அர்த்தமுள்ள இந்துமதம் - பக்தியில் கலந்திருக்கும் மருத்துவம்
அவனுக்குச் சாமுண்டி உபாஸனை உண்டு. விரதங்கள், கண்விழிப்புகள், தியானங்கள், வியாயாமங்கள் இவற்றிலே தனது காலம் முழுவதும் கழித்தான்.
`அவன் உணவு கொள்ளும்போது பீமனைப் போல் அளவில்லாத பசியுடன் உண்பான்’ என்று சந்தக்கவி `ப்ருதிவிராஜ் ராஸோ’ என்னும் தமது காவியத்திலே எழுதியிருக்கிறார்.
பீமனுடைய பெயர்களில் `விருகோதரன்’ என்பதொன்று; அதாவது `ஓநாய் வயிறுடையவன்’ என்றர்த்தம். இது அவனுக்கிருந்த நேர்த்தியான பசியைக் கருதிச் சொல்லியது. இக்காலத்தில் குறைவாக உண்ணுதல் நாகரிகமென்று நம்மவர்களிலே சிலர் நினைக்கிறார்கள்.
`பெருந்தீனிக்காரன்’ என்றால் அவமதிப்பு உண்டாகிறது. சிரார்த்தத்திலே சோறு தின்று முடிந்தவுடன் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சில பிராமணார்த்தக்காரர்களைப் போல் சரியான பயமில்லாமல் உடம்பைக் கொழுகொழுவென்று வைத்துக் கொண்டு, நாக்கு ருசியை மாத்திரம் கருதிப் பெருந்தீனி திண்பவனைக் கண்டால் அவமதிப்புண்டாவது இயற்கையேயாம்.
புலிகளைப் போல் உடல் வலிமையும், அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கண்டால் யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது. சாதாரணமாக பயம் உண்டாகும். நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வரும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
இது தவறு. காரஸாரங்களும், வாசனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப்படுத்தும் வஸ்துகள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காயச் சாம்பாரிலும் உண்டாகாது.
`சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல பசியாயிருக்கும்போது கேப்பைக்களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும். விரைவில் பலம் சேர்ந்து விடும்’.
`பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாத படி தடுக்கும் பெற்றோர், தம்மையறியாமலேயே மக்களுக்குத் தீங்கு செய்கிறார்கள்’.
`மேலும், சரீர உழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலேயிருக்கும் பிள்ளைகளுக்கு மாத்திரந்தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது’.
`மனிதனுக்கு இயற்கை வயது நூறு. ஆகையால், ஐம்பது வயதாகும் வரை ஒருவன் இளமை தீர்ந்தவனாக மாட்டான். பிஞ்சிலேயே உடம்பை நாசப்படுத்தினால் சீர் கெட்டுக் குலைந்து போய், இருபது வயதாகுமுன் கிழத்தன்மை வந்துவிடும்.
எனினும் இயற்கை விதிப்படி ஐம்பது வயது வரை இளமை நிற்குமாகையால், அதற்குள்ளே செயற்கைக் கிழத்தன்மை பெற்றோர், தமதுடம்பைத் திருத்தி நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முயற்சி செய்யலாம்.’
மேலே நான் குறிப்பிட்டிருப்பது மகாகவி பாரதியாரின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.
மனிதனை அண்டி வரும் ரோகத்திற்கான அடிப்படையை இப்படி அவன் விவரிக்கின்றான்.
இதுபற்றி முன்பே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
சிறு வயதில் இருந்தே, பெருந்தீனி தின்று பழக்கப்பட்டவன் நான்.
அந்நாளில், மணியாச்சியை அடுத்த ஓட்டநத்தத்தில் எங்களுக்கு ஒரு `ஜின்னிங் பாக்டரி’ இருந்தது.
வாஞ்சிநாதன், ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற அந்த மணியாச்சி ஜங்ஷன், தென்னாட்டிலே பூரி கிழங்குக்குப் பிரசித்தமானது.
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதுதான், பூரி, சப்பாத்தி சாப்பிட வேண்டிய கட்டாயம் தென்னாட்டவர்க்கு வந்ததென்றாலும், அதற்கு முன்பாகவே ஹோட்டல்களில் பூரி கிழங்கு என்பது ஒரு சுவையான உணவாகக் கருதப்பட்டது.
1933-இல் எனக்கு வயது சுமார் ஆறு.
அந்த வயதில் சுமார் பதினாறு பூரிகள் சாப்பிடுவேன். உறவினர்களே கூடத் திகைத்துப் போவார்கள்.
பாரதி சொல்வது போல், கம்பும் கேழ்வரகும், கோதுமையும், உடம்புக்குச் சக்தியூட்ட வல்லன.
ஆரம்ப சக்தியே, எனக்கு உணவில் இருந்து கிடைத்தது.
ஆனால், வெள்ளைக்காரர்கள் உணவையும் சீனத்து உணவையும், சுவை பார்க்கத் தொடங்கிய பிறகு, நாக்கு ருசியேறி ஊளைச் சதைப்போடத் தொடங்கிற்று. கொழுப்புச் சத்தும் ஏறி பத்துப் படியேறினால் மூச்சு வாங்குகிற நிலைமை வந்தது.
