, மூன்று, பவுன், வேண்டும், என்பது, பிறகு, வளர்த்தார், கொடுத்தேன், வாங்கினேன், பிடில், மொழி, சன்னியாசி, நடனம், ஒவ்வொரு, அதைச், ஆகவே, சிறந்த, தலையில், போதும், கற்றுக், செலுத்தினேன், ஆங்கிலக், மற்றொரு, பிரெஞ்சு