அர்த்தமுள்ள இந்துமதம் - மரத்தைத் தண்ணீரில் போடு
“கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.
எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்தில் உருட்டித்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.
அதேமாதிரி நம் துன்பங்களையெல்லாம் `ஞானம்’ என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரித் துக்கம் பரமலேசாகி விடும்.”
லெளகீகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்டு விட்ட ஒரு சந்நியாசி, லெளகீக வாழ்வில் துக்கத்தைக் குறைப்பதற்குச் சொல்லும் அற்புத வழி அது.
இந்துமதம் லெளகீகத்தையே முதற்படியாகக் கொண்டது என்பதற்கு சாட்சி.
வாழ்வைப் பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழம்பித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு இந்து மதம் ஒரு ஆறுதல் சொல்கிறது.
சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது, ஞானஒளி பெற்று விடுகிறது.
இக வாழ்க்கையைச் சுகமாக்கித் தர, பிற மதங்கள் செய்யாத முயற்சியை இந்து மதம் செய்கிறது.
துக்கமே இல்லாத சந்நியாசிகள்கூடத் துக்கத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.
மரணமே இல்லாத பரமாத்மாகூட மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.
எங்கே எது இல்லை? காட்டில் மட்டுந்தானா முள் இருக்கிறது? அது ரோட்டிலும் இருக்கிறது! பார்த்து நடப்பவன் காட்டில்கூட நடந்துவிட முடியும்; பாராமல் நடப்பவன் ரோட்டில்கூட நடக்க முடியாது.
கவலை என்பது ஒரு வலை.
தனக்குத்தானே அதை வீசிக் கொள்கிறவர்கள் உண்டு.
பல நேரங்களில் ஆண்டவனும் அதை வீசுவதுண்டு.
வலைக்குத் தப்பிய மீன்கள், நீர் வற்றிவிட்டால், மரணத்துக்குத் தப்புவதில்லை.
காலம்தான் வித்தியாசம். சில முந்திக் கொள்கின்றன. சில பிந்திக் கொள்கின்றன.
ஒவ்வொருவன் கண்ணுக்கும், அடுத்தவன் சந்தோஷமாக இருப்பது போலவே தோன்றுகிறது.
அவன் பார்க்கும் கண்ணாடி நல்ல கண்ணாடியாக இருந்தால்தானே, அவன் முகத்தைக் காட்டும்.
வண்டியின் மீது மற்றவர்கள் பாரத்தை ஏற்றுக்கிறார்கள். வண்டி தானே ஏற்றிக்கொள்வதில்லை.
மனித மனமோ தானே சுமைகளை ஏற்றிக் கொள்கிறது.
ஏற்றிய சுமையை எளிமைப்படுத்த என்ன வழி?
`ஞானம் எனும் தண்ணீரை நிறையக் குடி’ என்கிறார்கள் காஞ்சிப் பெரியவர்கள்.
`ஞானம் ஞானம்’ என்கிறோமே அது என்ன?
சட்டையைப் போடும்போது, கிழிந்த சட்டை என்று தெரிந்தே போட்டுக் கொள்வது; பிறகு `ஐயோ, இது கிழிந்திருக்கிறதே’ என்று அங்கலாய்க்காமல் இருப்பது; அதன் பெயரே ஞானம்.
`இது இவ்வளவுதான்; இப்படித்தான்’ என்று தேறுவதும் தெளிவதும் ஞானம்.
`எது எப்படியிருந்தால் என்ன; இறைவன் விட்ட வழி, என்றிருப்பது ஞானம்.
குடிசைகளே நிரம்பிய காட்டில்கூட ஏதாவது ஒரு ஓட்டு வீடு இருக்கிறல்லவா?
துயரங்களே நிரம்பியே மனதிற்கும் ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - மரத்தைத் தண்ணீரில் போடு, புத்தகங்கள், இந்துமதம், தண்ணீரில், ஞானம், என்ன, மரத்தைத், அர்த்தமுள்ள, விடுகிறது, போடு, இருப்பது, காட்டில்கூட, கொள்கின்றன, `ஞானம், ஏதாவது, நடப்பவன், தானே, அவன், இந்து, பெரியவர்கள், காஞ்சிப், சிறந்த, குடம், துக்கம், இல்லாத, மதம், விட்ட, இருக்கிறது