இப்போது என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. குறைந்தபட்ச உணவிலேயே திருப்தியடைய வேண்டியது இருக்கிறது.
அந்த உணவு, `புரதச் சத்து நிறைந்ததாக இருந்தால் போதும்’ என்றே நான் நினைக்கிறேன்.
உடம்பும் அளவோடிருக்கிறது.
ஆனால், மூளை `சென்சிடி’வாகி விட்டது.
எந்த ஒலியையும் அது எதிரொலிக்கிறது.
திருமூலரும், போகரும், பதார்த்தகுண சிந்தாமணியும் உணவுக்குச் சொல்லும் குணங்களை, இப்போது என்னால் உணர முடிகிறது.
கிழங்கு வகைகள், பட்டாணி, முட்டை, நண்டு, இறால்- இவற்றில் வாயு அதிகமா?
மத்தியானம் சாப்பிட்டால், மாலையிலே எதிரொலி கேட்கிறது.
மாமிசக் கொழுப்பும், உப்பும் ரத்தக் கொதிப்பை ஏற்றுமா?
இருபத்து நான்கு மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிறது.
புளியிலும், எலுமிச்சம் பழத்திலும் `திரவம்’ உண்டா?
அந்தத் திரவம் இப்போது கண்ணை மயக்குகிறது; தலையைச் சுற்றுகிறது.
ரத்த அணுக்களின் தாங்கும் சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்தோடு முடிந்து விடுகிறது.
வெள்ளை அணுக்களும், சிகப்பு அணுக்களும் பலமிழந்து, போராடக் கூடிய வல்லமையை அவை இழந்து விடுகின்றன.
இரண்டு மோட்டார் வைத்துத் தண்ணீர் இறைக்கும் கோயம்புத்தூர் கிணறு போல, ஏராளமான மாத்திரைகளைப் போட்டே அந்த ரத்த அணுக்களை உயிர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.
வானைத் தொடும் அளவுக்கு கால் பந்து அடித்த கால்கள், சாதாரணமாக நடந்து போவதற்குத் துணை தேடுகின்றன.
பெரிய ரதத்தைக் கூட மளமளவென்று இழுத்த கைகள், ஒரு வாளித் தண்ணீரைத் தூக்குவதற்குப் பயப்படுகின்றன.
ஏழு மாடி ஏறினாலும் வராத பெருமூச்சு, ஏழு படி ஏறினாலே வருகிறது.
எனக்கல்ல; வயதானவர்களுக்கு!
இருபது வருஷங்களுக்கு முன் அரசியலிலும், இலக்கியத்திலும், கலையிலும் என்னோடு ஈடுபட்ட சிலரை இப்போது பார்க்கிறேன்.
சிலர், `சர்க்கரை’ என்கிறார்கள். சிலர் `உப்பு’ என்கிறார்கள்.
சாப்பாட்டைக் கண்டால் பயப்படுகிறார்கள்; ஆஸ்பத்திரியைக் கண்டால், படுத்துக் கொள்கிறார்கள்; ஆளுக்கு ஒரு மூட்டை மாத்திரை சாப்பிடுகிறார்கள்.
`என்ன வாழ்க்கை இது? இப்படி வாழத்தான் வேண்டுமா?’ என்று அலுத்துக் கொள்கிறார்கள்.
போகம் ஒரு கட்டம் வரையில்தான்; `மறு கட்டம் ரோகம்’ என்பதை தேகம் நினைவுபடுத்துகிறது.
சிறு வயதில் திட்டமிட்டு வாழாத யாரும், இதற்குத் தப்ப முடிவதில்லை.
மேல் நாடுகளிலும், கீழ் நாடுகளிலும் ஒருவர் இன்னொருவரைக் கண்டால் முதலில் விசாரிப்பதே, `உடல் நிலை எப்படி?’ என்று தான்.
`நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்’ என்று பிரார்த்தித்தார், இராமலிங்க சுவாமிகள்.
நோயோடு நூறாண்டு வாழ்வதை விட, நோயின்றி ஐம்பது ஆண்டுகள் வாழ்வது போதுமானது.
`நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்றிருப்பதில் என்ன சுகம்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பக்தியில் கலந்திருக்கும் மருத்துவம், கண்டால், போல், நான், புத்தகங்கள், இப்போது, சிலர், அந்த, தின்று, பூரி, வயது, ஐம்பது, வயதில், பக்தியில், நல்ல, அவன், கலந்திருக்கும் , கொண்டு, அர்த்தமுள்ள, மருத்துவம், இந்துமதம், இப்படி, கிழங்கு, சாப்பிட, எனக்கு, சிறு, சுமார், கொள்கிறார்கள், கட்டம், நாடுகளிலும், என்கிறார்கள், அணுக்களும், உணவையும், என்னால், ரத்த, இருந்து, கிழத்தன்மை, சரீர, உண்டாகாது, சாதாரணமாக, பெருந்தீனி, ருசியை, அவமதிப்பு, உணவு, நாக்கு, பலம், வரும், இளமை, இருபது, நினைக்கிறார்கள், ஒருவன், இயற்கை, வியர்க்க, பெற்றோர், சிறந்த