மலைபடுகடாம் - பத்துப்பாட்டு

தொய்யாது வித்திய துளர்படு துடவை ஐயவி யமன்ற வெண்காற் செறுவின் மையென விரிந்தன நீணறு நெய்தல் செய்யாப் பாவை வளர்ந்துகவின் முற்றிக் |
125 |
காயங் கொண்டன இஞ்சிமா விருந்து வயவுப்பிடி முழந்தாள் கடுப்பக் குழிதொறும் விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென ஊழ்மல ரொழிமுகை உயர்முகந் தோயத் |
130 |
துறுகல் சுற்றிய சோலை வாழை |
ஐயவி – வெண்சிறு கடுகு கொல்லை நிலத்தில் தொய்வின்றி புழுதி பட்ட தோட்டத்தில் விளைந்திருந்தது. நெய்தல் – வெண்ணிற நீர் தேங்கிய வயலில் நெய்தல் பூத்திருந்தது. இஞ்சி – பாவை என்பது மரப்பாச்சிப் பொம்மை. செய்யாப்பாவை என்பது இஞ்சி. இது கிழங்கு-உடம்பு பெற்று விளைந்திருந்தது. கவலை – வள்ளிக்கிழங்கு யானையின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதிபோலப் பருத்து நிலத்தடியில் விழுந்திருந்தது. சோலை-வாழை (மலைவாழை) – யானையின் முகத்தில் வேல்கள் பாய்ந்திருப்பது போல் குத்துக் கல்லைச் சுற்றிலும் வளர்ந்திருந்தது.
இறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்கு ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறைக் கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற் காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல் |
135 |
மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்து அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி |
இறுகு – இறுங்குச் சோளக் கதிரின் குலை முதிர்ந்திருந்தது.. உந்தூழ் – உழுந்து பயன்தரும் நிலையில் வெடித்து உதிரச் சுழன்றது. நாவல் – பருவமில்லாத காலத்திலும் பயன்தந்து காற்றால் உதிர்ந்தது. உயவை – கருவிளை என்றும், காக்கட்டான் என்றும் சொல்லப்படும் உயவைக் கொடி நீர் ஊறிப் படர்ந்திருந்தது. கூவை – கூவம்பழம் நூற்றுக் கணக்கில் பழுத்திருந்தன. தேமா – சதைப்பிடிப்புள்ள இனிப்பு மாம்பழம் உண்ணும்படி வழிப்போக்கர்களைத் தடுத்து நிறுத்தியது. ஆசினி – சிறுபலாக் காய்கள் அரலைக் கற்கள்போல் புண்பட்டு உதிர்ந்து கிடந்தன.
விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் | 140 |
குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக் கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக் கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே |
விரலால் அடிக்கும் ஆகுளிப் பறைபோல் ஆந்தை ஒலிக்கும் உயர்ந்த மலையிலுள்ள பலாமரக் கிளைகளில் காய்களும் பழங்களும் குலுங்கின. தலையிலும் தோளிலும், முழவையும் மற்ற இசைக் கருவிகளையும் பாணர் கூட்டம் சுமப்பது போல அம் மரங்கள் பலாப் பழங்களைத் தாங்க முடியாமல் சுமந்து வணங்கிக்கொண்டு நின்றன.
கானவர் குடியின் இயல்பு
தீயி னன்ன ஒண்செங் காந்தள் | 145 |
தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து அறியா தெடுத்த புன்புறச் சேவல் ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் |
150 |
மணஇல் கமழு மாமலைச் சாரல் |
காந்தள் பூ சிவப்பு நிறத்தில் பூத்திருந்தது. அதனைப் புலால்-கறித்துண்டு என்று கருதி எடுத்துச் சென்ற கழுகு உண்ணாமல் உதிர்த்தது. அவை அகன்ற பாறைகளில் விழுந்து நெருப்புப் பிழம்புகள் போலக் கிடந்தன. மணலில் உதிர்ந்தவை மணம் பரப்பிக்கொண்டிருந்தன. முருகனை வேண்டி வெறியாடிய களத்தில் புலவுத் துண்டுகள் ஆங்காங்கே கிடக்கும். அதுபோலக் காந்தள் பூக்கள் பாறைமேல் பூத்துக் கிடந்தன.
தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர் சிறுகட் பன்றிப் பழுதுளிப் போக்கிப் பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத் தூவொடு மலிந்த காய கானவர் |
155 |
செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் |
கானவர் சிறுகுடியில் தேனும் கிழங்கும் பெறலாம். ஆங்காங்கே கானவர் வாழும் வளம் மிக்க சிறுகுடிகள் இருந்தன. அங்குள்ள கானவர் யானைத் தந்தத்தில் இருபுறமும் உறி கட்டி உணவுப்பண்ட வட்டில்களை (வட்டில் = கூடை) தம் இருப்பிடங்களுக்குச் சுமந்து சென்றனர். தேன், கிழங்கு, புலால் முதலானவை அவர்கள் சுமந்துசென்ற உணவுப் பொருள்கள். காட்டுப் பன்றிக் கறியும் அதில் இருந்தது. அந்த உணவுப் பொருள்களை அங்குச் சென்றவர் தம் சுற்றத்துடன் சேர்ந்து உண்ணும் அளவுக்கு அவர்கள் விருந்தாகப் படைப்பர்.
வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து
அன்றவ ணசைஇ அற்சேர்ந் தல்கிக் கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி |
160 |
அலங்குகழை நரலும் ஆரிப் படுகர்ச் சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி நோனாச் செருவின் வலம்படு நோன்றாள் மான விறல்வேள் வயிரிய மெனினே |
கானவர் பாக்கத்தில் அன்று இரவு தங்கியிருந்துவிட்டு மறுநாள் ஆரியப் படுகர் வாழும் பாக்கம் செல்லுங்கள். எரிபோல் தழைத்துச் சிவந்திருக்கும் செயலையந் தளிர்களை மாலையாகத் தொடுத்து சுற்றத்தார் அனைவரும் அணிந்துகொண்டு செல்லுங்கள். மூங்கில் அடர்ந்து அடைந்துகிடக்கும் அப் பாக்கத்துக்குச் சென்றபின், நாங்கள் மான விறல் வேல் நன்னனைப் பார்க்க வந்த பாணர்கள் என்று சொன்னவுடனேயே..
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, கானவர், இலக்கியங்கள், காந்தள், கிடந்தன, நெய்தல், பத்துப்பாட்டு, மலைபடுகடாம், சுமந்து, என்றும், ஆசினி, கூவை, புலால், உணவுப், செல்லுங்கள், வாழும், ஆங்காங்கே, நாவல், னன்ன, கிழங்கு, கடுப்பக், கவலை, விருந்து, பாவை, சங்க, ஐயவி, வாழை, விளைந்திருந்தது, என்பது, யானையின், இஞ்சி, பூத்திருந்தது, நீர், உந்தூழ்