பட்டினப்பாலை - பத்துப்பாட்டு

குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்து |
கடைத்தெருவில் ஒத்திசையின் எதிரொலி. அழகியர் வெறியாடிய நடனத்தின்போது குழலின் ஒலி அகவலோசைப் பாடல்போல் அகவிற்று. யாழின் ஒலி வண்டிசைப்பது போல் இருந்தது. முழவின் ஓசை அதிர்ந்தது. முரசின் ஓசை ஏதோ சொல்வதுபோல் இருந்தது. இந்த விழா முழக்கத்தின் ஒலி கடைத்தெருவிலும் முழங்கிற்று.
பலவகைக் கொடிகளின் காட்சி
மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய மலரணி வாயிற் பலர்தொழ கொடியும |
160 |
கோயிலில் கொடி - தெய்வத்தை வைத்து மலர்ப்பூசை செய்யும் கோயில் வாயிலில் வழிபாடு செய்யும் பலரும் போற்றிப் புகழும் கொடி பறந்தது. தெய்வ உருவம் எழுதப்பட்ட எழுப்பட்ட கொடி பறக்க விடப்பட்ட கம்பத்தை இக்காலத்தில் துவஸ்தம்பம் என்கின்றனர்.
வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று உருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக் கூழுடைக் கொழுமஞ்சிகைத் தாழுடைத் தண்பணியத்து வாலரிசிப் பலிசிதறிப் |
165 |
பாகுகுத்த பசுமெழுக்கிற் காழூன்றிய கவிகிடுகின் மேலூன்றிய துகிற்கொடியும் |
அற-மறச் சாலைகளில் கொடிகள் - காட்டாற்று வெள்ளம் போனபின் காய்ந்து கிடக்கும் வெண்மணலின் ஓரத்தில் பேக்கரும்பின் பூ வெள்ளை வெளேரென்று பூத்துக் கிடப்பது போல் சோறு படைக்கும் அறச்சாலைமாடத்தில் (‘மஞ்சிகை’ யில்) கொடி கட்டப்பட்டிருந்தது. அக் கொடிக்கம்பம் நடப்பட்டிருக்கும் இடத்தில் பலகாரமும், வெண்பொங்கலும் படையலாக வைக்கப் பட்டிருந்தன. அந்த இடம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருந்தது. கம்பத்தின் ஓரத்தில் வேல் (‘காழ்’) நட்டுக் கேடயம் மாட்டப் பட்டிருந்தது. இங்கும் கொடி பறந்தது. இவை படைவீரர்களுக்கும், காவல்-தொழில் புரிவோருக்கும் சோறு வழங்கும் அறச்சாலை எனக் காட்டும் கொடிகள்.
பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் |
170 |
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும் |
பட்டிமன்றக் கொடி - ‘ஆணை’ என்பது வாய்மை. ‘கேள்வி’ என்பது கேட்டுக் கேட்டு வளர்த்துக்கொண்ட அறிவு. வழிவழியாக வரும் வாய்மைக் கருத்துகளைக் கேட்டுக் கேட்டு மெய்ப்பொருள் காட்சியில் துறைபோய பெருமக்கள் தான் ‘தொல்லாணை நல்லாசிரியர்’ (Ancient philosophers). இவர்கள் தெளிவு பெறுவதற்காகக் கருத்துக்களால் முரண்பட்டு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகக் கொடி கட்டப்பட்டிருந்தது.
வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை மிசைச்கூம்பி னசைச்கொடியும் |
175 |
கடலில் கப்பலின் கொடி பறக்கும் - முளையில் கட்டப்பட்டிருக்கும் களிறு போலப் புகார்த் துறைமுகத்தில் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாவாயின் உச்சியில் கொடி கட்டப்பட்டிருந்தது. வெளில் = விலங்குகளைக் கயிற்றில் தொடுத்துக் கட்டிவைக்கும் முளைக்-குச்சி, இளக்கும் = இணக்கும் > இணைக்கும், துவன்று = பின்னிப் பிணைந்து, மிசை = உயரம், நசை = விருப்பம் \ நாவாய்க்-கப்பலின் உச்சியில் பறக்கும் விருப்பம் தரும் கொடி.
மீந்தடிந்து விடக்கறுத்து ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில் மணற்குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவின் நறவுநொடைக் கொடியோடு |
180 |
மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம் எனக் காட்டும் கொடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் பறக்கும் கள்ளுக்கடையின் கொடி - பெரிய மீன்களை வெட்டி, அதன் நச்சுப்-பகுதிகளை நீக்கிவிட்டு மீன்கறியைப் பொறித்துத் தந்தனர். அந்த மணல்மேட்டு முற்றத்தில் மீன் கவிச்சல் போக மலர்களைத் தூவி வைத்திருந்தனர். அங்கே நறவுக்கள் விற்கும் கடை இருந்தது. பலர் உள்ளே செல்லும் அந்தக் கள்ளுக்கடையின் கதவில் “பலியாவீர்’ என்று காட்டும் அடையாளக் குறி பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களில் விற்பனையை அறிவிக்கும் தனித்தனிக் கொடிகள் பறந்தன.
