அர்த்தமுள்ள இந்துமதம் - காம உணர்ச்சி
அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.
உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன.
நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது.
சரிந்துபோன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு, காமமே முதல் காரணமாக இருக்கிறது.
தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்களில் பலர், தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும், காமமே காரணமாக இருக்கிறது.
சராசரி மனித வாழ்வில் பசி, காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை.
கட்டுப்பாடாக அதைத் தவிர்த்தவர்களுக்குப் பெயரே ஞானிகள்.
உடல் வற்றிப்போய் காய்ந்த எலும்புக்கூடக் கிடைக்காமல், பசியோடு அலையும் ஆண் நாய் ஒன்று ஒரு பெண் நாயைக் கண்டவுடன் பசியையும் மறந்து, காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல் உண்டு.
வட மொழியில் `காமம்’ என்ற வார்த்தைக்கு, `பாலுணர்ச்சி’ என்பது மட்டுமல்லாமல், வேறு பல பொருள்களும் உண்டு.
ஆனால், பாலுணர்ச்சியை மையமாகக் கொண்டு, இந்துமதத் தத்துவங்களை ஆராயப் புகுந்தால், அதைத் தவிர்ப்பதற்கு, அது சொல்லும் வழிகள் ஏராளம்.
முதலில், சந்நியாசிகளில் ஒரு வகையினர் நிர்வாணமாக இருப்பதே, இந்த உணர்ச்சியைத் தவிர்க்கத்தான்.
`பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தைத் தான் பெற்றிருந்தால், பெண்களுக்குத் தன்மீது ஆசை வராது’ என்பதே அந்த நிர்வாணத்தின் நோக்கம்.
ஆடை, அணி மணி அலங்காரங்களினால் மூடப்பட்ட உடம்பு, சுருதியைத் தூண்டி விடுகிறது.
அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும், சவரம் செய்யப்பட்ட முகமும் பெண்களின் உணர்ச்சித் தந்தியை மீட்டி விடுகின்றன.
ஆகவே, அலங்கோலமான உருவத்தைச் செயற்கையாக தேடிக்கொள்வதே ஜடாமுடி தரிப்பதன் நோக்கம்.
அவர்கள் வெறும் கோவணத்தோடு இருப்பதற்கும் காரணம் அதுதான்.
அண்மையில் `ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ இயக்கம் அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியதும், அங்கு ஏற்படுத்தப்பட்ட ஆசிரமங்களில் ஒன்றில் ஒரு புது யாகத்தைத் தொடங்கினார்கள்.
சுமார் பன்னிரண்டு ஆண்களும் பெண்களும், `ஒரு ஆண் ஒரு பெண்’ என்று மாற்றி மாற்றி வட்டமாகத் தொடையளவு தண்ணீரில் நின்றார்கள்.
ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டார்கள்.
`ஒருவரது அங்கத்தை இன்னொருவர் பார்த்தாலும் தோளிலே கை போட்டுக் கொண்டாலும் உணர்ச்சி கிளர்ந்தெழாமல் அடக்கவேண்டும்’ என்பதே இந்த யாகத்தின் நோக்கம்.
`லைப்’ என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் இந்தப் படத்தை நான் பார்த்தேன்.
உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்போதே, காம வேகத்தைத் தவிர்ப்பதற்கு இந்து மதம் வழி காட்டுகிறது.
சகல உணர்வுகளையும், உறவுகளையும், துறந்து விட்டநிலைக்கு, `நிர்வாணம்’ என்பது பெயர்.
அந்த மகா நிர்வாணத்தை, இந்து தத்துவங்களில் இருந்தே பெளத்தம் எடுத்துக்கொண்டது.
இந்து மதமே உலகின் ஆதி மதம்.
`சந்நியாசம்’, `துறவு’ என்பவை அது உண்டாக்கியவையே.
அந்தத் துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும் என்பதால் பின்னால் தோன்றிய ஒவ்வொரு மதமும் அதனை மேற்கொண்டன.
உணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருள்களையும் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்களையும் விலக்கி, கடுங்குளிரிலும்கூட குளிர்ந்த நீரிலே நீராடி, காம உணர்வை அகற்றினர் இந்து ஞானிகள்.
ஆண் பெண் உறுப்புக்களுக்கு அவர்கள் `ஜனனேந்திரியங்கள்’ என்று பெயர் கொடுத்தார்கள்.
சில உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுப்பதற்காக மட்டுமே இந்த அங்கங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.
அதில் ஏற்படுகின்ற சுகத்தை `அற்ப சுகம்’ என்றார்கள்.
தமிழுங்கூட அதைச் `சிற்றின்பம்’ என்றே அழைத்தது.
மனைவி என்பவள் தன் கணவனின் காமச் சூட்டைத் தணிப்பதற்காக வரும் வெறும் கருவியல்ல.
அதற்கு மேற்பட்ட சமூக சம்பிரதாயங்களே அவளுக்கு அதிகம்.
ஆணைவிடப் பெண்ணுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணர்ச்சி உண்டு.
ஆனால், பத்து மடங்கு அடக்கம் உண்டு.
இது இயற்கையாக அவளுக்கு வந்ததல்ல.
இந்து மதம் காலகாலங்களாகப் பெண்ணை அப்படிப் புடம் போட்டு எடுத்தது.
இழிந்த குலப்பெண்கள், இதன் மறு எல்லைக்குப் போவதுண்டு.
அந்த இரண்டு வகைப் பெண்களையும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றும், சமண இலக்கியங்களில் ஒன்றுமான `சீவக சிந்தாமணி’ காட்டுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - காம உணர்ச்சி, உணர்ச்சி, இந்து, புத்தகங்கள், உண்டு, மதம், அந்த, இந்துமதம், அர்த்தமுள்ள, நோக்கம், என்பது, வெறும், உடம்பு, ஒருவர், மாற்றி, காட்டுகிறது, மடங்கு, அவளுக்கு, பொருள்களையும், உணவுப், பெயர், உணர்ச்சியைத், உணர்வு, காமமே, உடல், இருந்தே, காமம், ஒன்று, காரணமாக, இருக்கிறது, தவிர்ப்பதற்கு, சிறந்த, பெண், ஞானிகள், அதைத், என்பதே