அர்த்தமுள்ள இந்துமதம் - சோதனையும் வேதனையும்
பெரும்பாலான கடிதங்களில் வேதனையும், சோதனையும், விம்மலும் தொனிக்கின்றன.
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான் என்பதை அறியமுடியாத, பக்குவமற்ற இளம் உள்ளங்கள், தங்கள் ஏக்கத்தை வெளியிட்டிருக்கின்றன.
சில கடிதங்கள் திகைப்பளிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, வடஆற்காடு திருப்பத்தூரிலிருந்து ஒரு சகோதரி, தனக்கு வேண்டிய வேறு ஒருவரது காதல் கவலையை வெளியிட்டிருக்கிறார்.
அந்தக் காதல், நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
ஒரு பெண் தனது பெரியப்பாவின் மகனைக் காதலிக்கிறாளாம்.
இந்துக்களின் அழுத்தமான பண்பாட்டின்படி ரத்தபந்த சகோதரனாகிய ஒருவனை அவள் காதலிக்கக்கூடாதுதான் என்றும், ஆனால் எப்படியோ இருவருக்கும் அன்பு அரும்பிவிட்டதென்றும், இது பூர்வஜென்மத் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என்றும், அவர் தெரிவிக்கிறார்.
இந்துக்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத கெட்ட கனவு, தீய நினைவு என்றே நான் இதைக் குறிப்பிடுவேன்.
“அந்த ஒருத்தி, ஒருவனை மனப்பூர்வமாகக் காதலித்துவிட்டதால் வேறொருவனை அவள் திருமணம் செய்துகொள்வது அவளது கற்பியல்பிற்குக் களங்கமல்லவா?” என்று அவர் கேட்கிறார்.
நான் அப்படி நினைக்கவில்லை.
ரத்த பந்தத்தை உணர்ந்துகொள்ளாத நினைவு காதலாகாது.
ஆகவே, அவள் வேறு ஒருவனை மணந்து கொள்வது தவறாகாது.
இந்துக்களின் உறவு முறைகள் மிகவும் கண்டிப்பானவை, அர்த்தமுள்ளவை. அதிலே தொய்வோ மாறுதலோ இதுவரை ஏற்பட்டதில்லை.
பங்காளி உறவும், மாமன் மைத்துனன் உறவும் வேறு வேறானவை.
அவை ரத்தத்தை அனுசரித்தே உண்டாக்கப்பட்டவை.
ஆகவே, பண்புகெட்ட நினைவிலிருந்து மீண்டும் வேறு திசையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒழுக்கத்திற்கு உயர்வே தவிர தவறாகாது என்பதை அந்தச் சகோதரிக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னொரு நண்பர் மகுடஞ்சாவடி, அ.தாழைரிலிருந்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“என் தாய் மாமனுக்கு ஆறு பெண்கள். அவர்களில் ஒருத்தியை நான் மனமார விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். எங்கள் காதலைத் தங்கள் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், `சரீரத்தின் தாளம் அல்ல; ஆத்மாவின் ராகம்.’ தாங்கள் குறிப்பிடும் நற்குடியைச் சேர்ந்தவள். அதைவிட மேலாக, நைந்துபோன உறவை மீண்டும் ஏற்படுத்த, என் தாயே அப்பெண்ணை மருமகளாக்கப் பெரிதும் ஆவலாய் உள்ளார். ஆனால், என் சோதனை என் தந்தையிடம்தான் ஆரம்பிக்கிறது. என் தந்தை, அவருக்கும் என் மாமாவிற்கும் முன்பு ஏற்பட்ட மனஸ்தாபத்தைக் காரணமாக வைத்து, என் மாமாவின் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்க மறுக்கிறார். அதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் என் மாமா வீட்டிற்குப் பக்கத்து வீட்டிலேயே ஒரு பெண்ணை எனக்குத் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். அவர் பார்க்கும் பெண்ணும், தங்கள் கூற்றுப்படி `நற்குடி’ப் பெண்தான். நானும் கண்டு பேசியிருக்கிறேன்… நல்ல அழகு, நல்ல குணம், நல்ல ஒழுக்கம் நிறைந்தவள்தான்.
நீங்கள் கூறுகிறீர்கள், “பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் கேட்க வேண்டும்; அவர்கள் பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள்” என்று. என்னைப் பொறுத்தவரை என் தாயும் தந்தையும் இருவேறு பெண்களை எனக்குப் பேசி முடிக்க விரும்புகின்றார்கள். அந்த இரு பெண்களுமே, நீங்கள் எத்தகைய பெண்களைச் சிபாரிசு செய்கிறீர்களோ அத்தனை தகுதிகளும் உடையவர்களே. ஆனால் என் மனம் என் மாமாவின் பெண்ணைத்தான் நாடுகிறது. என் தந்தையோ அதற்குச் சிறிதும் இணங்கத் தயாராய் இல்லை. அவரை மீறவும் எனக்குத் தைரியம் போதவில்லை. அம்மாவைப் புறக்கணிக்கவும் என் மனம் இடந்தரவில்லை. நான் அழுகிறேன்; குழம்புகிறேன்; துடிக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் தங்கள் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
`நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டிற்கும் நடுவே
இறைவனின் சிரிப்பு!’
எனவே, எனது இந்தக் கடிதத்திற்குத் தாங்கள் தயவு செய்து கொஞ்சம் மதிப்புக் கொடுத்து, என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவும். நான் எவ்வாறு நடந்து கொண்டால் பிரச்சனை தீரும் என்பதற்கு வழிகாட்டித் தாங்கள் பதிலளித்தீர்களானால் எனக்கு வழி காட்டிய `கண்ணனாக’வே தங்களைப் பூஜிப்பேன் எனக் கூறி என் கடிதத்தை முடிக்கிறேன்.’
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - சோதனையும் வேதனையும், நான், புத்தகங்கள், வேறு, தங்கள், வேதனையும், சோதனையும், அவள், அவர், தாங்கள், ஒருவனை, நல்ல, இந்துமதம், அர்த்தமுள்ள, திருமணம், உறவும், மீண்டும், என்னை, விரும்புகிறேன், எனக்குத், பேசி, மனம், நீங்கள், முடிக்க, தவறாகாது, மாமாவின், செய்து, என்பதை, காதல், கடிதங்கள், எனக்கு, சிறந்த, பெண், இந்துக்களின், ஆகவே, அந்த, நினைவு, என்றும், கொள்வது