அர்த்தமுள்ள இந்துமதம் - நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி!
நீச்சுநிலை காணாமல் நிற்கும்நாள் எந்நாளோ!
இப்படி, சாவை அழைக்கவில்லை தாயுமானவர்;
எல்லாம் கடந்த பேரின்ப நிலையை அழைக்கிறார்.
சர்வாங்கமும் ஒருமுகமாகி இன்ப துன்பங்களைக் கடந்து நிற்கும் நிலையே பேரின்ப நிலையாகும்.
புலன்களும் பொறிகளும் மனிதனுக்குள் உள்ளவையே.
அவற்றைக் கட்டுப்படுத்த மனிதனால் முடியும் என்பது நமது ஞானிகளின் வாதம்.
சமயத் துறையின் மூலம் அதனைச் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் காட்டினார்கள்.
சராசரி மனிதன் புற உணர்ச்சிகளால் அகவுணர்ச்சி பாதிக்கப்படுகிறான்.
அகவுணர்ச்சியின் பாதிப்பால் புறத் தோற்றத்திலும் மாறுதலடைகிறான்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
என்றார் வள்ளுவர்.
இப்படி மனத்தால் உடலும் உடலால் மனமும் பாதிக்கப்படுவதிலிருந்து நீங்கி, பேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ளத்தைக் காண விழைகிறார் தாயுமானவர்.
துன்பங்களிலிருந்து விடுபட, நமது சித்தர்களும் ஞானிகளும் சொல்லிப்போன வழிகள் ஏராளம்.
பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை.
அந்தப் பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை, பயிற்சியின் மூலமும் அனுபவங்களின் மூலமும் வரும்.
நான் முன் கட்டுரைகளில் சொன்னபடி ஒவ்வொரு துன்பத்திற்கும் மூலமிருக்கிறது.
ஏதோ ஒன்றின் தொடர்ச்சியே அது.
அது போன ஜென்மத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்; இப்பிறப்பில், ஒரு கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு எதிரொலியாகவும் இருக்கலாம்.
காலிலே ஒரு முள் குத்துவதற்குக் கூட உனக்கு விதிக்கப்பட்ட விதி காரணமாக இருக்கிறது.
ஆகவே துன்பம் எத்தகையதாயினும், அது நீயே உண்டாக்கிக் கொண்டதாயினும், உன்னை உண்டாக்கும்படி தூண்டிய சக்தி ஒன்றிருக்கிறது.
அந்த சக்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் தருகிறது.
“எல்லாத் துன்பங்களுக்கும் விதி காரணமென்றால் நிலையானதும் நிரந்தரமானதுமான அந்த விதி, பிரார்த்தனையின் மூலம் எப்படி மாறிவிடும்!” என்று ஒருவர் கேட்கிறார்.
ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை அணை கட்டி நிறுத்துவதுபோல், பிரார்த்தனை துயரங்களை நிறுத்துகிறது.
இயற்கையாகவே, அது ஒரு மனச் சாந்தியை உண்டாக்குகிறது. துன்பம் ஓரளவு குறைந்தாலும், பிரார்த்தனை பலனுள்ளதாகத் தோன்றுகிறது.
நீ நம்பிக்கை வைக்கின்ற டாக்டர் மருந்துக்குப் பதிலாக வெறும் தண்ணீரையே ஊசி மூலம் ஏற்றினாலும் நோய் குறைந்துவிட்டது போல உனக்குத் தோன்றுகிறது.
அது தோன்றுவதுதான் முக்கியம்.
அது தோன்றுவதற்கு நம்பிக்கைதான் பிரதானம்.
மருந்து பாதி, மன நம்பிக்கை பாதி!
பிரார்த்தனை பாதி, நம்பிக்கை பாதி!
நம்பிக்கையோடு பிரார்த்தித்தால், விதியின் வேகம் குறைந்து விட்டதாக உனக்கே தோன்றுகிறது.
விரோதித்து நின்ற விதி, ஒத்துழைப்பதாகவும் தோன்றுகிறது.
`கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்று, ஒரு வரியில் சொல்லி வைத்தார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
நம்பிக்கையே வெற்றிக்கும் நிம்மதிக்கும் அடிப்படை.
ஆதி மனிதன், கடலைக்கண்டு பயந்தான்.
அடுத்த மனிதன், கொஞ்ச தூரம் கடலுக்குள் நடந்து பார்த்தான்.
அவனுக்கு அடுத்தவன், நீந்திப் பார்த்தான்.
இன்னொருவன் கட்டையைப் பிடித்துக் கொண்டு பயணம் போனான்.
கட்டை, படகு ஆயிற்று; படகு கப்பலாயிற்று; பயணம் சுலபமாயிற்று.
கடலும் கடக்கக்கூடியதே என்ற நம்பிக்கை வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி! , புத்தகங்கள், பேரின்ப, விதி, பாதி, நம்பிக்கை, தோன்றுகிறது, நெஞ்சுக்கு, பிரார்த்தனை, மூலம், சந்நிதி, ஆண்டவன், அர்த்தமுள்ள, இந்துமதம், மனிதன், நிம்மதி, அந்த, துன்பம், பார்த்தான், படகு, பயணம், நமது, மூச்சற்ற, பேச்சு, சிறந்த, இப்படி, தாயுமானவர், மூலமும், காட்டும், முடியும், இருக்கலாம்