அர்த்தமுள்ள இந்துமதம் - வழிகாட்டும் ஞான குரு
ஜோதிப் பிழம்பு போன்ற முகம்.
கறை படாத மருவில்லாத மேனி.
ஒரு காவி ஆடையிலேயே அத்தனை அழகும் பொங்கிப் பொலியும் அற்புத வடிவம்.
கறந்த பால் கறந்தபடி வைக்கப் பெற்ற தூய்மையான உள்ளம்.
இளம் பருவத்திலேயே முதிர்ந்த விவேகம்.
பருவ கால நிலைகளை மிகச் சுலபமாக வென்று விட்ட மனோதிடம்.
கங்கை பிரவாகம் போல் பொங்கிப் பொலியும் கருத்துக் கோவைகள்.
கல்லிலும், முள்ளிலும் நடந்து பழகிய காலணி இல்லாத கால்கள்.
கன்னியாகுமரி முதல் இமாசலத்துப் பத்திரிநாத் வரையிலே கால் நடையாக நடந்து சென்று களைப்போ, வலியோ அறியாத தெய்விக நிலை.
சந்தியா காலத்துப் புஷ்பங்களைப் போல், தான் மலர்ந்திருப்பது மற்றவர்களுக்காகவே என்னும் தியாக சீலம்.
வேம்பின் கசப்பும், சர்க்கரையின் இனிப்பும் நாக்குக்கு ஒன்றே போல் தோன்றும் பக்குவம். வள்ளுவன் கூறிய துறவறத்திற்கு ஒரு தெள்ளிய இலக்கணம்.
கலவையிலே மூலவர் இருக்கக் காஞ்சியில் இருக்கும் உற்சவ மூர்த்தி காசிப் பண்டிதர்களையும் வெல்லக் கூடிய திறமையாளர் என்பதை, அண்மையில் நான் உலக இந்து மாநாட்டில் கண்டேன்.
இந்து தர்மத்தை நிலை நாட்டிய ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் செய்த காஞ்சித் தலத்திலுள்ள பீடமே, இந்தியாவில் உள்ள மத பீடங்களில் எல்லாம் தூய்மையானது என்பதை நிரூபித்திருக்கிறது.
அரசியல் கலப்பற்ற சுத்தமான பீடம் அது என்பதாலே தான், அரசு பீடமே இறங்கி வந்து வணங்கியது.
இந்து தர்மத்தின் துறவிகள் மீது இழிமொழிகளும், பழிமொழிகளும் ஏராளமாக வந்து விழுந்திருக்கின்றன.
அவற்றிற்குக் காரணமானோர் சிலரும் இருந்தார்கள்; இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுத்து விடமுடியாது.
ஆனால், சனீஸ்வரனைப் பார்த்த கண்ணால் பரமேஸ்வரனைப் பார்க்கக் கூடாது.
`இரண்டும் ஈஸ்வரன் தானே’ என்று கேட்கக்கூடாது.
பக்தி மார்க்கத்தில் தம்மை மறந்த மெய் ஞானிகள் பலருண்டு.
அவர்களிலே வணங்கத்தக்க இருவரிலே ஒருவர் காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக அழிவில்லாமல் இயங்கும் ஒரு தருமத்திற்கு அவ்வப்போது விளக்கேற்றி வைக்கும் ஞானச் சுடர்களில் ஒருவர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள்.
ஜாதியின் பெயரால் அவரைப் புறக்கணிக்க முடியாது. அவர் ஜாதிகளைக் கடந்தவர். நீதியின் பெயரால் அவரை நெருங்கினால், அவர் நிர்மலமான சித்திரை வானம்.
காலடியில் பிறந்த ஆதி சங்கரரின் காலடிச் சுவடுகள் பிழையுறா வண்ணம் ஓரடி ஈரடி என்று ஒழுங்காக நடப்பவர், சுவாமிகள்.
சுயதர்மத்தை மனிதனுக்குப் போதிப்பதற்காகத் தனக்கென்று ஒரு தர்மத்தை வகுத்துக் கொண்டவர்.
தான் முழுமையாக நம்பும் மதத்தின் மீது எந்தத் தாக்குதல்கள் வீசப்பட்டாலும், இறைவனைப் போல அவற்றைத் தாங்கிக்கொண்டு தனது தர்மங்களை ஒழுங்கு நியதிகளோடு செய்து வருபவர்.
இத்தகைய பக்குவம் பெற்ற, புடம் போட்டு எடுக்கப்பட்ட தங்கங்களால் தான், இந்துமதம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இந்தியாவில் எல்லா மதங்களுக்குமே சம அந்தஸ்து உண்டு என்றாலும், இந்தியாவின் அஸ்திவாரம் இந்து தர்மமே. அந்த அஸ்திவாரத்திற்குப் பலமும் தெளிவான வடிவமும் கொடுத்தவர்கள் ஆதிசங்கரரும், ராமானுஜரும்.
அந்தப் பாரம்பரியத்தில் ஒரு தெய்விக தீபம், ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள்.
அவர் இந்து தர்மத்தின் ஜீவசக்தி. நடமாடும் தெய்வ வடிவம், வேத ஆகமங்களின் பிரதிபலிப்பு, காஞ்சி காமாட்சியின் இன்றைய தலைமகன்.
இந்த தர்ம பூமி மேலும் தழைத்தோங்க அந்த ஞான குருவே வழிகாட்டி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - வழிகாட்டும் ஞான குரு, புத்தகங்கள், இந்து, இந்துமதம், தான், சுவாமிகள், போல், ஸ்ரீ, வழிகாட்டும், ஜெயேந்திர, ஞான , குரு, அவர், அர்த்தமுள்ள, மீது, தர்மத்தின், வந்து, ஒருவர், இந்தியாவில், அந்த, காஞ்சி, பெயரால், பக்குவம், வடிவம், பொலியும், பொங்கிப், சிறந்த, பெற்ற, நடந்து, தர்மத்தை, என்பதை, நிலை, தெய்விக, பீடமே