அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதாபிமானம்
அன்புள்ளவன் தெய்வம்.
கருணையுள்ளவன் தெய்வம்.
கற்புள்ளவள் தெய்வம்.
`பண்புள்ளவள் தெய்வம்’ என்று மனித நிலையின் மேம்பாடுகளைத் தெய்வ நிலைகளாகக் குறித்தார்கள்.
அதனால்தான், கீழ்த்தர உணர்வுகளிலிருந்து மனிதனை மேல்நோக்கிக் கொண்டு வருவதற்கு `மதம்’ என்ற ஒரு அமைப்பு தேவைப்பட்டது.
அந்த வகையில், முதலில் தோன்றிய மதம் இந்துமதமே.
சராசரிக் கடமைகளில் இருந்து மனிதனை அப்புறப்படுத்தாமல், அவன் இருக்கும் இடத்தையே கோவில் ஆக்க முடியும் என்று காட்டியது இந்து மதம்.
மழையை வரவழைப்பவளும், வாழை மட்டையை எரியச் செய்பவளும் மட்டுமே பத்தினியல்ல.
கணவன் கண்களில் மழை வராமலும், அவன் உள்ளத்தில் கனல் எரியாமலும் பார்த்துக் கொள்பவளே பத்தினி.
அத்தகைய பத்தினி இருக்குமிடம் குடிசையாயினும் அது கோயிலாகி விடுகிறது.
வெறும் கையில் விபூதியை வரவழைப்பவன் ஞானியல்ல; வெறும் உள்ளத்தில் விவேகத்தை வளர்த்துக் கொள்பவனே ஞானி.
வளர்த்த விவேகத்தைப் பயனுள்ள வகையில் விநியோகிப்பவனே விஞ்ஞானி.
இவர்கள் ஆண்டவன் வகுத்த சாலையையே அறியக் கூடியவர்கள்; எந்தப் பயணத்தையும் நிர்ணயிக்கக் கூடியவர்கள்.
அதனால்தான், மற்ற ஆத்மாக்களைவிட அவர்கள் மகாத்மாக்களாகக் காட்சியளிக்கிறார்கள்.
ஆகவே, இருக்கும் இடத்தைக் கோயிலாக்குவது மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தை உருவாக்குவது மதாபிமானம்.
அந்த வகையில், மற்ற மதத்திற்கு இல்லாத தனித் தன்மை இந்து மதத்திற்கு உண்டு.
`இத்தனை தடவை கோயிலுக்குப் போய், இத்தனை முறை நீராடினால்தான் புண்ணியம்’ என்று எந்தத் தத்துவமும் சொல்லவில்லை.
அவை நம்முடைய ஆத்ம திருப்திக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை.
குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள்.
மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள்.
அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள்.
தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது.
சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது.
குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.
எல்லோரும் சங்கராசாரிய சுவாமிகளாகி விட்டால், உபதேசத்திற்கு என்ன மரியாதை?
ஆனால், வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம்.
மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம்.
உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம்.
ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம்.
எறும்பைக்கூட மிதிக்காத அளவுக்குக் கொல்லாமை; இருப்பதைப் பகிர்ந்து கொடுக்குமளவுக்கு வள்ளல் தன்மை; மனிதாபிமானத்தை இப்படி வளர்க்கிறது இந்து மதம்.
இயலாமையிலும் திருடாமையைப் போதிக்கிறது இந்துமதம்.
மந்திரிக்குப் பதவி போனால் வீட்டைக் காலி செய்கிறான்.
மனிதன் பதவி போனால் உலகைக் காலி செய்கிறான்.
ஆனால், உயிருள்ளவரை ஒவ்வொரு மனிதனும் மனிதப் பதவியில் இருக்கிறான்.
மந்திரிப் பதவி தவறு செய்தால் விசாரணைக் கமிஷன் போடலாம்; மனிதப் பதவி தவறு செய்தால் மகேஸ்வரன்தான் விசாரிக்க வேண்டும்.
அந்த நீதிமன்றத்தில் மனிதன் கைகட்டி நிற்காமல் இருக்க, இகலோகத்திலேயே அவனது தஸ்தாவேஜுகளைச் சரி செய்து கொடுப்பதே இந்துமதம்.
அது சொல்லும் மனிதாபிமானத்தின் சுருக்கம் என்ன?
நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு; தீமை செய்தவனை மறந்துவிடு.
நீ முடிந்தால் நன்மை செய், தீமை செய்யாதே. ஒவ்வொரு மனிதனும் இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் பகையும் நோயும் இல்லாத சமுதாயம் உருவாகும்.
அந்தச் சமுதாயத்தை உருவாக்குவதே இந்துமதத்தின் நோக்கம்.
இன்று வரையிலே நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு உண்மை `ஒரு நல்ல இந்து நல்ல மனிதனாகத்தான் இருப்பான்’ என்பதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மனிதாபிமானம், இந்துமதம், புத்தகங்கள், அந்த, பதவி, இந்து, மனிதாபிமானம், மதம், வகையில், தெய்வம், அர்த்தமுள்ள, மனிதனை, செய்கிறான், காலி, போனால், என்ன, நிலையில், மனிதன், செய்தால், நன்மை, தீமை, நல்ல, குளிப்பாட்டி, தவறு, மனிதனும், மனிதப், ஒவ்வொரு, மனிதாபிமானத்தை, கோவில், உள்ளத்தில், இருக்கும், அவன், சிறந்த, அதனால்தான், பத்தினி, வெறும், தன்மை, ஏற்படுத்திக், இல்லாத, மதத்திற்கு, கூடியவர்கள், மற்ற, முடியாதவர்கள்