பிறபிறவு நனிவிரைஇப் பல்வே றுருவிற் பதாகை நீழல் செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் |
வளம் பல நிறைந்த தெருக்கள்
செல்லா நல்லிசை யுமரர் காப்பின் |
இந்தப் பதாகை நிழலில்தான் தேவர் உலகம் போன்ற ஊராகக் காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுக நகரம் விளங்கியது. இந்தக் கொடிகளேயன்றி பிறபிற கொடிகளும் பல்வேறு உருவங்களில் பறந்து வெயில் நுழையாத நிழலை உண்டாக்கியது. அமர் < அமரர் = விரும்புவோர், தே < தேவர் = இனியவர். புகார் அமரர் காக்கும் நகரமாக விளங்கியது. அதன் நற்பெயர் என்றென்றும் விலகிச் செல்வதில்லை.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் | 185 |
காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்துங் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயுனும். |
190 |
ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் |
கடல்-வழி வந்த குதிரை, வண்டியில் வந்த மிளகு-மூட்டை, வடமலையில் பிறந்த மணி, குடமலையில் பிறந்த சந்தனம், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை-காவிரிப் படுகை விளைச்சல்கள், ஈழத்து உணவு, காழகத்து (கடாரம்-பர்மா)ச் செல்வம் இப்படிப் பல சிறியனவும், பெரியனவுமாக மண்டிக்கிடப்பதுதான் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த துறைமுகத் தெருக்கள் - போர்க்குதிரை - கடல் வழியே இறக்குமதி செய்யப்பட்டவை, மிளகு மூட்டை - தரைவழியே வண்டிகளில் வந்தவை, மணி, பொன் - வடமலைப் பகுதியிலிருந்து வந்தவை, சந்தனம் - மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை, அகில் - மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை, முத்து - பாண்டியரின் தென்கடலில் பிறந்தது, பவளம் - சோழ நாட்டுக் குணகடலில் பிறந்தது, வாரி (விளைச்சல் வருவாய்) - கங்கைச் சமவெளியிலிருந்து வந்தவை, பயன் (விளைச்சலை விற்று வந்த பயன்) - காவிரிப் படுகை விளைச்சலை விற்றுப் பெற்றவை, உணவு (பதப்படுத்தப் பட்டவை) - ஈழத்திலிருந்து வந்தவை, கலையாக்கச் செல்வம் - காழகம் = கடாரம் = பர்மாவிலிருந்து வந்தவை, தலைமயங்கல் = ஒழுங்குபடுத்தப் படாமல் இடம்மாறிக் கிடத்தல். இப்படிப்பட்ட கிடைத்தற்கரிய பொருள்களும் விலைமதிப்பு மிக்க பெரும் பொருள்களும் புகார் நகரின் வளமாக, அங்குமிங்குமாக எங்கும் ஒன்றோடொன்று மயங்கி முறைப்படுத்தப் படாமல் கிடந்தன.
வணிகர்களின் வாழ்க்கை முறை
நீர்நாப் பண்ணு நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிதுதுஞ்சிக் |
195 |
கிளை கலித்துப் பகைபேணாது வலைஞர்முன்றில் மீன்பிறழவும் விலைஞர்குரம்பை மாவீண்டவும் |
வலைஞர் முற்றத்தில் மீன், விலைஞர் பட்டிகளில் குதிரை பெருகிக் கிடக்கும் நிம்மதியான வாழ்க்கை. நீருக்கிடையே நாவாயிலும் தூங்கலாம். நிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தூங்கலாம். என்று விரும்பிய இடத்தில் இன்பமாக நாட்டு மக்கள் உறங்கினர். சுற்றம் செழித்தது. பகையைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. வலைவீசுவோரின் நீர் முற்றத்தில் மீன்கள் மிகுதியாகப் புரண்டன. குதிரை விற்போரின் குடிசைப் பகுதியில் நாவாயில் வந்து இறங்கிய குதிரைகள் பெருகின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, கொடி, வந்தவை, வந்த, கொடிகள், இலக்கியங்கள், பிறந்த, காட்டும், அந்த, முற்றத்தில், குடமலையில், கட்டப்பட்டிருந்தது, பறக்கும், பட்டினப்பாலை, பத்துப்பாட்டு, குதிரை, காவிரிப், மீன், முத்து, பவளம், சந்தனம், கங்கை, கடல், மிளகு, மூட்டை, செல்வம், விளைச்சலை, பயன், படாமல், பொருள்களும், தூங்கலாம், வாழ்க்கை, பிறந்தது, பிறந்தவை, கடாரம், உணவு, தென்கடல், மேற்கிலுள்ள, சேரரின், படுகை, தேவர், இடத்தில், சோறு, எனக், என்பது, கேட்டுக், ஓரத்தில், கிடக்கும், சங்க, போல், செய்யும், பறந்தது, கேட்டு, கப்பலின், தெருக்கள், பதாகை, விளங்கியது, அமரர், புகார், கள்ளுக்கடையின், காவிரிப்பூம்பட்டினத்தில், உச்சியில், விருப்பம், விற்குமிடம், நறவுக்கள், வடமலைப்